சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
Updated on
2 min read

ஒருவர் எந்த வேலையைச் செய்தாலும், அதை முழு மனதுடன் செய்ய வேண்டும். அந்த வேலையை நாம் கிருஷ்ணருக்கு அர்ப்பணித்து விட்டால், அதை அவர் மனமார ஏற்றுக் கொள்வார் என்பது ஆன்றோர் வாக்கு.

ஒரு சிறிய கிராமத்தில் ஸ்ரீகண்டன் என்ற கிருஷ்ண பக்தர் வசித்து வந்தார். வயதில் சிறியவராக இருந்தாலும், தினமும் காலையில் எழுந்து அந்த கிராமத்தில் உள்ள கிருஷ்ணர் கோயிலுக்குச் சென்று அவரை வழிபட்டு வந்தார். கோயில் பட்டாச்சாரியாருக்கு உதவியாக சிற்சில பணிகளை செய்து வந்தார்.

தினமும் காலையில் பட்டாச்சாரியார் கோயிலுக்கு வந்ததும், ஸ்ரீகண்டன் செய்ய வேண்டிய பணிகளை பட்டியலிடுவார். ஸ்ரீகண்டனும், அவர் சொல் கேட்டு அப்படியே செய்து வந்தார். தான் செய்யும் பணி அனைத்தையும் கிருஷ்ணர் கட்டளையிட்டதாக நினைத்து, செய்து வந்தார். எப்போதும் கிருஷ்ணர் நினைவாக இருந்ததால், அனைத்தும் கிருஷ்ணார்ப்பணம் என்று சொல்லியபடி செய்வார்.

ஒருநாள், ஸ்ரீகண்டனுக்கு நந்தவனத்தில் இருந்து பூக்களைப் பறித்து, தொடுத்து மாலை கட்டும் பணி கொடுக்கப்பட்டது. மனதுக்குள் ‘சர்வம் கிருஷ்ணார்ப்பணம்’ என்று சொல்லிக் கொண்டு, நந்தவனத்தில் இருந்து பூக்களைப் பறித்து, தொடுத்து மாலைகளாகக் கட்டினார். 15-க்கும் மேற்பட்ட மாலைகளைக் கட்டி முடித்ததும், அவரே கிருஷ்ணருக்கு சூட்டிவிடுவது போன்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு, அவற்றை பட்டாச்சாரியாரிடம் கொடுத்தார்.

பட்டாச்சாரியார் அவற்றைப் பெற்றுக் கொண்டு, கிருஷ்ணர் விக்கிரகம் அருகே சென்றால், கிருஷ்ணருக்கு ஏற்கெனவே புதிய மாலை சூட்டப்பட்டிருந்தது. இது ஸ்ரீகண்டனின் வேலையாக இருக்கும் என்று நினைத்த பட்டாச்சாரியார், அவரிடம், “ஸ்ரீகண்டா. மாலை கட்டுவதுதான் உன் பணியே அன்றி, இப்படி நீயாகவே மாலையை கிருஷ்ணருக்கு சூட்டக் கூடாது” என்று கண்டித்தார். தான் அவ்வாறு செய்யவில்லை என்று ஸ்ரீகண்டன் பலமுறை கூறியும், அதை பட்டாச்சாரியார் கேட்டுக் கொள்ளவில்லை.

மறுநாள், ஸ்ரீகண்டனுக்கு அண்டாக்களில் நீர் நிரப்பும் பணி கொடுக்கப்பட்டது. இதுவும் கிருஷ்ணரின் செயல் என்று கருதி, ‘சர்வம் கிருஷ்ணார்ப்பணம்’ என்று கூறியவாறு, கிருஷ்ணருக்கு திருமஞ்சனம் செய்விக்கும் பணிக்காக அண்டாக்களில் நீர் நிரப்பினார் ஸ்ரீகண்டன். பட்டாச்சாரியார் கோயிலுக்கு வருவதற்கு முன்பாகவே, கிருஷ்ணருக்கு திருமஞ்சனம் நடைபெற்று முடிந்து, கருவறை ஈரமாகக் காட்சியளித்தது. இதுவும் ஸ்ரீகண்டனின் செயல் என்று அவரை பட்டாச்சாரியார் கடிந்து கொண்டார்.

அடுத்தநாள் முதல் ஸ்ரீகண்டனுக்கு மடப்பள்ளியில் பணி ஒதுக்கப்பட்டது. பிரசாதம் தயாரிக்கும் பணிகளில் ஒரு சிற்றாளனாக இருந்து, ‘சர்வம் கிருஷ்ணார்ப்பணம்’ என்று கூறி, காய்கறிகள் வெட்டுவது, பாயசம் தயார் செய்வது, சர்க்கரை பொங்கல் தயாரிப்பது என்று ஸ்ரீகண்டன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். மறுநாள் அதிகாலையில் சந்நிதிக் கதவை பட்டாச்சாரியார் திறக்கும்போதே, கிருஷ்ணர் வாயில் சர்க்கரைப் பொங்கல் இருந்தது.

‘இன்னும் மடப்பள்ளியில் இருந்து சர்க்கரைப் பொங்கலைக் கொண்டுவரவே இல்லை. அதற்குள் எப்படி கிருஷ்ணர் வாயில் சர்க்கரைப் பொங்கல்?’ என்று பட்டாச்சாரியாருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இதுவும் ஸ்ரீகண்டன் வேலையாகத்தான் இருக்கும் என்று அவரை பட்டாச்சாரியார் கடிந்து கொண்டார்.

மறுநாள் கண்டனுக்கு, பக்தர்களின் காலணிகளை பாதுகாக்கும் பணி ஒதுக்கப்பட்டது. இதுவும் இறைவன் சித்தம் என்று ஏற்றுக் கொண்ட ஸ்ரீகண்டன், ‘சர்வம் கிருஷ்ணார்ப்பணம்’ என்று கூறி, அப்பணியை நிறைவாகச் செய்தார். அடுத்தநாள் அதிகாலை சந்நிதிக் கதவை, பட்டாச்சாரியார் திறக்கும்போது, அதிர்ச்சி அடைந்தார். கிருஷ்ணர் பாதங்களில் ஒரு ஜோடி பாதுகைகள் இருந்தன. ‘எப்படி பூட்டப்பட்ட சந்நிதிக்குள் சாதாரண பாதுகைகள் (காலணிகள்) வந்தன? இது என்ன சோதனை கிருஷ்ணா?’ என்று பட்டாச்சாரியார் கிருஷ்ணரிடம் கேட்டார்.

அப்போது ஓர் அசரீரி ஒலித்தது. ‘பட்டரே. அச்சம் வேண்டாம். ஸ்ரீகண்டனுக்கு எந்த வேலை கொடுக்கப்பட்டாலும், அதைஅவர் ‘சர்வம் கிருஷ்ணார்ப்பணம்’ என்று எனக்கு காணிக்கையாக்கி விடுகிறார். அவர் அன்போடு தரும் காணிக்கையை நான் மனம் உவந்து ஏற்றுக் கொள்கிறேன் என்று கிருஷ்ண பரமாத்மா திருவாய் மலர்ந்தார்.

பட்டாச்சாரியார் ஓடோடிச் சென்று, கோயில் வாசலில் அமர்ந்து பக்தர்களின் காலணிகளைப் பாதுகாக்கும் யோகி ஸ்ரீகண்டனின் பாதங்களில் விழுந்து வணங்கினார். எதைச் செய்தாலும் அதை கிருஷ்ணருக்கு அர்ப்பணம் செய்தால் அதை அவர் மனமார ஏற்றுக் கொள்வார்.

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்...!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in