

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள மானசா தேவி கோயில், நாக தோஷத்துக்கு சிறந்த பரிகாரத் தலமாகப் போற்றப்படுகிறது. இத்தலத்தில் வேண்டுபவர்களுக்கு நாக தேவதையாக போற்றப்படும் மானசா தேவி ஆனந்த வாழ்வு அளிப்பார் என்று கூறப்படுகிறது.
இமயமலையின் தென்கோடி மலைத்தொடர் சிவாலிக் மலையின் உச்சியில் மானசா தேவி கோயில் உள்ளது. மானசா வாசுகியின் (பாம்பு) சகோதரி. ஜகத்குரு முனிவரின் மனைவி. ஜனமே ஜெயன் காலத்தில் வாழ்ந்தவர். ஜகத்குரு முனிவர் - மானசா தம்பதிக்கு ஆஸ்திகன் என ஒரு மகனும் உண்டு. மூவருமே தவத்தில் சிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனமேஜெயனின் தந்தை பரீட்சித் ஒரு நாள் காட்டுக்கு வேட்டையாடச் சென்றார். ஒரு கட்டத்தில் அவருக்கு தாகம் எடுத்தது. அதற்காக சுற்றிவந்தபோது, அங்கு ஒரு முனிவர் தவம் செய்துகொண்டிருப்பதைக் கண்டார். அவரிடம் சென்று, தனக்கு தாகமாக இருக்கிறது. குடிக்க நீர் கொடுத்து உதவ வேண்டும் எனக் கேட்டார்.
பலமுறை கேட்டும் முனிவர் பதில் சொல்லவில்லை. கோபமடைந்த பரீட்சித், அருகில் இருந்த இறந்த பாம்பை எடுத்து முனிவரின் கழுத்தில் மாலையாகப் போட்டுவிட்டு, தண்ணீரை தேடிச் சென்றார். பல மணி நேரம் கழித்து அந்தப் பக்கமாக வந்த முனிவரின் மகன், கோபம் அடைந்து, இந்தப் பாம்பை தன் தந்தையின் கழுத்தில் போட்டுவிட்டுச் சென்றவனுக்கு, இன்னும் 7 நாளில் இதே போன்ற பாம்பால் மரணம் நேரும் எனச் சபித்தார்.
நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த காட்டின் அரசு ஆள், பரீட்சித்திடம் சென்று முனிவரின் சாபத்தைக் கூறினான். திடுக்கிட்ட பரீட்சித், முனிவர் சபித்தது பலிக்குமே என்று நடுங்கினார். அதனால் யாரையும் சந்திக்காமல் ஓர் இடத்தில் இருந்தார். மனிதர்களே நுழைய முடியாத இடத்தில் பாம்பு எப்படி நுழையும்? பார்த்துவிடலாம் என சுற்றிப் பாதுகாப்பு வீரர்களை காவலுக்கு வைத்தார்.
ஏழாவது நாள். முனிவர்கள் தன்னைச் சந்திக்க வந்திருப்பதை அறிந்து அவர்களை அழைத்தார். அவர்கள் தன் உயிரைக் காப்பாற்ற உதவக் கூடுமே என நம்பிக்கை. அதனால் அழைத்தார். அவர்கள் மன்னருக்கு ஆசி வழங்கி, அவர்கள் கொண்டு வந்திருந்த பழத்தை சாப்பிட கொடுத்தனர்.
அவரும் வாங்கி, வாய்க்குள் நுழைத்து கடித்தார். அடுத்த விநாடி ஒரு பாம்பு வெளிவந்து, நாக்கில் விஷம் பீய்ச்ச, பரீட்சித் உயிரிழந்தார். வந்த முனிவர்கள் (உண்மையில் நாகர்கள்) நழுவிவிட்டனர். நடந்த விபரத்தை அறிந்த ஜனமே ஜெயன் அனைத்து பாம்புகளையும் கொல்வதற்கு நரபலி யாகம் செய்ய முடிவு செய்யத் தொடங்கினான்.
யாகத்தீயில் பாம்புகள் வந்துவிழுந்தன. இதுதொடர்பாக ஆஸ்தான குருநாதர் ஆஸ்திகரிடம் ஜனமேஜெயன் ஆலோசனை செய்தான். அவர் ஒரு பாம்பால் ஏற்பட்ட இழப்புக்கு, அனைத்து பாம்புகளையும் கொல்வது முறையன்று என்று கூறி, யாகத்தை நிறுத்துமாறு கூறினார். மானசா தேவியும் இதற்கு உடன்படவில்லை. “பாவங்களில் மகா பாவம் பாம்புகளை கொல்வதுதான். இதனால் நாக தோஷம் உன் குடும்பத்தைத் தாக்கி, உனக்கு வாரிசுகள் பிறக்காத நிலை ஏற்படும்” என்று மானசா சொன்னார்.
இதைக் கேட்டு அஞ்சி நடுங்கிய ஜனமேஜெயன் யாகத்தை நிறுத்த உத்தரவிட்டான். பாம்புகள் இறப்பதும் நின்றது. நாக உலகமே மானசா தேவியை வணங்கியது. “நீங்களே இனி எங்கள் தெய்வம். உங்களை வணங்குபவர்களை நாங்கள் தீண்டமாட்டோம்.
பாம்பால் அவர்களுக்கு மரண பயம் ஏற்படாது” என வாக்குறுதி கொடுத்தன. ஹரித்வார் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கிமீ தொலைவில் உள்ளது மானசாதேவி கோயில். மலையின் உச்சிக்குச் செல்ல, ரோப் கார் உள்ளது. இது 540 மீட்டர் உயரத்துக்கு நம்மைக் கொண்டுபோய் சேர்க்கிறது. மானசா தேவி கோயிலுக்கும் மேலே சண்டி கோயில் உள்ளது.
பிரமிட் பாணியில் மானசாதேவி கோயில் கோபுரம். சிவப்பு, வெள்ளை நிறத்தில் இரு கோபுரம். உள்ளே நுழைந்து நேராக கருவறைக்குச் சென்றால் இரண்டு தெய்வங்களை தரிசிக்கலாம். ஒன்றில், இருபுறமும் சிங்கம் நிற்க, அமர்ந்த கோலத்தில் சிரசில் கிரீடத்துடனும், 4 கைகளுடனும் மானசா அருள்பாலிக்கிறார்.
வலது பக்கம், ஒரு கை உயர்ந்துள்ளது. அதில் சங்கு உள்ளது. மற்றொன்று, இடுப்புக்கு மேலே நம்மை ஆசீர்வதித்தபடி உள்ளது. இடதுபுறம் ஒரு கை தாழ்ந்துள்ளது. உயர்ந்துள்ள மற்றொரு கையில் சக்கரம் உள்ளது. மற்றொரு மானசா, 3 முகங்களுடன் 5 கைகளுடன் உள்ளதாக கூறுகின்றனர். ஆனால் கைகளை அலங்காரங்கள் மறைத்துள்ளன. அதனை சண்டி... மாயா... நடுவில் மானசா தேவியரின் உருவம் எனக் கூறப்படுகிறது.
ஹரித்வாரை ஆட்சி செய்பவர்கள் இந்த முப்பெரும் தேவியர். இது தவிர, சண்டிக்கு தனிக் கோயில் ஒன்றும் உள்ளது. மானசா சக்தியின் அம்சம் என்பதால், இந்த மூன்று முகமும் லட்சுமி, மானசா, சரஸ்வதி எனவும் சில பக்தர்கள் கூறுகின்றனர். சந்நிதிக்கு வெளியே உள்ள தல விருட்சத்தில் பக்தர்கள் வேண்டிக் கொண்டு நூல் கட்டுவது வழக்கம். இந்தக் கோயிலில் அரிசிப்பொரிதான் பிரசாதம்.
மானசா என்றால் ஆசை. எண்ணம். அந்த எண்ணத்தை நிறைவேற்றித் தருவதால் `மா' என்னும் சொல்லைச் சேர்த்து மானசாதேவி என்று அழைப்பதாக கூறப்படுகிறது. இந்தக் கோயிலில் நவராத்திரி விழா விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தக் கோயில் பொ.ஆ.மு. - கி.பி. 1811-15 காலத்தில், மணிமஜ்ராவின் மகாராஜா கோபால் சிங் என்பவரால் கட்டப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளத்தில் தேவி வழிபாடுமிக அதிகம். இதே போல், ஆந்திரப் பிரதேசத்திலும் பத்துக்கும் அதிகமான மானசா தேவி கோயில்கள் உள்ளன. கோயிலை வெளிப்பக்கம் வலம் வந்தால், கங்கையையும் ஹரித்வார் நகரையும் ரசிக்கலாம்.