

எடுத்த காரியம் எதுவென்றாலும் அது வெற்றியடைய வேண்டி மூலப்பொருளாம் கணபதியை உளமார வேண்டிய பின்னரே அதை தொடங்கும் வழக்கம் தமிழ் மண்ணில் ஒரு மரபாகவே இருந்து வருகிறது. கி.பி 6-ம் நூற்றாண்டில் தமிழகத்தில் கணபதி வழிபாடு தொடங்கி இன்று அனைத்து இடங்களிலும் நடைபெற்று வருகிறது.
இந்தியாவிலேயே மிகப் பெரிய விநாயகர் சிலை, தெலங்கானாவின் நாகர் கர்நூல் மாவட்டத்தில் திம்மாஜிபேட்டா அவன்ச்சா அருகே விவசாய நிலத்தில் அமைந்துள்ளது. மேற்கு சாளக்கியரால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த உருவம் 7.62 மீட்டர் உயரம் உடையது. அடியிலிருந்து 9.144 மீட்டர்.
12-ம் நூற்றாண்டில் பெரிய கிரானைட் பாறையில் செதுக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்திக்கு மிக பிரபலமான இடம் புனே. இங்கு மன்னர் சிவாஜி காலத்திலிருந்தே கணபதி வழிபாடு உள்ளது. இந்துக்கள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்த திலகர் காலத்தில் விநாயகர் சதுர்த்தி தெருவிழாவாகவும் திருவிழாவாகவும் மாறியது.
மும்பையில் 131 வருடங்களாக தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி விழா நடக்கிறது. 1893-ம் ஆண்டு தொடங்கிய இப்பழக்கம் வருடா வருடம் ஒரு கருப் பொருள் சார்ந்து பெரிய விழாவாக கொண்டாடப் படுகிறது. மும்பையில் மட்டும் 12,000 விநாயகர் பந்தல்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றில் 6,000 பெரிய விநாயகர் சிலைகள் இடம் பெறுகின்றன. ஒரு சமயம் சிலையின் உயரம் 32 அடியாக இருந்தது. பிறகு 18 அடியாக குறைக்கப்பட்டது.
மும்பை மாதுங்கா கவுட் சரஸ்வத் பிராமின் சேவா மண்டலால் வைக்கப்படும் விநாயகர்தான் உலகின் மிக பணக்கார பந்தல் சிலை. இதன் மதிப்பு ரூ.300 கோடி ரூபாய்க்கும் அதிகம். இந்த சிலையில் 69 கிலோ தங்கம், 360 கிலோ வெள்ளி அணிவிக்கப்படுகிறது. இந்த வருட மதிப்பு இன்னமும் கூடுதலாக இருக்கும்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் மற்றொரு நகரான நாசிக்கில் 1,200 பந்தல்கள் அமைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. உத்தராகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள கைலாசு பகுதியில் உள்ள மக்கள் அங்குள்ள டோடிடால் ஏரி அருகே விநாயகர் பிறந்ததாக நம்புகிறார்கள்.
இதனால் இந்த பகுதி குடியிருப்புவாசிகள் விநாயகர் சதுர்த்தியை மிகச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். கோபமான சிவன் விநாயகரின் தலையை வெட்டிய இடம் முண்டுகட்டியா என்கின்றனர். சிவன் பார்வதி திருமணம் நடந்ததாக கூறப்படும் திரிகு நாராயணன் கோயிலும் முண்டுகட்டியா இரண்டும் ருத்ரப்பிரயாகை அருகில் தான் உள்ளன.
மங்களூர், ஹூப்பள்ளி, பெல்காம், பெங்களுர் மற்றும் கர்நாடகாவின் கடற்கரை சார்ந்த இடங்களில் பந்தல்கள் அமைத்து இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கர்நாடகாவில் மங்களூர் கடற்கரையோரத்தை ஒட்டி ஏராளமான அற்புத விநாயகர் கோயில்கள் உள்ளன. முரடேஷ்வர் அருகில் இடகுஞ்சி மகா விநாயகர் கோயில் உள்ளது. ஷரவு மகா கணபதி கோயில் மங்களூர் நகரத்திலேயே உள்ளது. அனேகுண்டே ஸ்ரீ விநாயகர் குந்தாபுராவின் கடற்கரை நகத்தில் உள்ளார். இவை தவிர கும்பாசி விநாயகர், ஹட்டியங்காடி சித்தி விநாயகர், கோகர்ணா மகா கணபதி ஆகியோரும் கண்டிப்பாக தரிசிக்கப் பட வேண்டியவர்கள்.
இடகுஞ்சி மகாகணபதியை தரிசிக்க வருடா வருடம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் வருகின்றனர். ஒரு சில பிரிவினருக்கு இவர் குலதெய்வமாக உள்ளார். கர்நாடக தலித் சமுதாயத்தினர் திருமண சம்பந்தம் பேசி முடித்த பின், நல்லபடியாக திருமணம் நடக்க இந்த மகா கணபதியின் ஆசி கேட்டு வருகின்றனர். இந்த கோயிலில் பக்தர்களுக்கு வெட்டிவேர் அளிக்கப்படுகிறது.
கோகர்ணா மகா கணபதியை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். இந்த விநாயகர் சிலையின் தலையில் ஒரு வடுவைக் காணலாம். ராவணன் தன் கையிலிருந்த லிங்கத்தை வழிப்போக்கனாக எதிரில் வந்த சிறுவன் வேடத்தில் இருந்த கணபதியிடம் கொடுக்க அவர் ஒரு கட்டத்தில் ராவணன் வரும் முன் வேண்டுமென்றே சிலையை கீழே வைக்க அதனால் கடும் கோபமடைந்த ராவணன் அருகில் கிடந்த ஒரு கல்லை எடுத்து ஓடும் கணபதி மீது வீச அது கணபதியின் தலையில் வடுவை உருவாக்கி விடுகிறது. அதனை இங்கு காணலாம்.