சென்னையில் சாதுர்மாஸ்ய விரதம் கடைபிடிக்கும் பிலாஸ்பூர் சுவாமிகள்

சென்னையில் சாதுர்மாஸ்ய விரதம் கடைபிடிக்கும் பிலாஸ்பூர் சுவாமிகள்
Updated on
1 min read

ஸ்ரீசக்ர மஹா மேரு பீடம், சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் நிறுவப்பட்ட மஹாமேரு மற்றும் ஸ்ரீசக்ர வழிபாட்டு மையமாகும். விலாசபுரி என்று அழைக்கப்பட்ட பிலாஸ்பூரில் சாக்த வழிபாடு நடைபெறுகிறது. அத்வைத சந்நியாசியான ஸ்ரீசக்ர மஹாமேரு பீடத்தின் மடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த சுவாமிகள், சுவாமிஜி காசி ஸ்ரீ ஸ்ரீ ஈஸ்வரானந்த தீர்த்த மகா சுவாமியிடம் இருந்து சந்நியாச தீட்சை பெற்று, 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பீடத்தை நிறுவியுள்ளார்.

காஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது மடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் தீவிர பக்தரான இவர், மகாஸ்வாமியின் ஆராதனை மற்றும் அனுஷ தினத்தில் சண்டி ஹோமம் நடத்தி, 25,000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் செய்து வருகிறார்.

இளம் குழந்தைகளுக்கு வேதம் பயிற்றுவிப்பதையும், சமூக விளிம்பு நிலையில் உள்ள பழங்குடியினரின் ஆன்மிக மற்றும் சமூக நலனுக்காக பாடுபடுவதையும் தமது ஆசிரமப் பணியாக மேற்கொண்டுள்ளார். காஞ்சி மகாஸ்வாமியின் கொள்கைகளின்படி சனாதன தர்மத்தைப் பாதுகாத்து பிரச்சாரம் செய்வதை தாரக மந்திரமாகக் கொண்டுள்ளார்.

பிலாஸ்பூர் சுவாமிகள் என்று அழைக்கப்படும் இவர், தமிழ்நாட்டின் சேலம் நகரில் ஸ்ரீ சிவசுவாமி ஐயர் – லலிதா தம்பதிக்கு மகனாகப் பிறந்துள்ளார். இளம் வயது முதலே வேதம், மகாருத்ரம், இதிகாசம் கற்பதில் ஆர்வம் கொண்டு அவற்றில் தேர்ச்சி பெற்றார். சேலம் ஸ்ரீ ராம கிருஷ்ணா சாரதா வித்யாலயாவில் பள்ளிப்படிப்பையும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தில் இளங்கலைப் படிப்பையும் முடித்துள்ளார்.

சென்னை பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, சுவாமிஜி, இந்த வருட சாதுர்மாஸ்ய விரதத்தை ஜூலை 21-ம் தேதி முதல் திருவான்மியூர் அமரபாரதி கல்யாண மண்டபத்தில் (வடக்கு மாட வீதி, மருந்தீஸ்வரர் கோயில் அருகில்) கடைபிடித்து வருகிறார். குருபூர்ணிமா வியாச பூஜை, சாதுர்மாஸ்ய சங்கல்பத்துடன் தொடங்கிய இவ்விரதம், புரட்டாசி 2 (செப். 18-ல்) நிறைவு பெறுகிறது.

இந்த நிகழ்வை முன்னிட்டு தினமும் மகா திரிபுரசுந்தரி, மகா பெரியவா, சந்திரமௌலீஸ்வர பூஜைகள், வேத பாராயணம், வேத பரீட்சை, உபன்யாசங்கள், சிறப்பு பிக்‌ஷாவந்தனம், இசை, நாமசங்கீர்த்தனங்கள் நடைபெற்று வருகின்றன. கூடுதல் தகவல்களுக்கு 9962568275, 9825585852 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in