

இந்திய மொழிகளில் முதலில் அச்சான மொழி தமிழ். இயேசு சபைத் துறவியான அன்டிரிக் அடிகளார் 1578-ல் வெளியிட்ட ‘தம்பிரான் வணக்கம்’ தொடங்கி ஏராளமான கிறித்தவப் பனுவல்கள் தமிழில் தொடர்ந்து எழுதப்பட்டு வருகின்றன.
சமயப்பரப்பலே நோக்கம் எனினும் உரைநடை, அகராதி, இலக்கணம், ஒப்பாய்வு, திருவாசக மொழிபெயர்ப்பு என்று விரியும் மேலைநாட்டுக் கிறித்தவர்களின் சமயங்கடந்த மொழிப்பணி நம்மை வியப்பிலாழ்த்துகிறது.
கிறித்தவர்கள் ஆற்றிய பணியை ஒதுக்கிவிட்டு தமிழ் இலக்கிய வரலாற்றைப் பார்க்க இயலாது என்பதைக் கடந்து கிறித்தவ இலக்கிய வரலாற்றை மட்டுமே தனித்து நோக்க வேண்டும் என்கிற வகையில் அதன் எல்லை விரிந்துள்ளது.
உலகின் மிகத் தொன்மையான இலக்கிய வடிவமாகக் காப்பியம் அறியப்படுகிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியன தமிழின் காப்பியத் தொன்மையைக் கூறும். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ்ப் புலமையாளர்களுக்கே சவாலான இந்த இலக்கிய வடிவத்தை இத்தாலி நாட்டு வீரமாமுனிவர் கையிலெடுத்ததும் தேம்பாவணி என்னும் கிறித்தவக் காப்பியம் முதன்முதலாக முகிழ்த்து தமிழுக்கும் கிறித்தவத்துக்கும் அணி செய்தது.
பதினெட்டாம் நூற்றாண்டில் தொடங்கிய இந்தக் கிறித்தவக் காப்பிய முயற்சி 21-ம் நூற்றாண்டு வரை தொடர்கிறது என்கிற தகவலோடு இரட்சண்ய யாத்திரிகம் இயேசுகாவியம் போன்ற ஒரு சில காப்பியங்களே அறியப்பட்டிருந்த நிலையில் மறக்கப்பட்ட, அழியும் நிலையிருந்த நாற்பதெட்டு கிறித்தவக் காப்பியங்களைக் கண்டறிந்துஅவற்றை அறிமுகப்படுத்தும் அரிய நூலை வெளியிட்டிருக்கிறார் பேரா.ஞானசந்திர ஜாண்சன்.
சென்னைக் கிறித்தவக் கல்லூரிப் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்ற இவர், தன் ஓய்வுக்காலத்தை ஆய்வுக்காலமாக வரித்துக் கொண்டு கிறித்தவ நூல்களைத் தேடுதல், ஆவணப்படுத்துதல், அறிமுகப்படுத்துதல், பதிப்பித்தல், ஆய்வுசெய்தல் என்றுபயணித்துக் கொண்டிருக்கிறார்.
நாற்பது ஆண்டுகாலத் தேடலில் தமிழகம் மட்டுமின்றி புதுவை, லண்டன், இலங்கை போன்ற பகுதிகளிலிருந்து ஏராளமானோரைத் தொடர்புகொண்டு இக்காப்பியங்களைக் கண்டறிந்து ஆவணப்படுத்தியிருக்கிறார். இவர் முன்னரே கிறித்தவச் சிற்றிலக்கியங்களைத் தேடித்தொகுத்து வெளியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1728-ல் எழுதப்பட்ட தேம்பாவணியில் தொடங்கி 2020-ல்நாஞ்சில் நாரண. தொல்காப்பியன் எழுதிய விடிவெள்ளி மகராசன் வேதமாணிக்கம் காவியம் வரையில் தொகுக்கப்பட்டுள்ள நாற்பத்தெட்டுக் காப்பியங்களும் மரபிலக்கணத்தில் அமைந்துள்ளன. இவற்றுள் சில காப்பியஇலக்கணத்துக்குள் உட்படவில்லை எனினும் தமிழுக்கும் கிறித்தவத்துக்குமான ஆழமான அழுத்தமான உறவை இவை வெளிப்படுத்துகின்றன.
இறைத்தொண்டர்கள் மட்டுமின்றி கிறித்தவரல்லாதோர், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் காப்பியங்களை எழுதியிருப்பது, இவர்களுள் ஒரே பெண் ஆசிரியராக அன்பம்மாள் ஏசுதாசன்திகழ்வது, காப்பிய பகுப்பு முறைகளில் காண்டம், படலம் ஆகியன மட்டுமின்றி அவற்றுக்கு மாற்றாகப்பருவம், சாரல், அடங்கன் ஆகியன இடம்பெறுவது,பல்வேறு யாப்பு வடிவங்களைப் பயன்படுத்தியிருப்பது, விவிலியக் கருத்துகளையும் கிறிஸ்துவின் வரலாற்றையும் கூறினாலும் தமிழ்ப் பண்பாட்டுப் பின்புலச்சூழலில் தமிழ்மண்மணம் மாறாமல் பாடியிருப்பது, திருத்தொண்டர் காப்பியத்தில் மட்டுமே 2,000 உவமைகள், 250 பழமொழிகள் பயன்படுத்தப்பட்டிருப்பது போன்று இந்நூல் தரும் அரிய தகவல்கள் தொகுத்துப் பார்க்கப்படுமானால் காலந்தோறும் கிறித்தவக் காப்பியங்கள் தமிழ்மரபோடு இணைந்தும் உறழ்ந்தும் பரிணமித்த போக்கை அறிய இயலும்.
ஆவணப்படுத்தப்படுவதோடு மட்டுமல்லாமல் இத்தகையநூல்கள் மறுபதிப்பும் செய்யப்பட்டு வெளிவருமானால் தமிழிலக்கிய வரலாற்றில் கிறித்தவக் காப்பியங்கள் பெறும் இடத்தையும் இணைத்துவைத்து நோக்க உதவும். நூல்: கிறித்தவக் காப்பியங்கள்
ஆசிரியர்: முனைவர் யோ.ஞானசந்திர ஜாண்சன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், அம்பத்தூர், சென்னை -50
தொடர்புக்கு: 04426251968