

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கொடிப்பள்ளம் கிராமத்தில் அருள்பாலிக்கும் பள்ளமுடையார், பக்தர்களுக்கு வேண்டும் வரம் அருள்பவராக போற்றப்படுகிறார். பாலமான் ஆற்றின் கரையில், நாகத்துடன் அருள்பாலிக்கும் பள்ளமுடையாரை தரிசிக்க பக்தர்கள் குவிவது வழக்கம்.
பள்ளமுடையார் என்ற சிவபக்தர் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலை நகர் பாசுபதேஸ்வரர் கோயில் குளத்தில் நீராடிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு நக்கரவந்தன்குடி கிராமத்தில் உள்ள சிவாலய குளத்தில் நீராடினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வடக்கு நோக்கி வந்தார். ஒரு பள்ளமான பகுதியில் உள்ள ஊரைக் கண்டதும் அதிசயித்து நின்றார்.
பாலமான் ஆற்றங்கரையில் அமர்ந்து தவம் செய்தார். ஒருநாள் அவரது கனவில் தோன்றிய ஈசன் அந்த ஊரிலேயே தங்கியிருந்து ஊர்மக்களை எவ்வித இடர்பாடும் இல்லாமல் காவல் காக்குமாறு பணித்தார். இதைத் தொடர்ந்து சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து, வழிபடத் தொடங்கினார்.
ஈசனுக்கு என்ன பெயர் வைப்பது என்று பள்ளமுடையார் யோசித்துக் கொண்டிருந்தபோது, இறைவனே அசரீரி வாக்காக, பக்தரின் பெயரையே வைக்கும்படி அருள்பாலித்தார். இதன் காரணமாக இவ்வூர் ஈசனுக்கு பள்ளமுடையார் என்ற பெயரே நிலைத்துவிட்டது. அன்றுமுதல் பள்ளமுடையார் தினமும் பள்ளமுடையாரை தரிசித்து, ஊரைக் காவல் காத்து வந்தார்.
இதனால், கவலை ஏதும் இன்றி இருந்த மக்கள், சிறிய அளவில் கோயில் கட்டி ஈசனை வழிபட்டு வந்தனர். ஒரு சமயம் நள்ளிரவு நேரத்தில் கோயிலுக்கு திருடன் வந்ததை அறிந்த பள்ளமுடையார், தனது குதிரையில் ஏறிச் சென்று திருடனை துரத்திப் பிடித்து கம்பால் அடித்துள்ளார். அதன் பின்னர் திருடன் அந்த இடத்தை விட்டு கிளம்பியதை உறுதி செய்த பின் பள்ளமுடையார், கோயிலுக்கு திரும்பினார்.
மறுநாள் காலை சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்தபோது, ஈசனின் லிங்கத் திருமேனியில் தழும்பு காணப்பட்டது. இதற்கான காரணம் புரியாத பள்ளமுடையார், ஊர்மக்களிடம் இதுதொடர்பாகக் கூறியுள்ளார். ஈசனிடம் இதுகுறித்து வேண்டினார். அன்றிரவு ஈசன் பள்ளமுடையார் கனவில் தோன்றி, “உனது காவல் பணியை கண்காணிக்கவே யாம் கள்வன் உருவில் வந்தோம்.
நீயும் சிறப்பாக காவல் புரிவதை அறிந்து மகிழ்ந்தோம். ஊரைக் காப்பேன் என்று நீ சொன்ன சொல்லைக் காப்பாற்றியதால் நீ என்னுடன் இருக்கும் வரத்தை யாம் உனக்கு அருள்கிறோம்” என்றார். ஈசன் அவருடன் இருக்கும் பேறை பள்ளமுடையாருக்கு அளித்தார். காவல் தெய்வமாக இருக்கும் பள்ளமுடையார் சந்நிதிக்கு அருகிலேயே சிவபக்தர் பள்ளமுடையாருக்கும் சந்நிதி உள்ளது.
ஈசனின் அருள்பெற்றதால், பள்ளமுடையாருக்கு சைவ படையல் மட்டும் நடைபெறுகிறது. மேலும் பள்ளமுடையார், குடிப்பழக்கத்தில் இருந்து ஒருவரை காத்தருள்வதாக ஒரு நம்பிக்கை உள்ளது. இயற்கை சீற்றங்களில் இருந்து பள்ளமுடையார் தங்களைக் காத்தருள்வதாக அவ்வூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஈசனின் திருமேனியில் தழும்பு இருப்பதை அறிந்து, வெளிநாட்டவர் வந்து, அதைப் பார்க்க வேண்டும் என்று அர்ச்சகரைக் கேட்டதாக கூறப்படுகிறது. கோயிலில் விநாயகர், முருகப் பெருமான், அம்பாள், குதிரையுடன் வீரனார், சின்ன வீரன், செட்டி வீரன், நவக்கிரக சந்நிதிகள் உள்ளன.
ஆடி வெள்ளிக்கிழமைகளில் பள்ளமுடையாருக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்யப்படுகின்றன. சித்திரை மாதம் பௌர்ணமி, மாசி மாதம் சிவராத்திரி தினங்களில் பள்ளமுடையாருக்கு சிறப்பு உற்சவம் நடைபெறுகிறது.
அமைவிடம்: சிதம்பரத்திலிருந்து அண்ணாமலை நகர் வழியாக பிச்சாவரம் செல்லும் சாலையில் 5 கிமீ தொலைவில் உள்ளது கொடிப்பள்ளம்.