

இறைவனே மெய்ப்பொருளாகவும், குருவாகவும் இருந்து நம்மை இயக்குகிறார். நம்மில் நிலையாக உள்ள மெய்ப்பொருளை தனக்குள் கண்டவர்களில் ஒருவர் சதாசிவ பிரம்மேந்திரர். கடுந்துறவு, நுண்ணறிவு, அருந்தவம் ஆகியவற்றைக் கொண்ட ஜீவன் முக்தராக இருந்து, தமது நுண்ணிய அறிவால், பரமனை அறிந்து, இவ்வுலக வாழ்க்கையை நிறைவுள்ளதாகச் செய்தார்.
பதினெட்டாம் நூற்றாண்டில், சோமசுந்தர அவதானியாருக்கும், பார்வதிஅம்மையாருக்கும் தவப்புதல்வனாய் சதாசிவேந்திரர் மதுரையில் அவதரித்தார். சிறுவயதில் சிவராமகிருஷ்ணர் என்ற இயற்பெயருடன் விளங்கிய சதாசிவர், பிழையற்ற கல்வியறிவு பெற்றார். பிற்காலத்தில் பொருள் நிறைவுடன் நூல்கள் எழுதவேண்டிய அளவுக்கு கற்றறிந்தார்.
இளம்வயதில் சிவராமகிருஷ்ணருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவரது உறவினர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு தக்க விருந்து தயார் செய்வதில் பார்வதி அம்மையார் மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். குருகுலத்திலிருந்து வழக்கம் போல் உணவுநேரத்துக்கு மிகுந்த பசியுடன் சிவராமகிருஷ்ணர் வந்தார். வழக்கமான நேரத்துக்கு சாப்பாடு தயாராக இருக்கவில்லை. சிவராமகிருஷ்ணர் அன்னையிடம் தன் பசியை சொல்லி ஏன் தாமதம் எனக் கேட்டார்.
“உனது திருமணத்துக்கு தான்ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தாமதம் நிகழ்வது சகஜம்தான்”என்று தாயார் சொன்ன பதிலில் சிவராம கிருஷ்ணர் சிந்தனை வயப்பட்டார். இல்வாழ்க்கை தொடங்கும் முன்பேசாப்பாட்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டதே என்று நினைத்தார்.
இந்த சிறு நிகழ்ச்சியே அவருக்கு பெரியகுரு கொடுக்காத உபதேசமாக மாற, அப்படியே வீட்டிலிருந்து வெளியேறினார். துறவு பூண்டு, அவருடையகுரு பரமசிவேந்திரரை சந்தித்தார். இந்த நிகழ்ச்சியே சிவராமகிருஷ்ணராகிய இளைஞரை சதாசிவேந்திரராக மாற்றியது.
நுண்ணறிவு மிக்க சதாசிவர், குருவிடமுள்ள மாணவர்களையும், குருவைநாடிவரும் மற்றவர்களையும் தன் நாவன்மையால் தர்க்கத்தில் ஈடுபட்டு வந்தார்.ஒருநாள் அவ்வாறு வாதம் செய்து கொண்டிருந்தவரைப் பார்த்து அவருடைய குரு, "சதாசிவா.. உன் வாய் அடைக்காதா?" என்று சினத்துடன் சொன்னார்.
இந்த உபதேசத்தின் முழுப்பொருளையும் சதாசிவர் ஒருநொடியில் உணர்ந்து, அன்று முதல் மௌனவிரதம் மேற்கொண்டார். இசையிலும், சங்கீதத்திலும் பயிற்சி பெற்றவராக இருப்பினும் அன்று முதல் வாய்திறந்து பாடாது, பல நூல்களை எழுதினார்.
மௌனம் மட்டுமல்லாது, சதாசிவர் திசைகளையே தனக்கு ஆடையாகக் கொண்டு, கோவணத்தையும் நீத்தார். வெயிலில் காய்ந்தும், பனியில் உலர்ந்தும், மழையில் நனைந்தும் காடுமேடுகளில் வாழ்நாளை ஆன்மத் தியானத்தில் கழித்தார். இவ்வாறிருக்க அவருடைய யோகாப்பியாஸம் அவருக்கு பெரிதும் உதவியாக இருந்தது.
ஒருமுறை முகமதிய சிற்றரசர் அந்தப்புரம் அருகே நடந்து செல்லும்போது, சதாசிவரின் கோலம் கண்டு, சினம் கொண்டு, வாளை வீச, அதில் சதாசிவரின் கை துண்டாகி கீழே விழுந்தது.உடலில் குருதி பீறிட்டு வெளிவந்தாலும், ஏதும் நிகழாததுபோல் சதாசிவர் செல்ல, சிற்றரசர் தன் தவறை உணர்ந்து சதாசிவர் கால்களில் விழுந்து மன்னிப்பு கோரினார்.
பின்னர் அதே இடத்தில் கையை வைக்க, அது சேர்ந்து கொண்டது. சதாசிவர் உடல் உணர்ச்சியற்று முழுவதும் ஆன்மத் தியானத்திலேயே நிலைத்துவிட்டார் என்பதற்கு இந்நிகழ்ச்சியே நல்ல சான்று.
சதாசிவர் அஷ்டமாசித்திகளைப் பெற்றவராயினும், அவற்றை தன் லட்சியமாகிய ஆத்மானுபூதியை அடைய ஒரு சாதனமாக, அவசியமானபோது மட்டுமே பயன்படுத்தி வந்தார். சதாசிவர் பல அரிய நூல்களையும், இனிய கீர்த்தனைகளையும் இயற்றியுள்ளார். "பிரும்ம சூத்திர விருத்தி" என்னும் நூல் அவரின் மற்ற நூல்களினும் முக்கியமானது. "யோக சுதாகரம்" என்னும் யோகசாஸ்திர நூலையும் எழுதியுள்ளார்.
பிரம்மேந்திரர் செல்லும் பாதையை அறிந்த புதுக்கோட்டை சமஸ்தான அரசர் விஜய ரகுநாத தொண்டைமான் (1730-1768) அவரை வழிமறித்து ஆசிபெற விரும்பினார். பல நாட்களுக்குப் பிறகு அவரது தரிசனம் கிடைக்கப் பெற்றார். மணல் பரப்பில் மந்திரங்களை எழுதி, சதாசிவர் அவருக்கு மந்திர தீட்சை அளித்தார். இன்றும் அந்த மணல் எழுத்துகளை புதுக்கோட்டை அரண்மனையின் பூஜைஅறையில் வைத்து பூஜித்து வருகின்றனர். (ஓம் நமோ பகவதே தட்சிணாமூர்த்தயே மஹ்யம் மேதாம் ப்ரஃஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா).
அவதூதராகவும், மௌனியாகவும், இலக்கொன்றும் இல்லாதவர் போலவும் இவர் நடந்து சென்றுகொண்டே இருந்தார். அவருடைய திருவடிகள் காவேரிக் கரையை புனிதமாக்கின. கரூர், திருமாநிலையூர், நெரூர், அமராவதி, காவேரிக்கரையோர சோலைகளிலும் இவர் அதிக காலம் கழித்து, நெரூர் காவேரிக்கரையே தன் மண்ணுடலை நீப்பதற்கு தக்க இடமெனக் குறித்தார்.
பல நாட்கள் சமாதியில் அமர்ந்து, ஒருநாள் கண்விழித்து, ஜேஷ்ட சுத்ததசமியன்று பூதவுடலை நீங்க நாள்குறித்துவிட்டதாக அறிவித்தார். அன்றைய தினம், காசியிலிருந்து அந்தணர் ஒருவர் ஒரு பாணலிங்கத்தைக் கொண்டு வருவாரென்றும், அதை தன்சமாதிக்கு அருகில் பிரதிஷ்டை செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அதன்படி, சதாசிவரின் சீடரான தொண்டைமான் அரசர் லிங்கத்துக்கு கோயில் கட்டினார். அன்று முதல் அக்கோயிலில் ஆகம பூஜைகளும், சமாதியின் வைதீக பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.
- sumathiranid@gmail.com