வடக்கையும் தெற்கையும் இணைத்த பாரதத்தின் மகான்கள்!
பரந்த பாரதத்தில் தோன்றிய அருளாளர்களைப் பற்றிய சீரிய அறிமுகத்தை இளம் தலைமுறையினர்க்கு, கீதா கங்காதரன் ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் `செயின்ட்ஸ் ஆஃப் பாரத்' (Saints of Bharat) புத்தகம் அளிக்கிறது. மும்பையின் ஸ்ரீ புக் சென்டர் பதிப்பித்துள்ள புத்தகத்தை ஆன்மிக உபன்யாசகர் துஷ்யந்த் ஸ்ரீதர் அண்மையில் வெளியிட்டார்.
"தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கர்நாடகம் தொடங்கி, ராஜஸ்தான், ஹரியாணா, ஒடிசா, மகாராஷ்டிரம், காஷ்மீர் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த மகான்களின் வரலாற்றையும் அவர்கள் சமூகத்தில் செய்திருக்கும் மாற்றங்களையும் விரிவாகவும் எளிமையான மொழிநடையிலும் எழுதியுள்ளார் கீதா கங்காதரன்" என்றார் துஷ்யந்த்.
காரைக்கால் அம்மையார், ஆதிசங்கரர் ஆகியோரைப் பற்றி புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் தகவல்களையும் துஷ்யந்த் பகிர்ந்து கொண்டார். `செயின்ட்ஸ் ஆஃப் பாரத்' (Saints of Bharat) புத்தகத்தை துஷ்யந்த் ஸ்ரீதர் வெளியிட, தேவகி முத்தையா, மீனாட்சி முருகப்பன், சுவாமி பத்மாஸ் தானந்தா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
உலகப் பொது மறையான திருக்குறளை அருளியிருக்கும் திருவள்ளுவரில் தொடங்கி, 21-ம் நூற்றாண்டின் இணையற்ற மகானான ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் வரை 31 அருளாளர்களின் வாழ்க்கை சித்திரத்தை நேர்த்தியான எளிமையான வார்த்தைகளில் வடித்துள்ளார் கீதா கங்காதரன்.
அருளாளர்களின் வாழ்க்கையில் நடந்தேறிய அதிசயங்கள், சமூகத்துக்கு அவர்கள் ஆற்றிய பணிகள், படைப்புகளோடு, அவை பாரதத்தின் கலை, பண்பாடு, கலாச்சாரத்துக்கும் அளித்திருக்கும் மரபார்ந்த செல்வத்தையும் அழகியலோடு நம் கண்களுக்கு தரிசனப்படுத்துகிறது.
அருளாளர்களின் வாழ்க்கைச் சம்பவங்களை விவரிக்கும்போது, பாரம்பரியமான நம்முடைய அருளாளர்களிடம் நிறைந்திருக்கும் ஞானத்துக்கும் தற்போதைய நவீன யுகத்தில் வாழும் இளைஞர்களின் புரிதலுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைத்து, எல்லா தலைமுறையினருக்கும் உரிய நூலாக இது அமைந்துள்ளது.
