

மகான்கள் எவ்வளவுதான் தங்களை ஒளித்துக் கொள்ள விரும்பினாலும் இறை அவர்களை விடுவதில்லை. அன்னையர்க்கு எல்லாம் அன்னையாக, வாழும் தெய்வமாக குமரியில் அமர்ந்து வருபவர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் தேவி மாயம்மா.
மனித வாழ்வின் நோக்கம் அடுத்த பிறவி என்பதை இல்லாமல் செய்துகொள்வதுதான். ஒருக்கால் பிறவிகளின் மீது நம்பிக்கையே இல்லாவிட்டாலும் கூட, பிறவி இல்லாமல் செய்துகொள்ள ஒருவரால் முடியவேண்டும் என்ற கருணையோடு ஒரு பெருவாக்கியம் மறையால் சொல்லப்படுகிறது. அஃது யாதெனில் ‘மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதாகும்.
இதை வலியுறுத்தி மக்களைக் கரையேற்றுவதற்காகவே தொண்டே தெய்வமென வாழ்ந்தனர் பல பெரியோர். கண்முன்னே, கூடவே வாழ்பவர்களுக்குக் கூட வாழ்நாளில் அவர்களின் மேன்மை புரியாமல் போய்விடுகிறது. மறைந்தபின்பே கொண்டாடும் வழக்கமாகி விட்டது.
அத்தகைய பேரருளாளர்களுள் ஒருவர் பாரதத்தின் தென் முனையில் ஒரு ஓரமாக ஒளிந்து வாழ்ந்து வந்திருக்கிறார். தன் குழந்தைகளான உயிர்களின்மீது கொண்டகருணையால் இறை, அவர்களை வெளிக்கொண்டு வந்துவிடுகிறது.
அழுக்கேறிய உடை, சடை பிடித்த தலை, தெருவோரம் நாய்களுடன் வாசம் இப்படியெல்லாம் தங்களை மறைத்துக் கொண்டாலும், அவர்கள் இதயத்திலிருந்து காட்டாற்று வெள்ளமெனப் பெருகும் கருணைக்கு அவர்களால் அணை போட முடிவதில்லை. ஏனெனில் அது இறையின் திருவுள்ளம்.
எங்கிருந்து வந்தார், எத்தனை வயதாகிறது, பூர்வீகம், குலம் கோத்திரம் எதுவும் தெரியாது. நாய்களின் தோழி அவர். பிச்சை எடுக்கமாட்டார். தானாக யாராவது கொடுப்பதை தன்னைச் சூழ்ந்திருக்கும் வாயில்லா உயிர்க் கூட்டத்துக்குப் பகிர்ந்தளிப்பார்.
ஒரு பெருஞ் சமுதாயத்துக்குப் பயன்படவேண்டிய பேரருளை எவ்வளவு நாள்கள் இப்படி ஒளிக்க முடியும்?
இறையின் சிரிப்பில் அவளைச் சூழ்ந்திருந்த உயிர்களுள் ஒன்று திடீரென்று நாலு கால் பாய்ச்சலில் ஓடியது. சாலையைப் பற்றியோ, இலக்கின்றி தங்களைப் போலவே அங்குமிங்கும் வாகனங்களில் அலையும் மாந்தர் கூட்டம் பற்றியோ, அதற்குக் கவலையில்லை.
தான் பெற்ற அன்பெனும் பேரமுதை உலகில் பெருக்கெடுத்து ஓடவிடவேண்டாமா? அதற்காக ஓடிற்று. கண்ணிமைக்கும் நேரத்தில் ஏதோ ஒரு வாகனத்தில் அடிபட்டுக் குருதி பெருகியது. குடல்கள் வெளியே விழுந்தன, பதைபதைத்துப் போய், அதைவிட வேகமாகப் பாய்ந்து வந்தது பேரருள். நட்டநடுச் சாலையில் அமர்ந்து நாயை வாரி மடியில் போட்டுக்கொண்டது, சாலையில் விழுந்துகிடந்த குடல்களை அள்ளி கிழிந்திருந்த வயிற்றினுள் போட்டு மூடியது.
கைக்குக் கிடைத்த சணலையும் பொருள்களையும் வைத்துச் சுற்றி, தடவிக் கொடுத்து முத்தமிட்டது, தன் நோக்கம் நிறைவேறிய மகிழ்ச்சியில் மீண்டும் நக்கிக் கொடுத்துவிட்டுத் துள்ளிக் குதித்தோடியது அந்த நன்றியுள்ள உயிர்.
அதுவரை இரந்துவாழ்பவர் என்றெண்ணப்பட்டவரை இப்போது இறை என்று ஏற்றிவைத்துக் கொண்டது இவ்வுலகு. கண்ணிமைக்கும் நேரத்தில் காற்றாய்ப் பரவியது செய்தி. கடற்கரையில் கூடியதுமக்கள் கடல். தொட்டதெல்லாம் பொன்னாயிற்று. நோய்களெல்லாம் ஒரு தொடுகையில் பறந்தன.அவரது நாய்களோ சிறப்புத் தகுதி பெற்றன.ஊரே வணங்கிய போதிலும் மாறுமோ பேரருளின் பாங்கு?
பல சமயங்களில் மணிக்கணக்காக கடல் நீரில் மிதந்த வண்ணம் இருப்பார். அவரை தேவி, மாயம்மா, மாயி, பகவதி என்று மக்கள் அன்போடு அழைத்தனர். கோயிலுக்கு வெளியே உலாவும் பகவதி அம்மன் என்று குமரி மக்களால் வழிபடப்பட்டார். நாய்கள் சூழ வீதி உலா வருவார். எப்போதாவது இந்தியில் ஓரிரு வார்த்தைகள் பேசுவார்.
ஒரு முறை ராஜமாணிக்கம் நாடார் தபோவனம் சென்று ஞானானந்தரை தரிசித்து, குமரி சென்று வந்தேன் என்று சொன்னார். அங்கே என்னவெல்லாம் பார்த்தாய்? என்று கேட்டார் ஞானி. கடல், விவேகானந்தர் பாறை, பகவதி அம்மன் என்று வந்தவர் சொல்லிக்கொண்டே போக, அங்கே ஒரு ரத்தினம் இருக்கிறது. பார்த்தாயா? என்று கேட்டார். ஆம். பகவதி அம்மனின் மூக்கில் ஒளிர்ந்ததே என்று ராஜமாணிக்கம் கூறினார்.
இல்லையில்லை. நாம் சொல்லும் ரத்தினம் கோயிலுக்கு வெளியே யாருமறியா வண்ணம் உலவி வருகிறது என்றதும், மீண்டும் குமரிக்கு ஓடினார் ராஜமாணிக்கம் நாடார்.
பயன் பெற்ற ஊராருக்கு தேவியைப் பற்றி ஒரு விவரமும் தெரியவில்லை. தெய்வத்தின் அருளால் வேலையாகிறது. எனவே தரிசனம் செய்யவேண்டும். ஆனால் தெய்வம் எப்படி இருந்தால் என்ன? அதன் வரலாறு, மகிமைகள், இருப்பிடம், உணவு, உடை மற்றும் இன்ன பிறவற்றைப் பற்றி அவர்கள் அறிய வேண்டிய அவசியம்தான் என்ன? பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடரும் மனிதகுலத்தின் இயல்புகளை மாற்றிவிட முடியுமா?
ஞானானந்தர் காட்டிக் கொடுத்த மாணிக்கத்தைக் கண்டு வியந்துபோனார் ராஜமாணிக்கம் நாடார். மாயம்மா சமாஜம் இவரது முயற்சிகளால் உருவானதே.
குமரியைத் தாண்டி எங்கும் வெளியில் சென்றறியாத தேவி மாயம்மா ஒரு முறை ராஜமாணிக்கம் நாடாரின் துணையோடு தூத்துக்குடி சென்று பின் திண்டுக்கல்லுக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து திருவண்ணாமலைக்குச் சென்றார்.
அங்கே யோகி ராம் சுரத்குமாருக்கும் மாயம்மாவுக்கும் ஏறத்தாழ பன்னிரண்டு மணி நேரம் மௌன உரையாடல் நடைபெற்றது. கிளம்பும்போது “காம் ஜல்தி கரோ” என்று யோகியிடம் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார் மாயம்மா. அதுவே யோகியை அவரது அவதார நோக்கத்தை விரைவில் நிறைவேற்றச் சொல்லும் ஆணையாக அமைந்தது.
யோகி ராம் சுரத்குமாரும் ஒளிந்து வாழ்ந்த மாணிக்கம்தான். அவரையும் ஞானானந்தர்தான் இவ்வுலகோர்க்கு வெளிச்சமிட்டுக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. தேவி மாயம்மாவின் சமாதி சேலத்தில் இருக்கிறது.
அறிவுரைகள், பாடல்கள், புத்தகங்கள் எதுவும் எழுதியதில்லை. ஆனால் பார்ப்பது, சின்னத் தொடுகை, சிரிப்பு இவற்றைப் பேரன்பின் கருவிகளாக்கி மனித சமுதாயத்தின் உடல் நோய்களை நீக்கி மகிழ்ச்சி நிலவச் செய்திருக்கிறார்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலின் வெளிச்சுற்றில் தேவி மாயம்மாவுக்கு ஒரு சிறிய சந்நிதி இருக்கிறது. பார்க்கும்போதே நமது பாட்டி நினைவுக்கு வருகிறது.