கிரஹ தோஷங்கள் நீக்கும் திருவக்கரை சந்திரமௌலீஸ்வரர்

கிரஹ தோஷங்கள் நீக்கும் திருவக்கரை சந்திரமௌலீஸ்வரர்
Updated on
2 min read

விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை (வக்ராபுரி) சந்திரமௌலீஸ்வரர் கோயிலில் மும்முக லிங்கமாக அருள்பாலிக்கிறார் ஈசன். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவன் கோயில்களில் இது 263-வது தலம் ஆகும்.

டக்கில் நேபாளத்திலும், தெற்கில் ஆந்திராவில் உள்ள காளஹஸ்தியிலும் உள்ளது. 3 முகம் கொண்டு சிவபெருமான் அருள்பாலிப்பது திருவக்கரையில் மட்டுமே. இத்தலத்தில் 3 முகத்துடன் சிவபெருமான், கிழக்கில் தத்புருஷ முகமாகவும், வடக்கே வாமதேவ முகமாகவும், தெற்கே அகோர முகமாகவும் அருள்பாலிக்கிறார்.

தெற்கில் உள்ள அகோர முகத்தில் வாயின் 2 ஓரங்களிலும் 2 கோரைப் பற்கள் உள்ளன. பால் அபிஷேகம் செய்யும்போது மட்டுமே இவற்றைத் தெளிவாகக் காணமுடியும்.

கொடிமரமும் கருவறையும் நேராக இல்லாமல் வடபுறம் சற்று விலகி வக்கிரமாக உள்ளது.பொதுவாக அனைத்துக் கோயில்களிலும் கோபுர வாசலில் இருந்தே சுவாமியை தரிசனம் செய்யமுடியும். ஆனால் இத்தலத்தில் ராஜகோபுரம், கொடிமரம், நந்தி பகவான், சுவாமிஅனைத்தும் நேர்க்கோட்டில் இல்லாமல் ஒன்றைவிட்டு ஒன்று விலகி வக்கிர நிலையில் உள்ளன.

மூலவர் மும்முக லிங்கமாக அருள்பாலிக்கிறார். காளி கோயிலின் எதிரில் மேற்கே ஆத்மலிங்கம் உள்ளது. இது கண்ட லிங்கம் என்றும் அழைக்கப்படும். கண்ட லிங்கத்தை வக்ராசூரன் பூஜித்துள்ளான். இந்த லிங்கம் கோடைகாலங்களில் குளிர்ச்சியாக இருக்கும். மழைக் காலங்களில் லிங்கத்தின் மேல் பகுதியில் முத்து முத்தான நீர்த்துளிகள் காணப்படும்.

பௌர்ணமி தினத்தில் இரவு 12 மணிக்கும் அமாவாசை தினத்தில் பகல் 12 மணிக்கும் வக்ரகாளியம்மனுக்கு ஜோதி தரிசனம் காட்டும்போது லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுகின்றனர். வக்ரகாளியம்மன் சந்நிதியின் கோபுர மண்டபத்துக்கு மேல் சூடம் ஏற்றுவார்கள். வக்ரகாளியின் இடது பாகத்தில் சக்கரம் உள்ளது. வக்ரகாளியின் வலது காதில் சிசு (குழந்தை) குண்டலம் உள்ளது. வக்ரகாளி இங்கு சாந்த சொரூபமாக அருள்பாலிக்கிறார். அம்பாள் சந்நிதிக்கு எதிரில் மயான பூமி உள்ளது குறிப்பிடத்தக்கது.

குண்டலினி சித்தர் இங்கு ஜீவசமாதி அடைந்துள்ளார். அவரது ஜீவசமாதி கோயிலுக்குள்ளேயே உள்ளது. வக்ராசூரன் என்ற அசுரனை வரதராஜப்பெருமாள் அழித்தார். அந்த வக்ராசூரனின் சகோதரி துன்முகி. துன்முகியை வக்ரகாளி சம்ஹாரம் செய்யும்போது அவள் கர்ப்பமாக இருந்தாள். குழந்தையை வதம் செய்யக்கூடாது என்பதால், கருவில் உள்ள குழந்தையை தனது வலது காதில் குண்டலமாக அணிந்து கொண்டு, துன்முகியை வக்ரகாளி வதம் செய்தார். அப்படியே இத்தலத்தில் அமர்ந்துவிட்டார் வக்ரகாளி.

ஓங்காரமாக இருந்தகாளியை சாந்தமாக்க வேண்டும் என்பதால் ஆதிசங்கரர், அவரது இடதுபாதத்தில் சக்ரராஜ எந்திரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார். இதனால் வக்ர சாந்தி திருத்தலம் என்று இத்தலத்துக்கு பெயர் கிடைத்தது.

சுடர் விட்டு பரவும் தீக்கங்குகளைப் பின்னணியாகக் கொண்ட தலை, மண்டை ஓட்டுக் கிரீடம், வலது காதில் சிசுவின் பிரேத குண்டலம் அணிந்து 8 திருக்கரங்களுடன் வக்ரகாளி அருள்பாலிக்கிறார். தனது கரங்களில் பாசம், சக்கரம், வாள், காட்டேரி, கபாலம் ஏந்தியுள்ளார். பகைவர்களின் தலைகளையே மாலையாகதொடுத்து முப்பிரி நூலாக அணிந்துள்ளார்.

விசேஷ நாட்களில், சந்திர மௌலீஸ்வரருக்கு 1,008 (சஹஸ்ர) கலசாபிஷேகம், வக்ரகாளியம்மனுக்கு 1,008 சங்காபிஷேகம் மற்றும் சித்திரை மாதம் பௌர்ணமியின் மறுநாள் 1,008 பால்குட அபிஷேகம் நடைபெறும்.

மனநிம்மதி கிடைக்க, கிரஹ தோஷங்கள் நீங்க, காரியத் தடை விலக, பூர்வ ஜென்ம பாவங்கள்விலக, புத்திர தோஷம் விலக சந்திர மௌலீஸ்வரரை பக்தர்கள் வணங்குகின்றனர். வக்ர தோஷம்நிவர்த்தி பெற, திருமணத் தடை நீங்க, ஜாதக கிரஹதோஷங்கள் விலக, வியாபாரம் அபிவிருத்தி ஆக, குழந்தை பாக்கியம் பெற வக்ரகாளியம்மனை வழிபடுவது இன்றும் நடைபெறுகிறது.

நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருப்பவர்கள், வக்ரகாளி சந்நிதி அருகே உள்ள தீபலட்சுமி அம்மனுக்கு திருமாங்கல்ய கயிறு கட்டி, எலுமிச்சம் பழ தீபம் ஏற்றுவது வழக்கமாக உள்ளது. எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் கோரிக்கை சீட்டு எழுதி சூலத்தில் கட்டுவதை இன்றும் பக்தர்கள் செயல்படுத்தி வருகின்றனர்.

இன்னும் மொட்டை அடித்தல், காதணி விழா நடத்துதல், அபிஷேகங்கள், அங்கப்பிரதட்சணம் செய்தல், குத்துவிளக்கு, சர விளக்கு வாங்கி வைத்தல், துலாபாரம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்துவதும் நடைபெறுகிறது. இக்கோயிலை வலம் வர நினைப்பவர்கள், வலது பக்கமாக 5 முறையும், இடது பக்கமாக 4 முறையும் சுற்றி வர வேண்டும்.

அமைவிடம்: திண்டிவனத்தில் இருந்து 27 கிமீ தொலைவில் உள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in