

நாகப்பட்டினம் மாவட்டம், திருப்புகலூரில் உள்ள அக்னிபுரீஸ்வரர் கோயில் ஆனந்த வாழ்வு அளிக்கும் தலமாக போற்றப்படுகிறது. தனது 81-வது வயதில் அப்பர் பெருமான் இத்தலத்தில் முக்தி பெற்றார். முக்காலத்தையும் உணர்த்தும் இறைவன் கோயில் கொண்ட தலம், அக்னி தேவன் சாபம் நீங்கப் பெற்ற தலம், திருமணத் தடை நீக்கும் தலம், சுந்தரின் செங்கல் லுக்கு பதிலாக இறைவன் தங்கக் கல் வழங்கிய தலம், பூ தொடுத்து இறைவனுக்கு சேவை புரிந்த முருக நாயனார் அருள் பெற்ற தலம் என்று பல சிறப்புகளைப் பெற்றுள்ளது திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோயில்.
கடந்த காலத்தை உணர்த்தும் பூதேஸ்வரர், நிகழ் காலத்தை உணர்த்தும் வர்த்தமானீஸ்வரர், எதிர்காலத்தை உணர்த்தும் பவிட்ச்சேயேஸ்வரர் ஆகிய மூர்த்திகள் இக்கோயிலில் வீற்றிருக்கின்றனர். இவர்களை வணங்குவதால், முப்பிறவியில் செய்த பாவம், தோஷம் விலகும், இக்காலத்தில் நன்மைகள் கிடைக்கும், வருங்காலத்தில் பல வகையான செல்வங்கள் நம்மை வந்தடையும் என்பது நம்பிக்கை.
தேவாரப் பாடல்கள் இயற்றிய சுந்தரமூர்த்தி நாயனார், ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திர தினத்தில் சிவபெருமானுக்கு பூஜைகள் செய்து, சிவனடியார்களுக்கு புதிய ஆடைகள் அளித்து, இன்னமுது இட்டு மகிழ்வார். ஒருசமயம், தனக்கு சோதனை ஏற்பட்ட சமயத்தில், உதவி தேடி சுந்தரர் அலைந்த சமயத்தில், திருப்புகலூர் வந்தடைந்தார். கோயில் வாசலில் செங்கல், மணல் கொட்டப்பட்டு புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன.
சற்று ஓய்வு எடுக்க நினைத்த சுந்தரர், ஒரு செங்கல்லை எடுத்து தலையில் வைத்து, ஆற்று மணலில் படுத்துக் கொண்டார். மனது முழுவதும் தனக்கு சிவபெருமான் உதவ வேண்டும் என்ற எண்ணமே ஓடியது. அடுத்த நாள் காலை எழுந்து பார்த்தால், தான் தலையில் வைத்திருந்த செங்கல், ஜொலித்தது. அது தங்கக் கல்லாக மாறியிருந்தது.
மகிழ்ந்த சுந்தரர் உடனே, ‘என்னே உன் கருணை’ என்ற பதிகம் பாடினார். ஒருசமயம் அக்னி தேவனுக்கும் வாயுதேவனுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. தான் நினைத்தால் உலகையே அழித்து விடுவேன் என்று அக்னிதேவன் கூறுகிறார். அதற்கு பதில் அளித்த வாயு, “அக்னிதேவா நீ என் மகன். உன் சக்திகள் அனைத்தும் எனக்கு மீறியவை அல்ல. தந்தையை மிரட்டிய உனக்கு இனி உலகில் இடமில்லை” என்கிறார்.
திகைத்த அக்னிதேவன் இதுதொடர்பாக குலகுரு பிரஜாபதியிடம் தெரிவிக்கிறார். தந்தையின் சாபத்தில் இருந்து விடுபட தனக்கு ஆலோசனை வழங்கும்படி கேட்கிறார். பிரஜாபதி, திருப்புகலூர் சென்று சிவபெருமானை வழிபட்டால், சாபவிமோசனம் பெறலாம் என்று அக்னிதேவனுக்கு வழி கூறுகிறார்.
அக்னிதேவன் திருப்புகலூர் தலம் வந்து, கோயிலுக்கு அருகில் இருந்த தீர்த்தத்தில் நீராடி, சிவபெருமானை வழிபட்டு, கோயிலுக்கு வெளியே ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து கடும் தவம் புரிந்தார். அக்னிதேவனின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், அவருக்கு சாபவிமோசனம் அளித்தார்.
இக்கோயிலில் அக்னிதேவனுக்கு தனி சந்நிதி உள்ளது. 7 சுடர்கள், 3 கைகள், 3 கால்கள் என்று இவர் வித்தியாசமான தோற்றத்தில் இருப்பார். அக்னிதேவன் தினமும் நீராடிய தீர்த்தம் அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இத்தல மூலவர் அக்னீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
கோயில் கோபுரம் 90 அடி உயரத்துடன், 5 நிலைகள் கொண்டு அமைந்துள்ளது. உள்ளே சென்றால் உள் கோபுரம், நந்தி, பலிபீடத்தை தரிசனம் செய்யலாம். கருவறையில் தலை சாய்ந்த நிலையில் அக்னீஸ்வரர் (கோணப்பிரான்) அருள்பாலிக்கிறார். அருகே தனிசந்நிதியில் கருந்தாள் குழலி அம்பாள் அருள்பாலிக்கிறார்.
இவருக்கு மாலை வேளையில் வெள்ளை நிற புடவை சாற்றி வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம். கோயிலுக்குள் விநாயகர், சந்திர சேகரர், வர்த்தமானீஸ்வரர், நடராஜர், தட்சிணாமூர்த்தி, பிரம்மதேவர், துர்கை, அகத்தியர், பிட்சாடனர், சனிஸ் வரர், நளன், நவக்கிரக சந்நிதிகள் காணப்படுகின்றன. பாணாசுரனின் தாய் சிறந்த சிவபக்தையாக இருந்தாள்.
தாயின் சிவ வழிபாட்டுக்காக, பாணாசுரன் எங்கிருந்தாவது தினம் ஒரு சிவலிங்கத்தைப் பெயர்த்து வந்து அளிப்பது வழக்கம். அப்படி திருப்புகலூர் வந்து சிவலிங்கத்தைப் பெயர்த்தபோது, அவரால் பெயர்க்க இயலவில்லை. அதிக ஆழத்தில் தோண்டியபோது, தண்ணீர் வரத் தொடங்கியது.
பாணாசுரன் வெட்டிய பள்ளத்தில் நீர் நிறைந்தது. அதுவே பாணதீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. முருக நாயனார் தினமும் இத்தலத்தில் சிவபெரு மானுக்கு, மாலைகள் சாற்றி வழிபட்டதால், ஈசன் காட்சியருளினார். இக்கோயிலில் வாஸ்து பூஜை செய்தால், வீடு தொடர்பான பிரச்சினைகள் தீரும் என்பது நம்பிக்கை.
அமைவிடம்: நாகப்பட்டினத்தில் இருந்து 24 கிமீ தொலைவில் உள்ளது திருப்புகலூர்.