

உடுப்பி பெஜாவர் மடாதிபதி ஸ்ரீ விஸ்வ பிரசன்ன தீர்த்தர் சுவாமிகள், சாதுர்மாஸ்ய விரதத்தை கடைபிடிக்கும் பொருட்டு ஜூலை 21-ம் தேதி முதல் செப்டம்பர் 18-ம் தேதி வரை சென்னையில் இருப்பார். மேலும், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். சுவாமிஜியின் வருகையை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலைச் சுற்றியுள்ள மாடவீதிகளில் பிரம்மாண்ட அளவில் ஊர்வலம் நடைபெற்றது.
முதல் வரிசையில் அயோத்தி பால ராமர் செல்ல, அவரைப் பின் தொடர்ந்து, சின்னஞ்சிறு குழந்தைகள் கோலாட்டம் ஆடியபடியும், ராமரின் பக்திப் பாடல்களுக்கு, நடனப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் நடனமாடியபடியும் சென்றனர். வேத விற்பன்னர்கள் வேதம் ஓதியபடி செல்ல, குதிரை வண்டியில் அமர்ந்தபடி பக்தர்களுக்கு சுவாமிஜி ஆசி வழங்கினார்.
பின்னால் பஜனை பாடியபடி இசை விற்பன்னர்கள் சென்றனர். ஊர்வலம் நிறைவுபெற்றதும் சுவாமிஜி திருவல்லிக்கேணி ஸ்ரீ வியாசராஜ மடத்தில் உரையாற்றினார். இவ்விழாவில் பங்கேற்ற அனந்த பத்மநாபாச்சாரியார் சுவாமி, ராமாயணம், ஸ்ரீ விஸ்வ பிரசன்ன தீர்த்தர் பற்றி உரை நிகழ்த்தினார்.