

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் அமைந்துள்ள வெயிலுகந்த விநாயகர் கோயில், சூரியனுக்கு சாப விமோசனம் அளித்த தலமாகப் போற்றப்படுகிறது. இத்தலத்தில் விநாயகப் பெருமானுக்கு திருக்கல்யாணம், பிரம்மோற்சவம், பூக்குழி இறங்குதல் என்ற 10 நாள் உற்சவம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. ஒருசமயம் சிவபெருமானின் சாபத்தைப் பெற்ற சூரியன், மிகவும் மனம் வருந்தி, அதற்கான பரிகாரத்தை தேட முயற்சிகள் மேற்கொண்டார்.
அப்போது வன்னி மந்தார வனம் என்று அழைக்கப்பட்ட கடற்கரைத் தலமான உப்பூருக்கு வருகை புரிந்து விநாயகப் பெருமானை வழிபட்டார். தனது சாபம் நீங்கப் பெறும் தலமாக இத்தலம் விளங்கும் என்பதை உணர்ந்த சூரியன், இங்கேயே அமர்ந்து நீண்ட நாட்கள் தவம் புரிந்தார். வெய்யோனின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்ட கணபதி, சிவபெருமான் அளித்த சாபத்தில் இருந்து சூரியனை காத்தருளினார். இந்த அபூர்வ செயலால் இத்தல மூலவர் கணபதிக்கு வெயிலுகந்த விநாயகர் என்கிற காரணப்பெயர் ஏற்பட்டது.
உப்பூர் புராணம் என்ற தலபுராண வரலாற்று நூலில் இத்தலத்துக்கு ஆதியில் லவணபுரம் என்ற பெயர் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. லவணம் என்பது வடமொழியில் உப்பைக் குறிப்பதாகும். இரண்டு யுகங்களுக்கு முன்னர் இலங்கை வேந்தன் ராவணனால் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்த சீதாபிராட்டியை மீட்டு வர, ராமபிரான் சேதுக்கரை செல்லும் வழியில் இத்தல விநாயகரை வழிபட்டதாக கூறப்படுகிறது.
அதனால் கணபதியின் அருளாசியையும் பெற்றுச் சென்று, எடுத்த காரியத்தை வெற்றி கரமாக முடித்தார். அது போல, தொன்று தொட்டு பல நூற்றாண்டுகளாக காசியாத்திரை கிளம்பும் யாத்ரீகர்கள் இத்தல கணபதியை வணங்கி தேவிபட்டினம், திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை, ராமேஸ்வரம் ஆகிய தலங்களில் வணங்கிய பின் அக்னி தீர்த்த கட்டத்தில் நீராடி அங்குள்ள மண்ணை சேகரித்துக் கொள்வர்.
இது போன்ற புண்ணிய காரியத்துக்கு செல்லும் யாத்ரீகர்கள் பலர் உப்பூர் வந்து தங்கிச் செல்வர். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக கி.பி 1800-ல் தேவகோட்டையைச் சேர்ந்த அழகப்ப செட்டியார் என்ற வணிகர் அன்னதான சத்திரம் ஒன்றைக்கட்டி, கோயிலில் இருபக்கமும் பெரிய ஊருணிகளை வெட்டினார். சத்திரத்துக்கு வரும் யாத்ரீகர்களுக்கு நீர், உணவு, தங்குமிடம் அனைத்தையும் இலவசமாக அளித்தார்.
இதனால், இது உப்பூர் சத்திரம் என பெயரிடப்பட்டது. கி.பி 1862-ல் வன்னி மரத்தடியில் எழுந்தருளியிருந்த விநாயகருக்கு கல்மேடை கட்டி அதில் பிரதிஷ்டை செய்து நித்ய பூஜைகள் நடத்தி வர ஏற்பாடுகள் செய்தார். இவரைத் தொடர்ந்து, அழ. அரு.இராமசாமி செட்டியார் அர்த்த மண்டபம், மகா மண்டபம் திருப்பணிகள் செய்து உள்சுற்றில் பரிவார தேவதை சந்நிதிகளை அமைத்தார்.
இக்கோயில் திருப்பணிகளை சேது நாட்டை ஆண்ட ராஜா பாஸ்கர சேதுபதி (காலம் கி.பி 1889-1903), அள.அருணாச்சலம் செட்டியார், அள.சிதம்பரம் செட்டியார், அழ.அரு.இராம.அருணாசலம் செட்டியார் ஆகியோர் மேற்கொண்டனர். அழ.அரு.இராம. அருணாசலம் செட்டியார், கோயிலை மேலும் புனரமைத்து 10.02.1905-ல் மகா கும்பாபிஷேகம் செய்து முடித்தார். அன்று முதல் தினசரி 4 கால பூசை சிறப்பாக நடைபெற்று வருகிறது.
கால சந்தி, சாயரட்சை பூஜை பணிகளை ராமநாதபுர சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினரும், உச்சி காலம், அர்த்தசாம பூஜை பணிகளை ஜமீன்தார் குடும்பத்தாரும் செய்து வருகின்றனர். சொர்ணநாதபுரம் பழனியப்பன் என்பவர் இத்தல மூலவரின் பெருமைகள் குறித்து வெயிலுகந்த விநாயகர் பதிகம் என்ற செய்யுள் நூலை இயற்றி பாடியுள்ளார்.
வைகாசி மாதம் திருவோண நட்சத்திர நாளில் வருடாபிஷேகம் நடைபெறுகிறது. 1970-ல் காஞ்சி மகா பெரியவர் தனது தல யாத்திரையின் போது உப்பூரில் மூன்று நாட்கள் தங்கியிருந்து விநாயகப் பெருமானை வணங்கிச் சென்றார். கோயிலில் இருந்து 1 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வங்காள விரிகுடா கடலில் நீராடிய பின் பித்ருதோஷம் நீங்க, பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து விநாயகரை வணங்கிச் செல்வது வழக்கம். அதன்படி, ஆடி, தை, புரட்டாசி அமாவாசை நாட்களில் திரளான பக்தர்கள் இங்கு கூடுவர்.
ஆண்டுதோறும் ஆவணி மாதம் 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறும். பத்து நாட்களும் சுவாமி புறப்பாடு நடைபெறும். எட்டாம் நாளில் சித்தி, புத்தி, விநாயகப் பெருமான் திருக்கல்யாண வைபவம், 9-ம் நாளில் திருத்தேரோட்டம் நடைபெறும். 10-ம் நாளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடலில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.
அது சமயம் விரதமிருக்கும் பக்தர்கள் நீராடியவுடன் உப்பூர் கோயில் வாசலில் பூக்குழி இறங்கி, நேராக ஈர ஆடையுடன் கோயிலுக்குள் வந்து மூலவரை தரிசித்து அருள் பிரசாதம் பெற்றுக் கொள்வது வழக்கம். மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது. மூலவர் விமானம் வேசர வடிவில் உள்ளது. காசி விஸ்வநாதர், விசாலாட்சி, தட்சிணா மூர்த்தி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிர மணியர், கால பைரவர், தில்லைக்கூத்தர், சனீஸ்வரர் ஆகிய பரிவார தேவதை சந்நிதிகள் உள்ளன.
அமைவிடம்: கிழக்குக் கடற்கரை சாலையில் தொண்டி - தேவிபட்டினம் மார்க்கத்தில் 15 கிமீ தொலைவிலும், ராமநாதபுரம் - எஸ்.பி.பட்டணம் சாலையில் 20 கிமீ தொலைவிலும், ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் - உப்பூர் சாலையில் 10 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.