

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோயிலில் உள்ள பெருமாள் சாளக்கிராமத்தால் ஆன சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். முகம் மட்டும் தெற்கு நோக்கி உள்ளது. விஜய நகர நாயக்கர்களால் கட்டப்பட்ட கோயில். பல ஆண்டுகளுக்கு ஆதி நவாப் என்பவருக்கு தீராத உடல் உபாதை இருந்தது.
அவருக்கு வைத்தியம் பார்த்த மருத்துவர்கள் அனைவரும் கைவிட்ட நிலையில் மிகவும் துன்பத்துக்கு ஆளானார் ஆதி நவாப். அந்த சமயம் மத்வ மதத்தைச் சேர்ந்த யாத்ரீகர் ஒருவர், ஸ்ரீமுஷ்ணம் சென்று பூவராக சுவாமியை தரிசனம் செய்துவிட்டு அவ்வழியாக தனது ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அவரது கையில் சுவாமியின் தீர்த்தம், துளசி இருந்தன. அப்போது நவாப்பின் உடல்நிலை குறித்து கேள்விப்பட்டவர், உடனே சென்று அவரைப் பார்த்து தீர்த்தத்தையும் துளசியையும் கொடுத்தார். நவாப்பின் உடல்நலம் தேறியது.
இச்சம்பவத்தில் இருந்து ஸ்ரீமுஷ்ணம் பூவராக பெருமாளிடம் பக்தி கொண்டார் ஆதி நவாப். அவருக்கு தொண்டு புரிய விரும்பினார். கிழக்கு சமுத்திரம் என்ற இடத்துக்கு சுவாமி எழுந்தருளுவார் என்பதை அறிந்து கிள்ளைத் தோப்பு என்ற இடத்தில் ஒரு மண்டபத்தை நிர்மாணம் செய்தார். உற்சவம் சிறப்பாக நடைபெற நிறைய நிலபுலன்களை அளித்தார். தர்ம ஸ்தாபனம் ஒன்றை நிறுவி, தொடர்ந்து பரிபாலித்து வந்தார்.
இதன்காரணமாக மாசி மாத பிரம்மோற்சவ சமயத்தில் சுவாமி தீர்த்தவாரிக்கு எழுந்தருளும்போது, இஸ்லாமியர் வசிக்கும் தைக்கால் கிராமத்தின் உள்ளே சென்று வீதியுலா வருவார். புஷ்பப் பல்லக்கில் வாண வேடிக்கை, மேள தாளத்துடன் மசூதியின் பக்கம் எழுந்தருள்வார்.
அப்போது கிராமவாசிகள் சீர்வரிசைகளுடன் சுவாமியை எதிர்கொண்டு அழைத்து மாலை அணிவித்து பழம், நைவேத்யம் கொடுத்து ஆரத்தி காண்பிப்பர். அந்த ஆரத்தி, சுவாமி பிரசாதத்தை எடுத்துக் கொண்டு நவாப்பின் அரண்மனை அலமாரியில் வைப்பது வழக்கம். இந்நிகழ்வு இன்றும் நடைபெறுகிறது.
ஒரு சமயம் சம்பரன் என்ற ஓர் அந்தணர், பிச்சை எடுத்து தன் மனைவி, குழந்தையைக் காப்பாற்றுவதோடு மட்டுமல்லாமல், தன் இல்லம் தேடி வரும் தொண்டர்களுக்கும் உணவளித்து வந்தார். அவரது அறத்தை சோதிக்க எண்ணிய திருமால், அந்தணர் வடிவம் எடுத்து ஒரு சிங்கத்துடன் அவர் இல்லத்துக்குச் சென்றார்.
வழக்கம் போல் அந்தணர் வடிவத்தில் இருந்த திருமாலுக்கு உணவளித்து உபசரித்தார் சம்பரன். தன்னுடைய சிங்கத்துக்கு உணவாக, சம்பரனுடைய பசுவை அளிக்கும்படி கேட்டார் திருமால். பசு வேண்டாம் என்று கூறி தன்னையே உணவாக அளிக்க சம்மதித்தார் சம்பரன். ஒரு மனிதனின் உடல் தனது சிங்கத்தின் பசிக்கு போதாது என்று கூறினார் திருமால். வேண்டுமானால் தனது மனைவி, குழந்தையையும் சிங்கத்துக்கு உணவாக எடுத்துக் கொள்ளுமாறு, திருமாலிடம் கூறினார் சம்பரன்.
சம்பரனின் தியாகத்தை மெச்சி, தனது உண்மையான உருவத்துடன் சம்பரனுக்கு அருள்பாலித்தார் திருமால். அவருக்கு வைகுண்டத்தில் சின்னாள் பதவியையும், மறுபிறப்பில் சிபிச்சக்கரவர்த்தியாக பிறந்து புகழ் பெறவும் அருள்பாலித்தார் திருமால். பெருமாளின் 10 அவதாரங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது வராக (பன்றி) அவதாரம் ஆகும்.
இந்த அவதாரத்தை வழிபடுவது மோட்சம் செல்வதற்கான வழி ஆகும். அசுரர்களை வென்று அதனால் ஏற்பட்ட வெற்றிப் புன்னகையுடன், இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு மேற்கு நோக்கி நின்ற நிலையில், தெற்கு நோக்கி முகத்தை காட்டி அருள்பாலிக்கிறார். இங்கு பெருமாளின் மூலவர் விமானம் பாவன விமானம் ஆகும். பிரம்மதேவன் உள்ளிட்ட தேவர்கள் இத்தல பெருமாளை வழிபட்டு நற்பலன் அடைந்தனர்.
கோயிலின் அர்த்த மண்டபத்தில் உற்சவர் யக்ஞ வராக மூர்த்தி ஸ்ரீதேவி பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். உடன் ஆதி வராகமூர்த்தியும் கண்ணனும் எழுந்தருளியுள்ளனர். கோயிலின் வடப்புறத்தில் குழந்தை அம்மன் கோயில் உள்ளது. இங்கு அம்புஜ வல்லித் தாயாரின் தோழிகள் அருள்பாலிக்கின்றனர்.
வராகத்துக்கு கோரைக் கிழங்கு மிகவும் பிடித்தமான உணவு என்பதால் இத்தல பெருமாளுக்கும் கோரைக் கிழங்கு பிரசாதம் (முஸ்தா சூரணம்) வழங்கப்படுகிறது. கோரைக் கிழங்கு, அரிசி மாவு, குழவு சீனி, ஏலக்காய், நெய் சேர்த்து இப்பிரசாதம் தயார் செய்யப்படுகிறது.
மாசி மாத பிரம்மோற்சவம் பரணி நட்சத்திர தினத்தில் தொடங்கி, மிகச் சிறப்பாக 10 நாட்கள் நடைபெறும். சித்திரை பிரம்மோற்சவமும் 10 நாட்கள் நடைபெறும். தேர், தெப்பம், பல வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
ஒன்பதாவது நாள் அன்று நடைபெறும் மட்டையடி உற்சவம் குறிப்பிடத்தக்க ஒன்று. சித்ரா பவுர்ணமி தினத்தில் தீர்த்தவாரி நடைபெறும். ஒவ்வொரு மாதமும் 2 ஏகாதசிகள், பௌர்ணமி, அமாவாசை, மாதப் பிறப்பு தினங்களில் யோக நரசிம்ம சுவாமி பிரகாரத்தில் சுவாமி எழுந்தருள்கிறார். சித்திரை மாத ரேவதி நட்சத்திர தினத்தில் (அவதார தினம்) சிறப்பு புறப்பாடு உண்டு.
வைகாசி விசாகத்தில் உற்சவர் கருட வாகனத்தில் வீதியுலா, ஆடிப் பூர ஆண்டாள் உற்சவம், ஆவணி மாத 10 நாள் ஸ்ரீ ஜெயந்தி உற்சவம், உறியடி திருவிழா, புரட்டாசி மாத நவராத்திரி கொலு வைபவம், ஐப்பசி மாத தீபாவளி உற்சவம், கார்த்திகை மாத திருக்கார்த்திகை சொக்கப்பனை, மார்கழி மாத பகல்பத்து, இராப்பத்து, ஆண்டாள் நீராடல், வைகுண்ட ஏகாதசி உற்சவர் புறப்பாடு, கருட சேவை, தைப் பொங்கல் அன்று சுவாமி - ஆண்டாள் திருக்கல்யாணம், மாட்டுப் பொங்கல் தினத்தில் பாரிவேட்டை, பூச நட்சத்திர தினத்தில் தீர்த்த உற்சவம், பங்குனி உத்திர தினத்தில் பெருமாள் தாயார் திருக்கல்யாணம், திரு ஊரல் உற்சவம் போன்ற வைபவங்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
தினமும் நடைபெறும் ஆறு கால பூஜையில் சுவாமிக்கு, மிளகு சாதம், சுத்த அன்னம், தோசை, சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்யப்படுகிறது. வராக சுவாமியை வழிபடுவதால் வாக்கு வன்மை, உயர் பதவி, நிலைத்த செல்வம், குழந்தை வரம், நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள் கிட்டும். குரு, ராகு, கேது தோஷம் நீங்கும்.
வாகனம் படைத்தல் என்ற நிகழ்வு இங்கு நடைபெறும். புதிய வாகனம் வாங்குவோர், விபத்துள்ளான வாகனத்தை சீர் செய்தோர் இங்கு வந்து பெருமாளை வழிபட்ட பின்னரே தங்கள் வாகனங்களை இயக்குவது என்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
(பெருமாள் சாளக்கிராமத்தால் ஆன சுயம்பு மூர்த்தியாக எட்டு தலங்களில் அருள்பாலிக்கிறார் – ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருப்பதி, வானமாமலை, சாளக்கிராமம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிகாஸ்ரமம்) அமைவிடம்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் வட்டத்தில் அணைக்கரை – மீன்சுருட்டியில் இருந்து சேத்தியாத்தோப்பு வழியே வடலூர் செல்லும் வழியில், சென்னை நெடுஞ்சாலையில் உள்ள சோழதரத்தில் இருந்து 12 கிமீ தூரத்தில் (விருத்தாசலம் செல்லும் சாலையில்) அமைந்துள்ளது.