

புதுப் புனலாக ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுக்கும் காலம். பூமித்தாயே சூல் கொண்டு பயிர்கள் அனைத்தையும் கருக்கொள்ளும் காலம். விவசாயம் செழித்து வளம் பெருக அம்பிகையை வழிபடக் கூடிய காலம் இந்த ஆனி, ஆடி மாதங்களாகும். இந்த காலத்தில் விவசாயம் தழைத்து தானிய அபிவிருத்தி காண காத்தருளும் தேவி வராகி தேவி ஆவாள்.
வராகியின் ரூப தியான ஸ்லோகம் அம்பிகையின் கரங்களில் விவசாயத்துக்கு ஏற்ற ஏர் கருவியும் உலக்கையும் கொண்டு அருள்வதாக உள்ளது. ஆதலால் அன்னை வராகியை மனம் உருக பிரார்த்தனை செய்யவே ஆஷாட நவராத்திரி வழிபாடு அமைந்துள்ளது.
தேவி புராணங்களின்படி வராகி தேவி, சப்த மாதர்களில் ஒருவராக வணங்கப்படுகிறார். வராக புராணத்தின்படி, அஷ்ட மாத்ருகர் தேவதைகளில் ஒருவராகவும் வணங்கப்படுகிறார். அன்னை மகா சக்தியிடமிருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் இந்த சப்த கன்னியர் (பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி). இவர்களில் பெரிதும் மாறுபட்டவள் இந்த வராகி. மனித உடலும் பன்றி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள்.
இவளது ரதம் இருசக்கர காட்டு பன்றிகள் இருக்கும் ரதம் ஆகும். வார்த்தாளி என்று அழைக்கப்படக் கூடிய வராகி ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத் தலைவிகளில் ஒருவராக விளங்க கூடியவள். வீட்டில் என்றும் தானியங்கள் நிறைந்து இருக்க செய்பவள். பஞ்சமி என்னும் வராகியின் பெயர் விசேஷமானது. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அனுக்ரஹித்தல் எனும் ஐந்தொழில்களில் ஐந்தாவது தொழிலை புரியும் சதாசிவர் ஆத்ம வித்தையை அருளும் ஆச்சரிய வடிவத்தின் அனுக்ரஹ வடிவமே வராகி. இவள் தத்துவ வளமையும், செழுமையும், மகிழ்ச்சியும் பெற்று தருவாள் என்பதில் ஐயமில்லை.
பராசக்தி அம்சமான வராகி, சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து பஞ்சமி திதியில் உதித்தவர். இரவு நேரத்தில் தான் வராகி அநியாயங்களை அழிக்க புறப்படுகிறார் என்பது ஐதீகம். வருடத்தின் ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை முதல் நவமி வரையிலான திதிகள் மகாசக்திக்கு உகந்த தினங்களாகும். இந்த 12 மாதங்களுக்கும் 12 விதமான நவராத்திரிகள் உண்டு என்று சாக்த சாஸ்திரங்கள் உரைக்கின்றன. அந்த பனிரெண்டிலும் மிக முக்கியமானவை இந்த 4 நவராத்திரிகள் ஆகும்.
பங்குனி மாதம் அமாவாசைக்கு பின்வரும் ஒன்பது நாட்கள் ‘வசந்த நவராத்திரி’ என்றும், ஆனி மாதம் அமாவாசைக்கு பின்வரும் ஒன்பது நாட்கள் ‘ஆஷாட நவராத்திரி’ என்றும், புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பின்வரும் ஒன்பது நாட்கள் ‘சாரதா நவராத்திரி’ என்றும், தை மாதம் அமாவாசைக்கு பின்வரும் ஒன்பது நாட்கள் ‘மகான் நவராத்திரி’ என்றும் அழைக்கப்படுகின்றன.
ஆஷாட நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும் சப்த மாதா தெய்வங்களை வழிபடும்முறை உள்ளது. முதலாம் நாள் இந்திரா தேவி (இந்திராணி), இரண்டாம் நாள் பிரம்மதேவி (ப்ராஹ்மி), மூன்றாம் நாள் விஷ்ணு தேவி (வைஷ்ணவி), நான்காம் நாள் சிவதேவி (மகேஸ்வரி), ஐந்தாம் நாள் குமாரதேவி (கௌமாரி), ஆறாம் நாள் ருத்ரதேவி (காளி சாமுண்டி), ஏழாம் நாள் சாகம்பரி தேவி, எட்டாம் நாள் வராகி தேவி, ஒன்பதாம் நாள் லலிதா பரமேஸ்வரி என வரிசைப்படுத்தி ஆஷாட நவராத்திரியில் அன்னை பராசக்தி வழிபாடு செய்வது சிறப்பாகும்.
ஆதி தெய்வமான ஸ்ரீ வராகி அம்மன் ஞானத்தின் கருப்பொருளாகவும் ஸ்ரீ சக்கரத்தில் நான்கு மூலைகளிலும் சேனாதிபதியாகவும் நிற்கிறாள் என்று அகத்திய மாமுனிவர் வராகி அன்னையின் அருளை ஸ்ரீ சக்கரத்தின் வாயிலாக தெரிவிக்கிறார். ஆஷாட நவராத்திரியிலும், ஒவ்வொரு மாதமும் வரும் வளர்பிறை, தேய்பிறை, பஞ்சமி திதியிலும் பசு நெய் விளக்கேற்றி ஸ்ரீ வராகி தேவியை வழிபட்டால் பிணிகள் அனைத்தும் சூரியனை கண்ட பனிபோல் விலகி ஓடும் என்பது ஐதீகம்.