

மயிலாடுதுறை மாவட்டம், வில்லியநல்லூர் கிராமத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத நீலமேகப் பெருமாள் கோயிலில் செப்டம்பர் 15-ம் தேதி சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா, வில்லியநல்லூர் கிராமம், காவிரி நதிக்கு வடக்கில், கொள்ளிடம் ஆற்றுக்கு தெற்கில் அமைந்துள்ளது. குத்தாலத்தில் இருந்து 8 கிமீ தொலைவில் உள்ள இத்தலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ நீலமேக பெருமாள் கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக அறியப்படுகிறது.
திருமணஞ்சேரியில் நடைபெறவிருந்த சிவபெருமான் - பார்வதிதேவி திருமண வைபவத்துக்கு முன்னதாக சிவபெருமான், வில்லியநல்லூர் தலத்தில் உள்ள ஹோம குளக்கரையில், மகாவிஷ்ணு, பிரம்மதேவர் முன்னிலையில் யாகம் செய்தார். விநாயகப் பெருமான் அந்த யாகத்தை நிகழ்த்திக் கொடுத்ததால், இவ்வூரில் உள்ள சிவாலயத்தில் (சிவகாம சுந்தரி அம்பாள் சமேத காளீஸ்வரர் கோயில்) இரட்டை விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது.
இங்குள்ள சதுர்முக சண்டிகேஸ்வரர் வழக்கமான இடத்தில் இல்லாமல் நந்தியம்பெருமான் அருகே, அம்பாள் சந்நிதிக்கு மிக அருகில் இருந்து (பிரம்மஸ்தானம்) அருள்பாலிக்கிறார். பிரம்மதேவர் இக்கோயிலில் வழிபட்டதால் இத்தல ஈசன் பிரம்மபுரீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். மகாவிஷ்ணு இத்தலத்தில் வீற்றிருந்து சிவபெருமானின் யாகத்தை தரிசித்ததாக ஐதீகம். இதையடுத்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ நீலமேக பெருமாளுக்கு கோயில் எழுப்பப்பட்டது.
இக்கோயிலில் செப்டம்பர் 15-ம் தேதி காலை 8.30 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் துலா லக்னத்தில் மகா சம்ப்ரோக்ஷண வைபவம் நடைபெற உள்ளது. அன்று மாலை 4 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், மாலை 6.30 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி திருவீதி புறப்பாடும் நடைபெற உள்ளன. சம்ப்ரோக்ஷண வைபவத்துக்கான பூர்வாங்க பூஜைகள் செப். 13-ம் தேதி மாலை தொடங்க உள்ளன. முதல்கால யாகசாலை பூஜை 14-ம் தேதி காலை தொடங்க உள்ளது. கூடுதல் தகவல்களைப் பெற 9942629394, 9443051661 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
- sundararaman.k@hindutamil.co.in