சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொகை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொகை
Updated on
2 min read

திருவாரூரில் சிவபெருமானின் படைப்பில் வந்த அழகியல் உச்சமாக திகழும் சுந்தரமூர்த்தி சுவாமிகள், பரவையாரை மணந்து இனிது வாழும் நாளில் தேவாசிரியன் மண்டபத்தில் சிவனடியார்கள் குழுமி இருப்பதைக் கண்டு "இவர்களுக்கு அடியாராகும் நாள் எந்நாளோ?"என்று இறைவனை வேண்டினார்.

இறைவன், “தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்று அடியெடுத்து கொடுத்து அடியார்களைப் பாடப் பணித்தார். அதன்படி திருத்தொண்டர் தொகை பாடினார். அவர்களில் கூட்டம் கூட்டமாக ஒன்பது தொகையடியார்களையும் தனித்தனியாக அறுபத்து மூவரையும் ஏற்ற அடைமொழிகளை கொண்டு அடியார்கள் பற்றிய ஆதாரங்களைத் தந்துள்ளார்.

“நினைப்பவர் மனம் கோயிலா கொண்டவன்" என்பார் நாவுக்கரசர். இறைவன் தம்மை இடைவிடாது நினைக்கும் அடியார் உள்ளங்களையே கோயிலாக கொண்டுள்ளான். காடவர்க்கோன் என்ற அரசர் காஞ்சிபுரத்தில் கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம், சுற்றும் மதில் சுவர் என்று ஒரு கோயிலுக்கு தேவையானவை இடம்பெறும்படி பார்த்து பார்த்து கற்கோயில் ஒன்றை பல லட்சம் செலவு செய்து கட்டினார். கும்பாபிஷேகத் துக்கும் நாள் குறித்தார். குடமுழுக்கு தினத்தில், தான் கட்டிய கோயிலுக்கு எழுந்தருள வேண்டும் என்று இறைவனை நோக்கி இறைஞ்சினார்.

இறைவன் அரசர் எழுப்பியிருந்த பிரம்மாண்டமான கற்கோயிலுக்கு செல்லாமல், திருநின்றவூரில் பூசலார் நாயனார் எழுப்பியிருந்த மனக் கோயிலுக்கு எழுந்தருளினார். நாடாளும் மன்னர் கட்டிய கற்கோயிலை விட நாயனார் பூசலார் கட்டிய மனக்கோயில் மகத்தானது. உன்னதமானது. உள்ளன்போடு உயர்வாக கட்டப்பட்டது. பரமன் பண கோயிலை காட்டிலும் மனக்கோயிலையே அதிகம் விரும்புகிறார் என்பதற்கு பூசலார் நாயனார் வரலாறு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

இதனை உணர்த்துவதற்காக திருமூலர், “உள்ளம் பெருங்கோயில் ஊண் உடம்பு ஆலயம் வள்ளல் பிறனார்க்கு வாய் கோபுர வாசல் தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் கள்ள புலனைந்தும் காளா மணி விளக்கே" என்று பாடியுள்ளார். "இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கும் தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே" என்பார் தமிழ் மூதாட்டி அவ்வை யார். இறைவன் ஒளி வடிவானவன் அவன் மனிதனின் ஒவ்வொரு அசைவையும் பார்த்தபடியே பேரொளியாய் பரவி கிடக்கிறான்.

அவனிடம் நம் மனதை மறைக்க வேண்டிய தேவையில்லை. எனவே காதல் முதல் பணம் வரை எல்லாவற்றையும் இறைவனிடம் வெளிப்படையாக சொல்லி ஒளிவு மறைவில்லாத திறந்த வெளி வாழ்வு வாழ்ந்தார் சுந்தரர். தமிழில் தோன்றிய சமுதாயப் புரட்சியாளர் வாழ்வையும் வரலாற்றையும் பதிவு செய்ய வேண்டும் என கருதி திருத்தொண்டர் தொகையை பாடினார். அத்தகைய சிறப்புக்குரிய திருத்தொண்ட தொகையில் இடம்பெறும் தொண்டர்களில் சிவனடி அடைந்த சிறப்புக் குரியவர்கள் அறுபத்து மூவராவர்.

அவர்களில் ஆடவர்கள் அறுபதின்மர், மகளிர் மூவர். அந்தணரும், அரசினரும், ஆண்டியும், அரசனும், இறைவனிடத்தில் ஒன்றாகவே தோன்றினர். பல பிரிவினரும் உள்ளனர். அரசர், அமைச்சர், படைத்தலைவர், போர் புரிவோர், அறவோர், வேதியர், யோகியர், செக்கர், வணிகர், வண்ணார், புலையர், மீனவர், பாணர், நெசவாளர், குயவர், வேடர், வேளாளர் பிறரும் உள்ளனர். குரு, லிங்கம், சங்கமம் ஆகிய வழிகளைப் பற்றி அடியார்கள் வீடுபேறு அடைந்துள்ளனர். குருவை வழிபட்டவர்கள் முப்பதொருவர், சங்கமம் என்னும் அடியார்களை வழிபட்டவர்கள் இருபதின்மர் ஆவர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in