

எளிமையான அறவழி வாழ்க்கை வாழ்ந்து, அனைத்து உயிரினங்களும் நலமுடன் வாழ பிரார்த்தனை செய்து, முறையாக அக்னிஹோத்ரம் செய்தால், வான்முகில் தவறாது பொழியும், நான்மறை அறங்கள் ஓங்கும், உயிர்கள் குறைவிலாது வாழும், பயிர் பச்சையாவும் செழித்து வளரும் என்பது ஆன்றோர் வாக்கு.
“இயற்கையை வழிபடுவோம்; இறைவனைப் பூஜிப்போம்” என்று இயல்பாகச் சொல்லும் சனாதன தர்மத்தின் ஆணி வேரான வேதநெறி, நமது அன்றாட வாழ்வியலை இயற்கையுடன் இணைந்ததாக அமைத்துத்தந்துள்ளது. இயற்கையை அழித்தால் கடும் விளைவுகளை நாம் சந்திக்க வேண்டும்.
மனித உடலிலும் ஐம்பெரும் பூதங்களும் (ஆகாயம், நீர், நிலம், காற்று, நெருப்பு) குடிகொண்டு மனித உடலை இயக்குகின்றன. அவற்றின் இயற்கையான விகிதாசாரங்கள் மாறும்போது நமது உடல்நிலை பாதிக்கப்படுகிறது. உலகத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளும், இன்புற்று வாழ இயற்கை வழியில் இறைவனை பிரார்த்திப்பது முதலியன, அறு தொழில் புரியும் அந்தணர்களின் கடமையாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கான நித்தியக் கடமைகளில் ஒன்று “அக்னி உபாஸனா”, எனும் தீ ஓம்புதல் ஆகும்.
‘ஆகுதி வேட்டல்’ என்ற தலைப்பில், திருமூலர் தன் திருமந்திரத்தில், வேதத்தை முதலாக உடைய, தளராத முயற்சி உடைய அந்தணர்கள் நெய்யை நெருப்பிலிட்டு தீ வளர்த்து வேள்வி செய்தால் விண்ணும் மண்ணும் நலம் பெறும்” என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து தான தர்மம், இல்லற வேள்வி, வாழி செய்க, செல்வம் தரும் வேள்வி என 9 பாடல்களால், அனைத்து மக்களுக்கும் நற்பயன் தரும் வேள்விகள் சிறப்பு பற்றியும் விரிவாகக் கூறுகிறார்.
“வேதம் நிறைந்த தமிழ்நாடு” என்ற கவிஞரின் வாக்குக்கு இணங்க, பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே, வேதம் ஓதி வேள்விகள் பல செய்து தமிழ்நாடு செழிப்புற்றிருந்தது என்பது தெரிகிறது. திருவையாறு ஐயாறப்பரை பாடும் பதிகத்தில், ‘கற்றான் கரியோம்பி, கலியை வாராமே’ என்கிறார் ஞானசம்பந்தர்.
இதன் பொருள் அந்தணர்கள் அன்றாடம் செய்யும் வேள்விகளால் ஏற்படும் ஓமப்புகை கூட்டமாக மரங்களில் தங்கி கலிபுருஷனால் ஏற்படக்கூடிய துன்பங்களை விரட்டும் என்பதாகும். காலப் போக்கில் வேள்வி செய்த அக்னிஹோத்ரி குடும்பங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து போய் 25 ஆண்டுகளுக்கு முன்னர் பாரத தேசம் முழுதும் 1,500 குடும்பங்கள் மட்டுமே இருந்தன. அந்த எண்ணிக்கையும் சமீபகாலமாக குறைந்து, 150 குடும்பங்களே உள்ளதாக ஒரு கணக்கு தெரிவிக்கிறது.
இக்குடும்பங்களின் பாரம்பரியம் காப்பாற்றப்பட்டு அடுத்தடுத்த தலைமுறையினருக்கு கடமைகளை பொறுப்புடன் சேர்ப்பித்து அக்னிஹோத்ரி குடும்பங்களின் எண்ணிக்கை உயரும் வகையில் அவர்களை உற்சாகப்படுத்த காஞ்சி காமகோடி பீடத்தின் 69-வது பீடாதிபதியான, ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வருடந்தோறும் சாதுர்மாஸ்ய காலத்தில், மேலே சொல்லப்பட்ட 150 குடும்பங்களையும் அழைத்து, தனியாக ‘அக்னிஹோத்ர சதஸ்’ எனும் மாநாடு நடத்திவந்தார்.
தொடர்ந்து, 70-வது பீடாதிபதி, ஜகத்குரு பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சாதுர்மாஸ்ய விரத காலத்தில் ஆண்டுதோறும் இந்த சதஸை நடத்தி வருகிறார். இந்த ஆண்டும் ஆக. 9, 10, 11-ம் தேதிகளில் வழக்கமான உற்சாகத்துடன் ஓரிக்கை முகாமில் அக்னிஹோத்ர சதஸ் நடைபெற்றது. இதில் தேசம் முழுவதுலிருந்தும், குறிப்பாக வடக்கே மஹாராஷ்ட்ரா, குஜராத், தெற்கே ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலிருந்து அக்னிஹோத்ரிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ளனர்.
நாடு முழுவதற்கும், அனைவருக்கும் வேதம் ஒன்றுதான் என்றாலும், வேதத்தை சொல்வதிலும் செயலிலும் சிறு சிறு மாற்றங்கள் உள்ளன. ஆனாலும் பாரம்பரியமிக்க நமது கலாச்சாரங்கள் தொடர்ந்து காப்பாற்றப்படவும், கலாச்சாரம் மிகுந்த நமது ஆன்மிகத்தின் வழியாக தேச ஒற்றுமையை காப்பாற்றவும் இது போன்ற சதஸ்கள் அவசியமாகின்றன.
இந்த ஆண்டு சதஸில் ஒரு சிறப்பு உண்டு. இதுவரை 5, 6 ஆண்டுகளாக சதஸில் கலந்து கொள்ள அழைக்கப்படும் போதெல்லாம் கேரளத்திலிருந்துவரும் வேத பண்டிதர்கள், முகாமுக்கு வந்து வேத பாராயணம் மட்டும் செய்து கொண்டிருந்தனர். கேரள மாநில அக்னிஹோத்ரிகள் இஷ்டி எனும் சாதுர்மாஸ்ய முகாமில் அக்னிஹோத்ர சதஸில் கலந்து கொண்டதில்லை.
இந்த ஆண்டு ஸ்ரீ மடம் இவர்களை அழைத்ததும், முதல் முறையாக கலந்து கொண்டு அவர்கள் சம்பிரதாயத்தில் ஸ்ரீ சங்கராச் சாரியார் முன்னிலையில், ‘இஷ்டி அக்னிஹோத்ரம்’ செய்தனர் என்பது சிறப்பு. சதஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து அக்னிஹோத்ரிகளும் கௌரவிக்கப்பட்டனர்.
ஓரிக்கை மகாஸ்வாமி மணி மண்டபத்தில் நடைபெற்ற சதஸ், ஸ்ரீருத்ர ஹோமம், சண்டி ஹோமம் ஆகிய 3 புனித விழாக்களில் 1,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் அனுக்கிரஹபாஷணம் அருளிய ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், நாள்தோறும் அக்னி ஹோத்ரம் செய்தால் அனைத்து இன்னல்களில் இருந்தும் விடுபடலாம் என்று அருளினார்.
- ramachandransethu@gmail.com