

ஆலயம் தொழுவது சாலவும் நன்று, கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம், இறைவன் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று ஆன்றோர் பெருமக்கள் அருளிச் செய்துள்ளனர்.
இறைவன் தான் அனைத்து இடங்களிலும் இருக்கிறாரே, பிறகு எதற்கு கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும் என்று இக்கால குழந்தைகள் கேட்பதும் உண்டு. நமது முன்னோர், விஞ்ஞான அடிப்படையில் அதற்கு ஒரு காரணம் கூறுவர்.
சூரிய ஒளி அனைத்து இடங்களிலும் (இந்த பூமி முழுவதும்) படுகிறது. ஆனால் அதே சூரிய ஒளி, வில்லை (லென்ஸ்) வழியாக குவியும்போது, எதிர்பாராத வகையில் அபரிமிதமான ஆற்றலை அளிக்கிறது. பசுவுக்கு உடல் முழுவதும் குருதி இருந்தாலும், தனது கன்றுக்கும், நமக்கும் கொடுக்க, அதன் மடியில் மட்டுமே பால் சுரக்கும்.
இதே போல் அனைத்து இடங்களிலும் இறைநிலை இருந்தாலும், கோயில்களில் அதிகப்படியான ஆற்றல் குவியும் வகையில் விக்கிரகங்களை, அஷ்டபந்தனம், செப்பு யந்திரம், பல வேத மந்திரங்களுடன் கருவறையில் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவதால், இறை ஆற்றல் அதிகப்படியாக கிடைக்கும். மேலும் சம்பிரதாயம் என்ற பெயரில் பல அறிவியல்பூர்வமான சடங்கு முறைகளை கோயில்களில் செய்துள்ளதால், இறை வழிபாடு நோய்களை போக்குவதற்கும், நல் எண்ணங்களை மனதில் விதைப்பதற்கும் பேருதவி புரிகிறது. மனம் ஒருநிலைப்படுவதற்கும் கோயில் வழிபாடு துணை புரிகிறது.
நம் கால்களின் கீழ் பாதத்தில் நோயை குணப்படுத்தும் சில வர்மப் புள்ளிகள் உள்ளன. உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நிவாரணம் கொடுக்கும் அனைத்து புள்ளிகளும் கால் பாதத்தில் நிறைவடைகின்றன. கோயிலுக்குள் செல்லும்போது நாம், காலணிகளை நுழைவாயிலில் கழற்றிவிட்டுச் செல்வது வழக்கம்.
காலணி அணியாமல் கோயிலுக்குள் நடக்கும்போது, அங்கு பதிக்கப்பட்டுள்ள கருங்கற்களில் நம் கால்களில் உள்ள வர்மப் புள்ளிகள் அழுத்தப்படும்போது, நம்மை அறியாமல் பல நோய்கள் இயற்கையாகவே குணமடைகின்றன. (அக்குபஞ்சர்)
தோப்புக் கரணம் போடும் சமயத்தில் நம் காதுகளை இழுத்து அமர்ந்து, எழுகிறோம். இதனால் நம் மூளை சுறுசுறுப்படைகிறது. உடலில் உள்ள நரம்புகள் அனைத்தும் சோர்வில் இருந்து விடுபடுகின்றன. அரச மரத்தை சுற்றுவதால் பல பயன்கள் உண்டு. துளசி இலை தீர்த்தத்தை அருந்தும்போது, வயிறு தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கிறது.
மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கும் கோயில் வழிபாடு துணை புரிகிறது. பஞ்ச இயந்திரியங்களும் (கண், காது, மூக்கு, வாய், தோல்) ஒரு நிலைபடுத்தப்படுகின்றன. திரை விலக்கப்பட்டதும் இறைவனைக் காணும் சமயத்தில் கண்ணின் கவனம் சிதறாமல் இருக்க தீபாராதனை காட்டப்படுகிறது. காதின் கவனம் சிதறாமல் இருக்க மணி அடிக்கப்படுகிறது.
மூக்கின் கவனம் சிதறாமல் இருக்க வாசனை புகை (சாம்பிராணி, ஊதுபத்தி) துணை புரிகிறது. தோல் மீது தெளிக்கப்படும் தீர்த்தமும், பக்தர்களுக்கு அளிக்கப்படும் பிரசாதமும் மனதை, ஒரே செயலில் ஒருநிலைப்படுத்த உதவுகின்றன. கோயில் வழிபாட்டில் ஐம்புலன்களும் இறைவனை வேண்டுவதற்கு மனதுடன் ஒத்துழைக்கின்றன.