

மதுரையில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள வேம்பத்தூர் ஸ்ரீ கைலாசநாதர் கோயில், பக்தர்களின் கனவுகளை நனவாக்கும் திருத்தலமாக போற்றப்படுகிறது. குழந்தைப் பேறு வேண்டி இங்கு பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கமாக உள்ளது.
சங்ககாலம் தொட்டு அறிஞர்களும், சான்றோர் பெருமக்களும் தமிழுக்கும், ஆன்மிகத்துக்கும் ஏராளமான தொண்டுகள் செய்த பெருமைக்குரிய திருத்தலம் வேம்பத்தூர். பாண்டியர் ஆட்சிக் காலத்தில் தென் களவழிநாடு என்ற உள்நாட்டுப் பிரிவில் இவ்வூர் அடங்கியிருந்தது. அவ்வேளையில் இவ்வூர் வேம்பற்றூர் என அழைக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின்போதும் இத் தலப்பெயர் மன்னரின் பெயரால் மாற்றம் கண்டது. பொ.ஆ.1050-ல் உத்தம சோழ சதுர்வேதி மங்கலம் என்றும் பொ.ஆ.1118 – 1135-ல் விக்கிரம சோழ சதுர்வேதி மங்கலம் என்றும், பொ.ஆ.1300-ல் குலசேகர சதுர்வேதி மங்கலம் என்றும் அழைக்கப்பட்டது. தொன்று தொட்டு ஊர் நிர்வாகமும், கோயில் நிர்வாகமும் நால்வகை வேதங்களை கற்றுத் தெளிந்தவர்கள் வசம் இருந்தது.
ஒரு சமயம் பாண்டிய மன்னர் தனது ராஜ குரு அறிவுறுத்தியபடி குழந்தைப் பேறு வேண்டி இத்தலத்துக்கு வந்து புத்திர காமேஷ்டி யாகம் நடத்தி இறைவனை மானசீகமாக வணங்கினார். அவரது கோரிக்கைப்படி விரைவிலேயே சந்தான பாக்கியம் கை கூடியது.
இதனால் மனம் மகிழ்ந்த மன்னரும் கற்றளியாக ஒரு சிவாலயத்தை எழுப்பினார். கோயிலின் எதிரே பிரம்மாண்ட தீர்த்தக்குளம் ஒன்றையும் அமைத்தார். சாலக் கோபுர முகப்புடன் கிழக்கு வாசல் தாண்டியதும் முக மண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்பில் பாண்டியர் கலைப் பாணியில் கோயில் அமைந்துள்ளது.
முக மண்டபத்தில் பலிபீடம், நந்தி தேவர் பீடம் உள்ளன. இதன் வடபுறம் கால பைரவர், ஆவுடை நாயகி அம்பாள் சந்நிதிகள் உள்ளன. மகா மண்டப வடபுறம் தில்லைக்கூத்தர் சந்நிதியும், தென்புறம் வாசலும் அமைந்துள்ளது.
கருவறை மூலவராக, சாந்நித்தியமிக்க தெய்வமாக ஸ்ரீ கைலாசநாதர் எழுந்தருளியுள்ளார். குழந்தைப்பேறு பெற்றதற்காக கட்டப்பட்ட கோயில் என்பதால் இங்கு குழந்தை வரம் வேண்டி பக்தர்கள் நம்பிக்கையோடு நாடிவந்து வணங்குவது வழக்கமாக உள்ளது.
பொ. ஆ.1900 வாக்கில் கோயிலின் சில பகுதிகள் சிதிலமடைந்து விட்டதால், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பக்தர், குழந்தை வரம் வேண்டி இக்கோயிலில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டார். ஈசனும், தனது பக்தரின் வேண்டுகோளை உடனே நிறைவேற்றி வைத்தார். மனமகிழ்ந்த பக்தரும் கோயில் மகாகும்பாபிஷேக விழாவின் பொறுப்பை மேற்கொண்டு செவ்வனே நிறைவேற்றி வைத்தார்.
இங்குள்ள புதன் சிம்ம வாகனத்தில் அருள்பாலிப்பதால் ஆக்க பூர்வமான சிந்தனை உள்ளவர்களுக்கு அபார அறிவுத்திறனையும், படைப்பாற்றலையும் அருளுவதாக ஐதீகம். இது போன்ற கோரிக்கைகளுக்காக வரும் அடியார்களுக்கு இங்குள்ள கோசாலையில் வைத்து பூசை நடத்தப்படுகிறது. உள்சுற்றில் வீரை கவிராஜபண்டிதருக்கு ஒரு சிற்பமும், இதர பரிவார தேவதை சந்நிதிகளும் அமைந்துள்ளன. தினமும் நான்கு கால பூஜை நடைபெறுகிறது.
ஞாயிற்றுக்கிழமை தோறும் தேவாரம், திருவாசகம் ஓதுதல், நன்னெறி வகுப்புகள் ஆகியவை பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்டு வருகிறது. பௌர்ணமியில் வீரை கவிராஜபாண்டிதருக்கு அபிஷேகம், 108 திருவிளக்கு வழிபாடு, வைகாசி விசாக தினத்தில் அம்பாளுக்கு அபிஷேகம், தில்லைக்கூத்தருக்கு ஆண்டுக்கு ஆறு கால அபிஷேகம், தை அமாவாசை தினத்தில் காலபைரவருக்கு அபிஷேகம் என்று எப்போதும் கோயிலில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும். மகா சிவராத்திரி, பங்குனி உத்திரத்தை ஒட்டி பக்தர்கள் காவடியுடன் கூடிய பால்குட ஊர்வலம் நகர்வலமாக வந்து கோயிலை சென்றடைவர். மாசி மாதம் அஸ்வினி நட்சத்திரம் வருஷாபிஷேகம் நடைபெறும்.
வைகை கரைத் தலமான வேம்பத்தூரிலும் காலங்கள் தோறும் அருந்தவப் புதல்வர்கள் பலரும் தோன்றி ஆன்மிகத்துக்கும், தமிழுக்கும் அரிய தொண்டுகள் பல செய்துள்ளனர். பெரும்பற்றப்புலியூர் நம்பி என்பவர் திருஆலவாயுடையார் திருவிளையாடல் புராணம் என்ற நூலை இயற்றியுள்ளார். இதற்கு வேம்பத்தூர் திருவிளையாடல் புராணம் என்றொரு பெயரும் உண்டு. மதுரையில் கடைச்சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த பாணியில் இத்தலத்திலும் கற்றறிந்த பண்டிதர்கள் தமிழ்ச்சங்கம் நிறுவி திறம்பட வளர்த்தனர்.
சங்க இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு ஆகியவற்றில் முசுண்டை, கண்ணன், குமரனார் போன்ற புலவர்கள் சங்கப் பாடல்கள் இயற்றியுள்ளனர். பகவான் கிருஷ்ணரின் பிறப்பு, வளர்ப்பு நூலான பாகவதத்தை செவ்வை சூடுவார் என்ற புலவர் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். பகவத்கீதையை ஸ்ரீபட்டர் என்பவர் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். ஆதி சங்கரர் எழுதியருளிய சௌந்தர்யலஹரியை வீரசோழன் கவிராஜ பண்டிதர் தமிழில் மொழி பெயர்த்தார்.
சேதுபதி மன்னர்கள் ஆண்ட இராமநாதபுர சமஸ்தானம் அரண்மனை அரசவைப் புலவராக இவ்வூரைச் சேர்ந்த முத்துவேங்கடசுப்பு ஐயர் என்பவர் தனித்துவத்துடன் செயல்பட்டு வந்தார். இவர் பதினெண்கீழ்கணக்கு நூல்களை தொகுத்துள்ளார்.
மதுரைக் கோவை நூலை சங்கர நாராயண ஐயர் எழுதியுள்ளார். தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை மழவராயனேந்தல் மகாலிங்கக் கவிராயர் முதன் முதலில் அச்சில் ஏற்றி புத்தகமாக வெளியிட்டார். பள்ளு, கலம்பகம், அந்தாதி, உலா, குறவஞ்சி, பிள்ளைத் தமிழ் என பல்வகை இலக்கிய நூல்களையும் இவ்வூர் அறிஞர்கள் இயற்றி தமிழுக்குப் பெரும் தொண்டு செய்துள்ளனர்.
சங்க காலப் புலவர்களுக்கும் இவ்வூருக்கும் உள்ள நீண்ட தொடர்பை உறுதிப்படுத்தும் விதமாக இன்றைக்கும் இவ்வூரில் கம்பன் வயல், பரணர் வாய்க்கால், ஒளவைத்திடல், காளமேகம் வயல் என பெயரிடப்பட்ட நிலங்களும், நீர் நிலைகளும் உள்ளன. நில வளம், நீர் வள மிக்க இத்தலத்தில் தொன்று தொட்டு தமிழும், ஆன்மிகமும் செழித்து வளர்வது இயற்கையாக அமைந்துள்ளது பெருமைக்குரியது. மதுரை மாட்டுத்தாவணி, பெரியார் பேருந்து நிலையம் ஆகிய இரு இடங்களிலிருந்தும் வேம்பத்தூருக்கு நேரடி பேருந்து வசதி உள்ளது.