ரசிகர்களை பக்தர்களாக்கிய ஆகாசவாணி இசை விழா
சென்னை வானொலி நிலையம் ஆண்டுக்கொரு முறை நிகழ்த்தும் இசை விழாவை அண்மையில் பொதுமக்களும் கண்டுகளிக்கும் வகையில் சென்னை வானொலி நிலையத்தின் அரங்கத்தில் நடத்தியது.
முதல் நிகழ்ச்சியில் பி. விஜயகோபால் (புல்லாங்குழல்) மயிலை எம். கார்த்திகேயன் (நாகஸ்வரம்) ஆகியோரின் இசைக்கு வித்வான் பி. நடேசன் (மிருதங்கம்), வித்வான் எம். குருராஜ் (மோர்சிங்) ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர்.
முதல் உருப்படியே இதுவொரு வித்தியாசமான நிகழ்ச்சி என்பதற்கு கட்டியம்கூறுவதாக அமைந்தது. ஆரோகணம் மோகனத்திலும் அவரோகணம் கல்யாணியிலும் அமைந்த ராக சொரூபத்தைக் கொண்ட மோகன கல்யாணி ராகத்தில் லால்குடி கோபால அய்யரின் `தாமதம் தகாதய்யா' சாகித்தியத்தை ரசிகர்கள் மெய்மறக்கும் வகையில் வாசித்தனர் விஜயகோபாலும் கார்த்திகேயனும்.
தொடர்ந்து தியாகராஜரின் `சீதம்மா மாயம்மா'வில் உருக்கத்தையும், லால்குடி ஜெயராமனின் தேஷ் ராகத்தில் அமைந்த தில்லானாவில் ஜனரஞ்சகத்தையும் பரவசமாக செவிகளுக்கு வாத்திய விருந்தாக்கினர்! இரண்டாவது நிகழ்ச்சியாக, அக்கரை சகோதரிகள் - எஸ். சுபலக்ஷ்மி, எஸ். சொர்ணலதா ஆகியோரின் வாய்ப்பாட்டு கச்சேரி நடந்தது.
ஆர். ராகுல் வயலினிலும், வித்வான் பி. சிவராமன் மிருதங்கத்திலும், பி. ஸ்ரீசுந்தரகுமார் கஞ்சிராவிலும் சகோதரிகளின் வாய்ப்பாட்டுக்குப் பக்கபலமாக பக்கவாத்தியங்களை வாசித்தனர். சியாமா சாஸ்திரியின் தோடி ராகத்தில் அமைந்த `ராவே', தியாகராஜரின் பூர்விகல்யாணி ராகத்தில் அமைந்த `பரிபூர்ண', முத்துசுவாமி தீட்சிதரின் சங்கராபரணம் ராகத்தில் அமைந்த `தட்சிணாமூர்த்தே' ஆகிய முத்தான மூன்று சாகித்யங்களைப் பாடி இசை ரசிகர்களை பக்தர்களாக்கினர்!
விஜயகோபால் - மயிலை கார்த்திகேயன் இசை நிகழ்ச்சி செப். 2-ம் தேதி காலை 9.02 மணிக்கு 101.4 எஃப்.எம். அலைவரிசையில் ஒலிபரப்பாகவிருக்கிறது. அக்கரை சகோதரிகளின் இசை நிகழ்ச்சி செப். 4-ம் தேதி காலை 9.02 மணிக்கு 101.4 எஃப்.எம். அலைவரிசையில் ஒலிபரப்பாகவிருக்கிறது.
