

சீர்காழி அருகே தில்லைவிடங்கன் என்ற சிற்றூரில் உள்ள தில்லை நாயகி சமேத விங்கேஸ்வரர் கோயில் திருமணம் வரம் அருளும் திருத்தலமாக போற்றப்படுகிறது. சந்திரனின் சாபம் நீக்கிய தலமாகவும் இத்தலம் புகழ் பெற்றுள்ளது. முன்னொரு காலத்தில் தட்சனின் சாபத்தால் சந்திரனின் கலைத்திறன் ஒவ்வொன்றாக பறிபோனது.
மனம் வருந்திய சந்திரன், நாரத மகரிஷியிடம் தன் துன்பத்தை எடுத்துரைக்க, பூலோகத்தில் தில்லையில் பொற்சபையில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் தில்லை அம்பலவாணனை வேண்டி தவம் இயற்றினால் நற்பயன் கிட்டும் என நாரத முனிவர் ஆசி வழங்கினார்.
இதன்படி சிவபூஜை செய்ய நினைத்த சந்திரன் தில்லை அம்பலத்துக்கு தெற்கே நீர் வளமும் நில வளமும் ஒருங்கே பெற்ற பசுமையான அமைதியான ஓர் இடத்தை தேர்ந்தெடுத்தார். அங்கே சந்திர புஷ்கரணி என்ற தீர்த்த குளத்தை நிறுவி, அதன் மேற்குக்கரையில் ஒரு சிவலிங்கத்தை (விடங்கேஸ்வரர்) ஸ்தாபித்தார். பிள்ளை நாயகராக அவரை நினைத்து தவமிருந்தார் சந்திரன். அதன்பயனாக எம்பெருமான் அம்மையுடன் எழுந்தருளி அருள்பாலித்ததால் சாபம் நீங்கப் பெற்றார் சந்திரன்.
இவ்வாறு தில்லைநாயகியுடன் தோன்றி இறைவன் (விடங்கேஸ்வரர்) சந்திரனின் சாபம் நீக்கிய இடமே இன்று தில்லைவிடங்கன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. விடங்கேஸ்வரர் கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முன்னால் அலங்கார வளைவு - அதில் சிவனை சந்திரன் வணங்குவது போல் சுதைச் சிற்பம் - அதை வணங்கி விட்டு உள்ளே சென்றால் நந்தியும் பலிபீடமும் அமைந்துள்ளன. அடுத்தது மகாமண்டபம் வலதுபுறம் தில்லைநாயகி அம்பாள் சந்நிதியில் அம்பாள் தெற்கு முகம்பார்த்து அருள்பாலிக்கிறார்.
கிழக்குதிசை நோக்கி சந்திரன், மேற்கு திசை நோக்கி விநாயகர், பாலகிருஷ்ணன், பாலமுருகன் சந்நிதிகள் அமைந்துள்ளன. அடுத்து அர்த்த மண்டபம். அதில் சந்நிதிகள் எதுவும் கிடையாது. கருவறையில் கிழக்கு நோக்கி லிங்கத் திருமேனியாக சிவபெருமான் அருள்பாலிக்கிறார்.
திருமணத்துக்காக காத்தி ருக்கும் இளம் பெண்கள் தில்லை நாயகியிடமும், திருமணத்துக்காக காத்திருக்கும் ஆண்கள் விடங்கேஸ்வரரிடமும் பிரார்த்தனை செய்தால் தங்கள் மனதில் நினைத்திருக்கும் மணவாழ்க்கை அமையும். மனம் போல் திருமண வாழ்க்கை அமைந்தவர்களுக்கும் திருமண தடை நீங்கி திருமணம் முடித்தவர்களும் தில்லைநாயகி அம்பாளுக்கு நேர்த்திக்கடனாக தாலி அணிவித்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள் கின்றனர்.
கல்வித் தடை நீங்க, சான்றிதழ்கள் விரைவில் கிடைக்க, வேலை கிடைக்க விடங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. குழந்தை பாக்கியம், வழக்கில் வெற்றி பெற தில்லைநாயகிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன.
சீர்காழியில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ளது தில்லைவிடங்கன் திருத்தலம். சீர்காழி பேருந்து நிலையத்திலிருந்து தில்லைவிடங்கனுக்கு மினி பேருந்து வசதி உள்ளது. காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும்.