வேண்டும் வரம் அருளும் திருஆலவாயநல்லூர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர்
மதுரையில் இருந்து 27 கிமீ தொலைவில் உள்ள திருஆலவாயநல்லூர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பக்தர்களுக்கு ஆனந்தப் பெருவாழ்வு அளிக்கும் திருத்தலமாகப் போற்றப்படுகிறது. மதுரையின் எல்லையை அரவம் அளவிட்டுச் சொன்ன திருத்தலமாக இத்தலம் அமைந்துள்ளது தனிச்சிறப்பு.
முன்பொரு காலத்தில், அதுலகீர்த்தி என்ற பாண்டிய மன்னனுக்கு கீர்த்தி பூஷணன் என்கிற மகன் இருந்தான். அவனது ஆட்சியில் பிரளயம் ஏற்பட்டு, கடல் பொங்கி சீற்றமெடுத்தது. உலகம் முழுவதும் கடலுக்குள் மூழ்கிய போதிலும் மதுரை மீனாட்சியம்மன் கோயில், விமானம், பொற்றாமரைக் குளம், யானைமலை, பசுமலை, நாகமலை, பன்றிமலை ஆகியன பிரளயத்துக்கு தப்பி அழியாமல் நிலைத்திருந்தன.
சிறிது காலத்துக்குப் பின் பிரளய நீர் வற்றியது. முன்பு போல புதிய உலகம் தோன்றியது. மறுபடியும் நாடு நகரங்கள் தோன்றின. பாண்டிய நாட்டிலும் மன்னர்கள் ஆளத் தொடங்கினர். அவ்வேளையில், சந்திர குலமாகிய பாண்டிய மரபில் வங்கிய சேகரன் என்பவன் ஆட்சி செய்தான். மதுரையில் வீதிகள் பெருகி, மக்கள் பெருக்கம் கூடி பெரிதும் வளர்ச்சி அடைந்தது. மதுரையின் எல்லை எதுவென வரையறுக்க முடியாமல் பெரும் குழப்பம் நிலவியது. இது குறித்து அச்சமடைந்த மன்னன் தனக்கு வழிகாட்டி உதவுமாறு சோமசுந்தரப் பெருமானிடம் முறையிட்டான்.
அன்புக்கு கட்டுப்படும் அருள்மலை போன்றவராகிய ஈசன் அவன் எதிரில் சித்தரின் வடிவம் தாங்கி எழுந்தருளினார். தனது மேனியில் கங்கணமாக விளங்கிய நாகத்தைப் பார்த்து, ‘நீ உடனே சென்று பாண்டிய மன்னனுக்கு மதுரை மாநகரின் எட்டுத் திக்கு எல்லையையும் கோடிட்டுக் காட்டி வா’ என பணித்தார். ‘அப்படியே ஆகட்டும் ஐயனே! இந்த மதுரை நகரம் அடியேனுடைய பெயரில் காலமெல்லாம் விளங்கும்படியும் அருள் புரிய வேண்டும்’ என பணிவோடு கேட்டுக் கொண்டது அந்த அரவம்.
‘அவ்வாறே ஆகட்டும்’ என வரமளித்தார் சித்த மூர்த்தியாக வந்த இறைவன். பெருமான் உடலில் அணி செய்த கங்கணப்பாம்பு ‘சரசர’வென தரையில் இறங்கியது. மிகப் பெரிய ராட்சத உருவத்தை எடுத்துக் கொண்டது. மதுரையின் கிழக்கு வாயிலுக்குச் சென்று தலையை நிலத்தில் வைத்தது. பிறகு, தனது வாலை வலப்புறமாக நிலத்தில் படிய வைத்தபடி நகரத்தைச் சுற்றி வந்து எல்லைகளைக் காட்டிய பின் தனது வாய்க்குள் வாலைத் திணித்துக் கொண்டு நகரம் முழுவதையும் தனது உடலுக்குள் வைத்து எல்லைகளை தெளிவாய் உணர்த்தியது. இறைவன் தனக்கு இட்ட பணியை சரியாக செய்து முடித்தது.
உடனே மன்னனும் தனது அமைச்சர்களை அனைத்து திக்கிலும் அனுப்பி, நகரின் எல்லை
களை குறித்துக் கொண்டான். பின்னர் நாகமும் தன் பழைய நிலைக்குத் திரும்பி, வழக்கம் போல் எம்பெருமான் திருமேனியில் கங்கணமாக அணியாகியது. அடுத்த கணம் சித்த மூர்த்தி மறைந்து விட்டார். பாம்பு காட்டிக் கொடுத்த எல்லையில் பாண்டிய மன்னன் சுற்றுச்சுவர் எழுப்பி காவல் அரண்கள் அமைத்தான்.
திருப்பரங்குன்றம், பசுமலை, திருவேடகம், திருப்புவனம் ஆகியவற்றுக்கு உள்ளடங்கிய பெரு நகரமாக மதுரையின் எல்லை தீர்மானிக்கப்பட்டது. இதன் காரணத்தால், பாண்டியன் எழுப்பிய பெருமதில் ஆலவாய் மதில் எனவும், அவன் நிர்மாணித்த புதிய நகரம் ஆலவாய் என்றும் பெயர் சூட்டப்பட்டது. மன்னன் அந்த நகரில் மணி மண்டபங்கள், மாட மாளிகைகள், சோலைகள், வாவிகள், குடியிருப்புகளை ஏற்படுத்தி அழகுக்கு அழகு சேர்த்தான்.
இத்தகைய புராணப் பெருமை நடைபெற்ற தலமாக கருதப்படுவதால் இத்தலம் திருஆல
வாய் என அன்று அழைக்கப்பட்டது. பிற்கால பாண்டியர் ஆட்சியில் இப்பகுதி பாகனூர்க் கூற்றம் என்ற உள்நாட்டுப் பிரிவில் அடங்கியிருந்தது. அவ்வேளையில் வெள்ளான் வகை ஊர்கள் பல, கோயில்களுக்கு வரி நீக்கி தானமாக தரப்பட்டன. இத்தகைய ஊர்கள் நல்லூர் என்ற பின்னொட்டுடன் அழைக்கப்பட்டன. அந்த வகையில் திருஆலவாய் சிவாலயத்துக்கு தானங்கள் பல அளிக்கப்பட்ட நிலையில், ஊருக்கு திருஆலவாயநல்லூர் என காரணப் பெயராக மாறி அமைந்தது.
| அமைவிடம் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து வாடிப்பட்டி செல்லும் நகரப் பேருந்து திருஆலவாய நல்லூர் விலக்கில் நின்று செல்லும். அங்கிருந்து 1 கிமீ ஆட்டோவில் பயணித்து ஊருக்கு செல்லலாம். |
புராதன கோயில் அழிந்த நிலையில், அடியார்களின் முயற்சியால் தற்போது புதிய கோயில் உருவாக்கப்பட்டு நித்ய பூஜை, விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. கிழக்குப் பார்த்த கோயிலாக இருந்தாலும் பிரதான வாசல் தெற்குப் பக்கமாக அமைந்துள்ளது. சாலக் கோபுர வாசல் தாண்டியதும் உள்சுற்று அமைந்துள்ளது. கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் என்ற அமைப்பில் எழிலான கட்டமைப்பில் உருவாக்கப் பட்டுள்ளது. மகாமண்டபத்தில் பலிபீடம், நந்தி பீடம் உள்ளன.
அர்த்த மண்டபத்தில் அனுக்ஞை விநாயகர், சுப்பிரமணியர், ஸ்ரீ சப்பாணி என்ற மந்தை கருப்ப
சாமி, தில்லைக்கூத்தர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர் சந்நிதிகள் உள்ளன. கருவறை
மூலவராக மீனாட்சி, சுந்தரேஸ்வரர் எழுந்தருளியுள்ளனர். தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்கை, சண்டிகேஸ்வரர் சந்நிதிகள் உள்ளன. உள்சுற்றில் கன்னிமூலை கணபதி, காலபைரவர், நவகிரகம் ஆகிய பரிவார தேவதை சந்நிதிகள் அமைந்துள்ளன. தினமும் இருகால பூசை நடைபெறுகிறது. சித்திரை மாதம் திருக்கல்யாணம், ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு 3 நாள் விழா சமயங்களில் புரவி எடுப்பு, முளைப்பாரி ஊர்வலம் என ஊரே விழாக்காலம் பூண்டிருக்கும்.வேண்டும் வரம் அருளும்திருஆலவாயநல்லூர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர்அமைவிடம்
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து வாடிப்பட்டி செல்லும் நகரப் பேருந்து திருஆலவாய நல்லூர் விலக்கில் நின்று செல்லும். அங்கிருந்து 1 கிமீ ஆட்டோவில் பயணித்து ஊருக்கு செல்லலாம்.
