

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிம்மாசலம் (சிங்கவரம், விஷ்ணு செஞ்சி) ரங்கநாதர் கோயிலில் 14 அடி நீளமுள்ள சயனப் பெருமாளை வணங்குபவர்களுக்கு எமபயம் கிடையாது என்று கூறப்படுகிறது. குடவரைக் கோயிலான இத்தலம் சிற்பக் கலைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
இரணிய கசிபு என்ற அசுர மன்னன், தானே கடவுள், அனைவரும் தன்னையே இறைவனாக நினைத்து வணங்க வேண்டும் என்று தன் நாட்டு மக்களுக்கு ஆணை பிறப்பித்தான். இதை அனைவரும் ஏற்கவும் செய்தனர். இருப்பினும் அவனது மகன் பிரகலாதன் இதற்கு செவி சாய்க்கவில்லை. அவன் எண்ணம், செயல் அனைத்திலும் நாராயணனே நிறைந்திருந்தான்.
மகன் என்றும் பாராமல் அவனுக்கு பல இன்னல்களைக் கொடுத்தான் இரணியன். ஒரு கட்டத்தில் மகனையே கொல்லத் துணிந்தான். அனைத்து சோதனைகளில் இருந்தும் மீண்டு வந்தான் பிரகலாதன். தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் நாராயணன் என்று பிரகலாதன் கூறக் கேட்டதும், ஒவ்வொரு தூணாக உடைக்க எண்ணினான் இரணியன்.
ஒரு தூணைக் காட்டி இதில் உன் நாராயணன் இருக்கிறானா என்று பிரகலாதனிடம் கேட்டான் இரணியன். இருக்கிறான் என்றதும் அந்தத் தூணைப் பிளந்தான் இரணியன். தூணில் இருந்து வெளிப்பட்ட சிங்கமுகன் (நரசிம்ம அவதாரம்) இரணியனை தன் மடியில் கிடத்தி, தன் கூரிய நகங்களால் பிளந்து மாய்த்தார். பிரகலாதனை தன்னருகில் வைத்துக் கொண்டார்.
இதன் மூலம் அசுர குலத்தில் பிறந்தாலும் நற்குணத்துடன் வாழலாம் என்று உலகுக்கு உணர்த்துகிறார் நரசிங்கப் பெருமாள். இக்கருத்தையே இத்திருத்தலம் அனைவ ருக்கும் உணர்த்துகிறது. மலையடிவாரத்தில் உயர்ந்த ஊஞ்சல் மண்டபம் அமைந்துள்ளது. கோயிலுக்குச் செல்லத் தொடங்கும் இடத்தில் ரங்கநாதரின் திருப்பாதம், ஆஞ்சநேயரின் திருவுருவம் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளன.
160 படிகளைத் தாண்டி நுழைவு வாயிலை அடைந்தால், 5 நிலை ராஜ கோபுரத்தைக் காணலாம். வரதராஜர் சந்நிதிக்கு அருகே லட்சுமி தீர்த்தம் என்ற திருக்குளம் உள்ளது. சக்கரத்தாழ்வார், நவபாஷாண கருடர், ராமானுஜர், தேசிகர் சந்நிதிகளை தரிசித்த பின்னர் 9 படிகள் ஏறி ரங்கநாதரை சேவிக்கலாம்.
14 அடி நீளத்தில் சயன கோலத்தில் ரங்கநாத பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அரங்கனின் நாபிக் கமலத்தில் நான்முகன், இடது புறம் கந்தர்வர், வலது புறம் கருடன், மதுகைடபர்கள், திருவடி அருகே பூதேவி, நாரதர் மற்றும் பிரகலாதன் உள்ளனர். நரசிம்மர் கோயில்களில் மட்டுமே காணப்படும் பிரகலாதனை, அரங்கனின் கோயிலில் காண்பது அரிது.
பிரகலாதனின் விருப்பத்தின்படி பெருமாள் சயனகோலத்தில் ரங்க நாதராக அருள்பாலித்ததாகக் கூறப் படுகிறது, செஞ்சியை ஆண்ட ராஜா தேசிங்குவின் குல தெய்வம் ரங்கநாதர். ரங்கநாதருடன் ராஜா தேசிங்கு நேரடியாகப் பேசும் அளவுக்கு தீவிர பக்தர் என்று கூறப்படுகிறது.
ராஜா தேசிங்கு ஒரு முறை போருக்குச் செல்லும்போது, போருக்குச் செல்லவேண்டாம் என்று பெருமாள் தடுத்தார். அதையும் மீறி போருக்குச் சென்றார் ராஜா தேசிங்கு. உடனே அரசர் மீது பெருமாள் கோபம் கொண்டு தெற்கு நோக்கி முகத்தை திருப்பிக் கொண்டதாக கூறப்படுகிறது. தென் திசை தெய்வமான யமனை எச்சரிக்கும் விதமாகவும் பெருமாள் இப்படி திரும்பியுள்ளார் என்றும் கூறுவர்.
ரங்கநாதர் கோயில் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறப்படுகிறது. மகேந்திரவர்ம பல்லவன் காலத்தில் கட்டப்பட்ட குடவரைக் கோயில் என்பர். மகேந்திரவர்மனின் தந்தை சிம்மவிஷ்ணு ஒரு சமயத்தில் தான் அமைத்த அரண்மனை நந்தவனத்தில் உலா வந்து கொண்டிருந்தார்.
அப்போது ஒரு வராகம் அங்கு பூத்த மலர்களை உண்டு கொண்டிருப்பதைப் பார்த்தார். உடனே அதை விரட்டிச் சென்றார். அப்போது அது நீண்டதூரம் சென்று இந்த மலையின் மீது ஏறி மறைந்து விட்டது. மன்னனும் வராகத்தை விரட்டிக் கொண்டு வந்ததால் ரங்கநாதரை தரிசிக்கும் பேறு பெற்றார். அன்றுமுதல் இந்த ஊருக்கு சிம்மாசலம் என்று மகேந்திரவர்மன் பெயரிட்டார்.
உற்சவர்கள் கோதண்டராமர், லட்சுமி நாராயணர், லட்சுமி வராகர், ஆழ்வார்களை தரிசித்துவிட்டு சென்றால் அருகே ரங்கநாயகி தாயார் சந்நிதி. அமர்ந்த கோலத்தில் 4 கரங்களை உடையவராக அருள்பாலிக்கிறார் தாயார். கரங்களில் வளையல் மாலை சூடி அபய, வரத அஸ்தங்களைக் காட்டி அருள்புரிகிறார். தாயாருடன் துர்கையும் வீற்றிருக்கிறார். துஷ்ட சக்திகளை அழிக்கும் ஆற்றல் பெற்றவர் துர்கை. விக்கிரமாதித்தன் தரிசித்த இந்த துர்கையை சந்நிதியின் ஜன்னல் வழியேதான் தரிசிக்க முடியும்.
வெளிப்பிரகாரத்தில் இருந்து பரமபத வாசல், லட்சுமி வராகர் சந்நிதியைக் காணலாம். குலோத்துங்க சோழனும், விஜயநகர பேரரசர்களும் இக்கோயில் திருப்பணிகளுக்கு பெரிதும் உதவி புரிந்துள்ளனர். பக்தர்கள் பலரும் சஷ்டியப்த பூர்த்தி நிகழ்வை இங்கு செய்து கொள்வது வழக்கம்.
வைகாசி விசாகம், கருட சேவை, மாசி மக உற்சவம், ஆடி வெள்ளி பவித்ரோற்சவம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். மாசி மக நாளில் தீர்த்தவாரியில் மகிழும் ரங்கநாதர், மறுநாள் பாண்டிச்சேரியில் நடைபெறும் தீர்த்தவாரியிலும் கலந்துகொள்வார், ரங்கநாதரின் பாதத்தை சேவித்தவர்கள் அனைத்து செல்வங்களையும் பெறுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எம பயம் நீக்கும் பெருமாளாக, ரங்கநாதர் போற்றப்படுகிறார்.