

திருநாவுக்கரசரை அப்பர் என்று அழைத்தவர் திருஞானசம்பந்தர். சம்பந்தர் ஏறிவந்த பல்லக்கை சுமந்தவர் திருநாவுக்கரசர். இருவரும் வேதாரண்யம் என்ற திருமறைக்காட்டில் கோயில் கதவு திறக்கவும், மூடவும் பதிகங்கள் பாடினர். குலத்தால் வேறுபட்டாலும் இருவருக்கும் இடையே எவ்வித வேறுபாடும் இல்லாததே சைவ சமயம் வளர்த்த பண்பாட்டை உணர்த்துகிறது.
சேக்கிழார் அப்பரை ஆளுடையரசர் என்று அழைக்கிறார். ஞானசம்பந்தப் பெருமானை ஆளுடைப்பிள்ளை என்று அழைக்கிறார். ஆளுடைப்பிள்ளையைக் காண ஆளுடையரசர் சீர்காழி எழுந்தருளினார். அவரை எதிர்கொண்டு அழைத்தார் ஆளுடைப்பிள்ளை. இருவரும் அருட்கடலும் அன்புக்கடலும் போல் திகழ்ந்தனர்.
‘ஆளுடையரசரும் ஆளுடைப்பிள்ளையும்’ என்ற இந்நூலின் ஆசிரியர் உஷா சங்கரநாராயணன், இரு மாபெரும் அருளாளர்களின் வாழ்க்கை வரலாற்றை நம் கண் முன்னே நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்க்கைச் சம்பவங்களை அற்புதமான பின்னலாக்கி, ஒரு ஞானக்குழந்தை, ஒரு ஞான முதியவரின் வரலாற்று ரீதியிலான அருட்பயணத்தை கோத்துத் தந்துள்ளார்.
அடியார்கள் வரலாறு, ஆங்காங்கே தேவாரப் பாடல்களுடன், அந்தந்த திருத்தலங்கள், இடையிடையே பொருத்தமான இடத்தில் திருக்குறளை கோடிட்டு சுட்டிக் காட்டியுள்ளது அருள் கூட்டுகிறது. திருத்தல வரலாறுகள் நமக்கு சேக்கிழார் பெருமானின் பெரியபுராணத்தை படித்த அனுபவத்தை தருகிறது.
அண்ணலின் அருள், சபாநாயகர் தரிசனம், அதிசயத் தாளமும் அம்பிகையின் ஓசையும், பிள்ளை ஏறிய முத்துச் சிவிகை, திருவடி தீட்சை, திருவீழிமிழலை அதிசயங்கள், மதுரை வரவேற்பு, புனல் வாதம், போதி மங்கையின் போதனைகள், இரு அரசர்கள் சந்திப்பு என்று இரு அருளாளர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள், பாங்குற விளக்கப்பட்டுள்ளன.
நூல்: ஆளுடையரசரும் ஆளுடைப்பிள்ளையும்
ஆசிரியர்: உஷா சங்கரநாராயணன்
பதிப்பகம்: புஷ்தகா டிஜிட்டல்
மீடியா பி.லிட், 7-002 மந்திரி ரெசிடன்ஸி, பன்னீர்கட்டா மெயின் ரோடு, பெங்களூரு 560076, கர்நாடகா, இந்தியா.
தொடர்புக்கு: +91 7418555884
ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் சார்பில் ப்ருந்தாரண்ய க்ஷேத்ர விஜயோத்ஸவம்: சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள், ப்ருந்தாரண்ய க்ஷேத்ர விஜயோத்ஸவம் கண்டருளினார். இதில் எண்ணற்ற பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ அலர்மேல் மங்கா சமேத ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள், ஆச்சார்யர்கள் மற்றும் ஸ்வாமி தேசிகனை தரிசித்தனர்.
சென்னை, மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் கோயில், 4 நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றியதாக அறியப்படுகிறது. 1832-ம் ஆண்டில் பக்தர்கள் சிலரால் ஸ்ரீ வேதாந்த தேசிகர், ஹயக்ரீவர் விக்கிரகங்கள் ஸ்தாபிக்கப்பட்டன. 1924-ம் ஆண்டு இந்து குழுமத்தின் பங்களிப்புடன் ஸ்ரீநிவாசப் பெருமாள் மற்றும் அலர்மேல்மங்கை தாயார் விக்கிரகங்கள் ஒரே சந்நிதியில் நிறுவப்பட்டன.
முதலாழ்வார்கள் மூவரில் ஒருவராகிய ஸ்ரீ பேயாழ்வாரின் அவதாரத் தலமாக மயிலாப்பூர் விளங்குகிறது. இங்கு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள், ப்ருந்தாரண்ய க்ஷேத்ர விஜயோத்ஸவத்தை முன்னிட்டு, அண்மையில் திருவல்லிக்கேணியில் தேரடித் தெருவில் அமைந்திருக்கும் அஹோபில மடத்துக்கு எழுந்தருளி திருமஞ்சனம் கண்டருளினார். மேலும் திருவல்லிக்கேணி மாட வீதிகளில் புறப்பாடு நிறைவடைந்து நிறைவில் திருமயிலை திரும்பினார். உற்சவத்துக்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தாக்கள் ஆர்.ராகவன், ஆர்.அனந்த பத்மநாபன், ஆர்.முகுந்தன் செய்திருந்தனர்.