

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள உசுப்பூர் கைலாசநாதர் கோயில், செல்வச் செழிப்பு அருளும் திருத்தலமாக போற்றப்படுகிறது. சிறுத்தொண்ட நாயனார் எழுப்பிய இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் அமுதுபடையல் திருவிழா முக்கியத்துவம் பெறுகிறது.
மாமன்னர்கள் ஈசனுக்கு கோயில்கள் கட்டியுள்ளதைப் போல, சிவனடியார்களும் சிவபெருமானுக்கு கோயில் கள் எழுப்பியுள்ளனர். சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் 63 நாயன்மார்களுள் ஒருவரான சிறுத்தொண்ட நாயனார், இரண்டாம் புலிகேசியை வெற்றி கொண்ட சேனாதிபதியாக நரசிம்ம பல்லவரிடம் பணியாற்றினார். பரஞ்சோதி என்ற இயற்பெயர் கொண்ட இவர், காவிரி வளநாட்டில் திருச்செங்காட்டங்குடியில் மாமாத்தியர் குலத்தில் தோன்றியவர்.
ஆயுர்வேதக் கலை, வடநூற்கலை, படைக்கலத் தொழில், யானையேற்றம், குதிரையேற்றம் ஆகியவற்றிலும் வல்லவர். எந்நேரமும் சிவபெருமானை எண்ணி, ஈசனடியார்க்குப் பணிசெய்தலை இயல்பாகக் கொண்டவர். அர்ஜுனன் பாசுபதம் பெற்ற இடம் திருவேட்களம். உசுப்பூர் கிராமத்தில் அடர்த்தியான மூங்கில் காடுகளில் தான் அர்ஜுனன் பாசுபதம் வேண்டி ஈசனை நோக்கி தவம் புரிந்தார்.
அர்ஜுனனின் பக்தி உண்மையா என்பதை சிவபெருமானும், பார்வதிதேவியும் சோதிக்க எண்ணினர். இருவரும் வேடர்கள் வடிவில் அர்ஜுனன் தவம் செய்யும் இடத்துக்கு எழுந்தருளினர். அர்ஜுனனின் தவத்தைக் கலைக்க சிவபெருமான் பன்றியை (வராகம்) ஏவினார். அவரே பன்றி மீது அம்பை எய்த, அப்பன்றி ‘அர்ஜுனா அபயம்’ என்று அர்ஜுனனின் காலடியில் விழுந்தது.
வேடர்கள் உருவில் வந்திருப்பது யார் என்பதை அறியாத அர்ஜுனன், ஈசனுடன் போரிட்டார், இருவரும் போரிட்ட இடம் சிவாரி என்றும் சிவபுரி என்றும் அழைக்கப்படுகிறது. உடனே பரமன் அர்ஜுனனை விண்ணை நோக்கி வீசி எறிந்தார். சுழன்றபடியே மேலே சென்ற அர்ஜுனன் கீழே வரும்போது உமையாள் தாயாக மாறி அவரை இரு கைகளாலும் ஏந்தி பிடித்தார். இருவரும் தாங்கள் யார் என்பதை அர்ஜுனனுக்கு உணர்த்தினர்.
பிறகு ‘பரமனே’ என்று அர்ஜுனன் உணர்ச்சி வயப் பட்டு கூற, திருவேட்களம் சென்று அங்கு பாசுபதத்தை இருவரும் அர்ஜுனனுக்கு வழங்கினர். இந்த அற்புத நிகழ்வு நிகழ்ந்த இடத்தில் பரமனுக்கு கோயில் அமைக்க வேண்டும் என்ற நோக்கில் கைலாசநாதர் கோயிலை சிறுதொண்ட நாயனார் அமைத்தார்.
பன்றியை உசுப்பிவிட்டதால் இந்த ஊரின் பெயர் உசுப்பூர் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோயிலில் பூவராக சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் அருள்பாலிக்கிறார். சிவன் கோயிலில் பெருமாள் சந்நிதி இருப்பது அபூர்வம். மகாவிஷ்ணுவின் அவதாரமான பன்றியை உசுப்பி விட்டதால் இங்கு பூவராகவ பெருமாள் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.
உசுப்பூர் சிவன் கோயில் தெருவில் கல்யாண சுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீகைலாசநாதர் கோயில் உள்ளது. கோயில் எதிரில் என்றுமே நீர் வற்றாத சிவ தீர்த்தம் உள்ளது. கோயிலுக்கு ராஜகோபுரம் கிடையாது. இந்த கோயிலின் வெளிப்புறத்தில் உள்ள கொடிமரத்தைத் தாண்டி உள்ளே சென்றால் மகா மண்டபத்துக்கு வலது புறம் தெற்கு நோக்கி அமைந்துள்ள கல்யாண சுந்தரி அம்பாள் சந்நிதியை தரிசிக்கலாம். அர்த்த மண்டபத்தின் முன் இடது பக்கம் ஆட்கொண்டார், வலதுபக்கம் உய்யக்கொண்டார், இரு துவார பாலகர்களும் கம்பீரமாய் காட்சி தர, உள்ளே விநாயகப் பெருமாள் அருள்பாலிக்கிறார்.
அதையடுத்து கிழக்கு நோக்கிய கருவறையில் கைலாசநாதர் வட்டபீடத்தில் லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, சண்டிகேஸ்வரர், சிவ துர்கை அருள்பாலிக்கின்றனர். சித்திரை மாதம் நடைபெறும் அமுது படையல் திருவிழா, பல நூறு ஆண்டுகளாக இக்கோயிலில் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
குழந்தைப் பேறு இல்லாதவர்கள் சிவ தீர்த்தத்தில் நீராடி விட்டு ஈரத்துணியுடன் இங்கிருக்கும் பரமனை வேண்டி மகாமண்டபத்தில் சப்த ரிஷிகளாக அமர்ந்திருக்கும் சிவனார் வேடமிட்டவர்களிடம் அன்னம் கேட்க வேண்டும். கோயிலில் சிறப்பு மூலிகை மருந்து வழங்கப்படும். குழந்தைப் பெறு கிட்டியதும் இக்கோயிலுக்கு வந்து அவர்கள் நேர்த்திக் கடன் செலுத்துவர். கல்யாண சுந்தரி அம்பாள் திருமணத் தடை நீக்கும் அம்பாளாக போற்றப்படுகிறார்.
பூவராகவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு சுவாதி நட்சத்திர தினத்தில் திருமஞ்சனம் செய்து வழிபாடு செய்தால் கடன் தொல்லைகள் முற்றிலுமாக நீங்கும் என்பது ஐதீகம். செல்வச் செழிப்பு அருளும் கைலாசநாதருக்கு மாசி மாத சிவராத்திரி, ஐப்பசி மாத அன்னாபிஷேக தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. சிறுத்தொண்ட நாயனார் கட்டிய திருத்தலம் என்பதால் இங்கு பக்தர்கள் அன்னதானத்துக்கு முக்கியத்துவம் தருகின்றனர்.
- pbg1972pbg@gmail.com
அமைவிடம்: சிதம்பரத்தில் இருந்து சீர்காழி - மயிலாடுதுறை செல்லும் பேருந்தில் அம்மாபேட்டை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கிழக்கு பக்கம் உள்ள சாலையில் அரை கிலோமீட்டர் நடந்தால் கோயிலை அடையலாம்.