

புதுக்கோட்டை மாவட்டம், வலையபட்டி நகரத்தாருக்கு சொந்தமான மலையாண்டி சுவாமி கோயிலில் செப்டம்பர் 8-ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) 7-வது மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மலையாண்டி சுவாமி, வடுவகிர்விழியாள் உடனாய வலம்புரிநாத சுவாமி கோயில் கட்டப்பட்டு 132 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன.
முதலில் விநாயகர் மட்டுமே கோயில் கொண்டுள்ள சிறுகூரைக் கூடம் இருந்தது. பின்னர் நகரத்தாரின் முழு முயற்சியால் குன்றின் மீது கற்கள் ஏற்றப்பட்டு, கோயில் எழுப்பப்பட்டது. புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஆட்சி உரிமை பெற்ற திவான் சேஷய்யா சாஸ்திரிகள், வலையபட்டிக்கு வருகை புரிந்து நகரத்தாரின் திருப்பணிகளை நேரில் கண்டார்.
பிடாரம்பட்டி கிராமத்தில் மூங்கிற்புதரில் இருந்த சிவலிங்க மூர்த்தி (வலம்புரிநாதர்), இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டார். புதிதாக செதுக்கப்பட்ட வடுவகிர்விழியாள் அம்பாள் விக்கிரகமும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நந்தன ஆண்டு தை 19-ம் தேதி (1892) இக்கோயிலில் முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது 7-வது மகா கும்பாபிஷேகம் செப்டம்பர் 8-ம் தேதி காலை 7-35 முதல் 8-30 மணிக்குள் நடைபெற உள்ளது.
இவ்விழாவுக்கான யாகசாலை பூஜைகள், செப். 5-ம் தேதி காலை 9.30 மணி முதல் தொடங்குகின்றன. அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமங்கள், ஆறு கால யாகசாலை பூஜைகள் பிள்ளையார்பட்டி சிவ கே.பிச்சைக்குருக்கள் முன்னிலையில் நடைபெற உள்ளன. நிகழ்ச்சி குறித்த விபரங்களை அறிந்து கொள்ள 9944020202 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.