

பிரபலமான அம்மன் கோயில்களிலும் சக்தி வழிபாட்டுத் தலங்களிலும் ஆடி மாத விழாவை பக்தர்கள் விமரிசையாகக் கொண்டாடி அம்மனின் அருளைப் பெற்றனர். அண்மையில் ஆடி மாதத்துக்கு விடை கொடுக்கும் வகையில் பாரத் கலாச்சார் அமைப்பும், டாம் மீடியாஸும் இணைந்து ‘ஆடிப் பாடி’ என்னும் பக்தி இன்னிசை, நாட்டிய நிகழ்ச்சியை ஒய்.ஜி.பி. அரங்கத்தில் நடத்தினர்.
மீனாட்சியின் புகழை நாட்டியத்தின் மூலம் வெளிப்படுத்தினார் நடனக் கலைஞர் பிரியதர்ஷினி. சக்தியின் கருணை மதுவந்தியின் நடன நிகழ்ச்சியில் வெளிப்பட்டது.
மௌனராகம் முரளியின் இன்னிசைக் குழுவினருடன் இணைந்து ரம்யா நந்தகுமார், மௌனராகம் முரளி, கலைமகன், சூர்யநாராயணன், ரித்விக் ஆகியோர் பாடினர். புகழ் பெற்ற கர்னாடக இசைப் பாடகர் மதுரை சோமு பாடிய மருதமலை மாமணியே முருகய்யா பாடலை மிகவும் அருமையாகப் பாடி அசத்தினார் சூர்யநாராயணன்.
டாம் மீடியாஸின் இயக்குநர் ஒய்.ஜி.மதுவந்தி, அவிநாசி மணி எழுதி, எல்.ஆர்.ஈஸ்வரி பாடிப் பிரபலப்படுத்திய ‘கற்பூர நாயகியே கனவல்லி’ பாடலைப் பாடியது நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது.