

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கியப் பீடம் பக்தர்களின் பிணி தீர்க்கும் கோயிலாக போற்றப்படுகிறது. இக்கோயிலில் 98 சந்நிதிகள் இருப்பதும், 365 நாட்கள் ஹோமங்கள் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.
தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்தை எடுப்பதற்காக பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து அமிர்த கலசத்துடன் வெளிப்பட்டவரே ஸ்ரீதன்வந்திரி பகவான் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஸ்ரீதன்வந்திரி பகவான், பழங்கால ஆயுர்வேத மருத்துவ முறையை உலகுக்கு அளித்தவர். இதனால் மருத்துவத்தின் கடவுளாகப் போற்றப்படும் ஸ்ரீதன்வந்திரி பகவான் அவதரித்த `தந்தேராஸ் தினம்' தேசியஆயுர்வேத தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
வாலாஜாபேட்டையிலிருந்து சுமார் 3 கிமீ தொலைவில் கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ளது ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடம். இங்கு தனி சந்திதியில் சங்கு, சக்கரம்,மூலிகைகள், அமிர்த கலசம் ஆகியவற்றை தனது 4 திருக்கரங்களில் ஏந்தியவராக அருள்பாலிக்கும் தன்வந்திரிபகவான், டாக்டர்கள் அணிந்திருக்கும் ஸ்டெதாஸ்கோப்பையும் அணிந்து, நோய் தீர்க்கும் கோரிக்கையுடன் வருவோருக்கு வரம் அருள்கிறார்.
ஷண்மதப் பீடமாகத் திகழும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம், பிரம்மா, விஷ்ணு, சிவன் என திருமூர்த்தி ஸ்தலமாகவும் விளங்குகிறது. ஏறத்தாழ 46 லட்சம் பக்தர்களால், 13 மொழிகளில் எழுதப்பட்ட 54 கோடி லிகித மந்திரங்களின் மேல் அமைக்கப்பட்ட பீடத்தில் மூலவர் ஸ்ரீதன்வந்திரி பகவான் வீற்றிருக்கிறார். மேலும், 98 சந்நிதிகளில் பல்வேறு தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.
பாதாள ஸ்வர்ண சனீஸ்வரர், பஞ்சமுக வாராஹி, 21 அடி உயர கல்கருடன், லஷ்மி கணபதி, பாலமுருகன், சூரிய-சந்திரன், செந்தூர ஆஞ்சநேயர், முனீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, வாஸ்து பகவான், மகிஷாசுரமர்த்தினி, பிரத்யங்கிரா தேவி, வாசவி கன்னிகா பரமேஸ்வரி, அஷ்டநாக கருடன்,கார்த்த வீர்யாஜுனர், சுதர்சனாழ்வார், பால ரங்கநாதர், பட்டாபிஷேக ராமர், கஜலட்சுமி, ஆரோக்கிய லட்சுமி, சத்ய நாராயணர், லட்சுமி நரசிம்மர், வாணி சரஸ்வதி, ராகு-கேது, நவநீத கிருஷ்ணர், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், மரகதேஸ்வரர், மரகதாம்பிகை, காலபைரவர், மணிகண்டன், அன்னபூரணி, கார்த்திகை குமரன், காயத்ரி தேவி, தத்தாத்ரேயர், லட்சுமி ஹயக்ரீவர், சஞ்சீவி ஆஞ்சநேயர் உள்ளிட்டோர் இங்கு அருள்பாலிக்கின்றனர்.
மேலும், ராகவேந்திரர், புத்தர், மகாவீரர், குருநானக், காஞ்சி மகா பெரியவர், தங்க பாபா, சூரிய பாபா, வள்ளலார், ரமணர், குழந்தையானந்த மகா ஸ்வாமிகள், சேஷாத்ரிசுவாமிகள், வேதாந்த தேசிகர், அவதார பாபா, ராமகிருஷ்ண பரமஹம்ஸர், அகஸ்தியர், வீர பிரம்மங்காரு, அத்ரி மகரிஷி பாதம், நவகன்னிகைகள், அத்திமர வடிவில் அனுசுயா தேவி, அஷ்டதிக் பாலகர்கள், பாரத மாதா ஆகியோரும் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர். மேலும், 468 சித்தர்கள் லிங்க வடிவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் உரிய மூலிகைச் செடிகள், பூச் செடிகள், பழச் செடிகள் கொண்ட மூலிகைவனத்தில் இருந்து கிடைக்கும் சமித்துகள், ஹோமங்களில் சேர்க்கப்படுகின்றன. அதேபோல, இங்குள்ள துளசிமாடத்தில் 51 ராகவேந்திரர் மடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட ம்ருதி (மண்) சேர்க்கப்பட்டுள்ளது.
பல கோடி கடுக்காய்கள்
`ஹோமமே ஷேமம், யாகமே யோகம்'என்ற நோக்கில் ஆண்டின் 365 நாட்களும்இங்கு பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. `யக்ஞபூமி' என்று அழைக்கப்படும் ஸ்ரீதன்வந்திரி பீடத்தின் முக்கிய அடையாளமாக, 24 மணி நேரமும் அணையாத யாகசாலை திகழ்கிறது. பிணி தீர்க்கவும், ஆரோக்கியம் மேம்படவும் பல்லாயிரக்கணக்கான யாகங்கள் செய்யப்பட்டுள்ளன. 1,000-க்கும் மேற்பட்ட சண்டி யாகங்கள், ஒரு லட்சம் நெல்லிக் கனிகளால் ஸ்ரீகனகதாரா யாகம், 1.30 லட்சம் லட்டுகளைக் கொண்டு லட்சுமி குபேர யாகம், ஒரு லட்சம் தாமரைப் பூக்களைக் கொண்டு ஸ்ரீஅஷ்டலஷ்மி சமேத லட்சுமி நாராயணர் ஹோமம், 10 லட்சம் ஏலக்காய்களைக் கொண்டு ஸ்ரீலட்சுமி ஹயக்கிரீவர் ஹோமம் உட்பட எண்ணற்ற ஹோமங்கள் நடத்தப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் 15-ம் தேதி பல கோடி கடுக்காய்களைக் கொண்டு தொடங்கப்பட்ட மகா சுதர்சன தன்வந்திரி யாகம், அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி வரை ஓராண்டுக்கு நடைபெற உள்ளது. அதேபோல, சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் உள்ளிட்டவையும் விமரிசையாக நடைபெறுகின்றன. ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் அர்ச்சனையோ, தேங்காய் உடைப்பதோ கிடையாது. சுக்கு, வெல்லம், தைலம்தான் பிரசாதமாகத்தரப்படுகிறது.
புற்று நோயால் பாதிக்கப்பட்ட தனது தாயின் (கோமளவல்லி) வேண்டுகோளுக்கு இணங்க, ஸ்ரீதன்வந்திரி பகவானை மூலவராகக் கொண்டு இந்த ஆரோக்கிய பீடத்தை ஸ்ரீமுரளிதர ஸ்வாமி, ஸ்தாபித்துள்ளார். இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தெய்வங்கள் சுமார் 2 லட்சம் கிமீ தொலைவுக்கு யாத்திரை சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்து நிலை ராஜகோபுரம்
வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் தற்போது 5 நிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மகா கும்பாபிஷேகம் செப்டம்பர் 15-ம்தேதி நடைபெற உள்ளது. உடல் நலன், மன நலன் வேண்டுவோருக்கு அருள்புரியும் `டாக்டர்' பெருமாளான ஸ்ரீதன்வந்திரி பகவானை தரிசித்து, முழு ஆரோக்கியம் பெற விரும்புவோர் இந்த ஆரோக்கியப் பீடத்தை நாடிச் செல்கின்றனர். இங்கு அமாவாசை நாட்களில் மகா பிரத்யங்கிரா தேவிக்கும், அஷ்டமியில் காலபைரவருக்கும், பஞ்சமியில் பஞ்சமுக வாராஹிக்கும், ஏகாதசியில் ஸ்ரீதன்வந்திரிக்கும், சஷ்டி, கார்த்திகை நட்சத்திரத்தில் குமரனுக்கும், சனிக்கிழமைதோறும் சொர்ண சனீஸ்வரருக்கும் சிறப்பு ஹோமங்கள், பூஜைகள் நடைபெறுகின்றன.
- ஆர்.கிருஷ்ணகுமார்