

உலகத்தில் இருக்கும் அனைத்து தலங்களுக்கும் தோற்றுவாயாக குடந்தை விளங்குகிறது. இத்தலம் முப்பெரும் தேவர்களான பரமசிவன், மகாவிஷ்ணு, பிரம்மதேவர் அதிக விருப்பத்துடன் வாசம் செய்யும் தலம் ஆகும். ஊழி காலத்தின் இறுதியில் ஜீவ வித்துக்கள் அனைத்தும் ஒரு குடத்தில் தங்கின. அந்த குடம் தங்கிய இடமே கும்பகோணம். எனவே இது அனைத்து தலங்களுக்கும் ஆதாரமான இடமாக விளங்குகிறது.
எல்லா தலங்களையும் நகரங்களையும் மலரவன் எனப்படும் நான்முகன் படைத்தார்என்றும், கும்பகோணத்தை சர்வேஸ்வரரான சிவபெருமானே உருவாக்கினார் எனவும் புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான் கைலாயத்தில் கோயில் கொண்டிருக்கிறார். இன்னும் பல தலங்களில் எழுந்தருளிஇருக்கிறார். இருந்தபோதிலும் அவர் இருதயம் லயிக்கும் இடம் என்று ஒன்றைத்தான் சொல்ல முடியும். அவர் கருணை சிறக்கும் இடம் என்று ஓர் ஊரைத்தான் காட்ட முடியும். அந்த இடம்தான் கும்பகோணம்.
“மாலயன் விண்ணவர்கள் போற்றச் செம்மை அருளி கயிலை முதலாம் புண்ணியப்பதிகள் சிறந்திட்டாலும் நம் இதயக் கருணை திருக்குடந்தை இடத்தே மிகவும் நண்ணி வாழ்வாம்” என்று சிவபெருமானே கூறியதாக வீரசிங்காதன புராணம் என்ற நூல்உரைக்கிறது.
காவிரி ஆறு, தன்னில் மூழ்கியவர், தன்னை பருகியவர் பாவங்களை அழித்துபுண்ணியம் தரும். காவிரிக் கரையில் உள்ள எல்லா தலங்களைக் காட்டிலும் சிறப்பு மிகுந்த தலமாக குடந்தை விளங்குகிறது. மகாமகம் என்பது மாமாங்கம் என்று ஆகியிருக்கிறது. அகம் என்றால் பாவம். மா என்றால் அணுகாது என்று பொருள் கொள்ளலாம்.
அகம்பாவம் அணுகாதது என்று பொருள் ஆகும். மா அகம்-மாகம். (மகாமகம்-மிகப்பெரிய பாவம் நீக்கம்). பிரம்மதேவர் மாசி மாதத்தில் மகா உற்சவ ஒன்பது நாள் விழாவை சிறப்பாக செய்து, பத்தாவது நாள் என்று கூறப்படும் திருநாளிலேயே, அக்னி திக்கில் உள்ள தீர்த்தத்தில் கும்பேஸ்வரருக்கு தீர்த்தம் ஆட்டு விழாவும் (மகாமக விழா) செய்தார்.
இத்தகைய பெருமைக்குரிய குடந்தை மாநகருக்கு, சுற்றியுள்ள ராசி கோயில்கள் மேலும் சிறப்பு சேர்க்கின்றன. வாழ்க்கை ஓட்டத்தை ஆறு விதமாக பிரிக்கலாம். நல்ல கல்வி, திருமணம், இனிக்கும் இல்லறம், பிள்ளை பேறு, குழந்தை வளர்ச்சி, நலம், ஆரோக்கியம், நிம்மதி. இவை ஆண்-பெண் இருவருக்கும் பொருந்தும்.
இந்த ஆறும் தான் பிறவி எடுத்ததன் பயனாக கூறப்படுகிறது. இந்த பிறப்பில் இந்த ஆறையும் நன்கு அனுபவித்தவருக்கு அடுத்த பிறவி வேண்டாம். இந்த ஆறில் எதில் குறை இருந்தாலும், குறை நேர்ந்தாலும், இறைவனிடம் பக்தர்கள் முறையிடுவது வழக்கம். இருப்பினும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் கர்ம வினைப்படியே பிறப்பு அமைகிறது. அதற்கு என்ன தீர்வு என்று நாம் தேடும்போது அவரவர் ராசிப்படி இறைவனை பற்றுதல் நலம்.
மேஷ ராசியில் பிறந்தவர்கள் ஸ்ரீ வரதராஜபெருமாள் கோயிலிலும், ரிஷப ராசியினர் சாரங்கபாணி கோயிலிலும், மிதுன ராசியினர்சக்கரபாணி கோயிலிலும், கடக ராசியினர் பாணபுரீஸ்வரர் கோயிலிலும், சிம்ம ராசியினர் சோமேஸ்வரர் கோயிலிலும், கன்னி ராசியினர் காசி விஸ்வநாதர் கோயிலிலும், துலா ராசியினர் அபிமுகேஸ்வரர் கோயிலிலும், விருச்சிக ராசியினர் கௌதமேஸ்வரர் கோயிலிலும், தனுசு ராசியினர் நாகேஸ்வரர் கோயிலிலும், மகர ராசியினர் உப்பிலியப்பன் கோயிலிலும், கும்ப ராசியினர் கும்பேஸ்வரர் கோயிலிலும், மீன ராசியினர் பிரம்மதேவர் கோயிலிலும் வழிபட வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு.