பக்தர்கள் 4 விதம்

பக்தர்கள் 4 விதம்
Updated on
2 min read

பக்தர்கள் 4 விதமாக இருப்பார்கள் என்று ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையில் கூறியுள்ளார். இந்த 4 பேரும் தன்னிடம் நான்கு விதமாகப் பேசுவார்கள் என்று கூறுகிறார்.

இறைவனை வழிபடும் பக்தர்கள் பல வகைப்படுவர். இவர்கள் இறைவனை வேண்டி பல வரங்களைக் கேட்பதைக் கொண்டு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பக்தர்களை 4 வகையாகப் பிரித்து விவரிக்கிறார். 4 விதமான பக்தர்களாக ஆர்த்தன், அர்த்தார்த்தி, ஜிக்யாசூ, ஞானி ஆகியோர் கூறப்படுகின்றனர்.

ஆர்த்தன் என்ற பிரிவில் கூறப்படும் பக்தர்கள், தங்களுக்கு பிரச்சினை வரும் சமயத்தில் இறைவனை வழிபடுவர். துன்பம் வரும்போது மட்டுமே இறைவன் நினைவு வரும். உடல் ஆரோக்கியம், வாழ்க்கையில் பிரச்சினை, பணப் பிரச்சினை, வீடு, மனை தொடர்பான பிரச்சினை என்று ஏதேனும் இடர்பாடு வந்தால் உடனே இறைவனைத் தேடி கோயிலுக்குச் செல்வர். நாள் முழுவதும் இறை வழிபாட்டில் ஈடுபடுவர். பிரச்சினை தீர்ந்ததும், திருப்தி அடைந்து தங்கள் வழியில் செல்வார்கள். அடுத்த பிரச்சினை வரும்வரை இவர்களுக்கு இறைவனைப் பற்றிய நினைவு வருவதில்லை.

அர்த்தார்த்தி என்ற பிரிவில் கூறப்படும் பக்தர்கள், இறைவன் தங்களை மட்டும் கவனித்துக் கொண்டால் போதும் என்று நினைப்பவர்கள். தன்னை மட்டுமே இறைவன் காத்தருள வேண்டும் என்றும் நினைத்து, அவருக்கு சிறப்பு ஆராதனைகள் செய்வார்கள். நீண்ட நேரம் பிரார்த்தனை செய்து, தங்களுக்கு வேண்டியதை அளிக்கும்படி வேண்டுவர். தங்கள் வாழ்க்கையில் மட்டும் இறைவன் மகிழ்ச்சியை அளித்தால் போதும் என்று நினைப்பார்கள்.

ஜிக்யாசூ என்ற பிரிவில் கூறப்படும் பக்தர்கள், இறைவனிடம் தங்கள் பிரச்சினைகளைக் கூறி முறையிடுவதில்லை. பொன் வேண்டும், பொருள் வேண்டும் என்று கேட்பதில்லை. அதற்கு மாறாக நல்ல ஞானம் வேண்டும், எந்நேரமும் இறை சிந்தனையுடன் இருக்க வேண்டும், நல்ல குருநாதரை அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வர். இயல்பு வாழ்க்கையில் இருந்து சற்று மாறுபட்ட விஷயங்கள் தொடர்பாக இவர்களது வழிபாடு இருக்கும்.

ஞானி என்ற பிரிவில் கூறப்படும் பக்தர்கள், இறைவனிடன் எதையும் வேண்டுவதில்லை. இறைவனை உணர்ந்தவர்களாக அறியப்படுகின்றனர். இறைவன் இவர்கள் முன்னர் தோன்றி, ‘யாது வரம் வேண்டும்?’ என்று கேட்டாலும், தங்களுக்கு தற்போது இருக்கும் செல்வங்களே போதும் என்றும், இறைவன் இருக்கும்போது எங்களுக்கு என்ன கவலை என்றும், இறைவன் புகழை பலரிடம் எடுத்துச் சொல்ல அவன் அருள் வேண்டும் என்றும் கேட்பார்கள்.

ஆர்த்தன் (மனக்குறை உள்ளவர்கள்), அர்த்தார்த்தி (அதிக ஆசைப்படுபவர்), ஜிக்யாசூ (அறிவைத் தேடுபவர்), ஞானி (இறைவனை உணர்ந்தவர்கள்) ஆகிய 4 வகை பக்தர்களையும் இறைவன் சமமாகவே பார்ப்பதுண்டு. இருப்பினும் தன்னலம் இல்லாமல் பிறர் நலத்தை எண்ணும் ஞானிகளையே இறைவனுக்குப் பிடிக்கும் என்று கூறப்படுகிறது.

கோயில்களுக்கு செல்ல இயலாத முதியோர், நோயால் பீடிக்கப்பட்டவர்கள் போன்றவர்களுக்கு தரிசனம் தருவதற்காக இறைவன் வீதியுலா செல்வதுண்டு. செப்பால் உருவாக்கப்பட்ட இறை வடிவங்கள், பக்தர்களை மின்சாரம் போல ஈர்த்து அவர்பால் பக்தி கொள்ளச் செய்கிறது. இறைசக்தி என்ற மின்சாரம் பக்தரை அடைய, அடைய அவர் பேரின்ப நிலையை விரைவாக அடைகிறார். மனப் பக்குவத்தை அடைகிறார். தனக்கு எது தேவை என்பதை உணர்ந்து அதை அவரிடம் கேட்கிறார்.

மேலே குறிப்பிட்டுள்ள 4 வகை பக்தர்களும் இறைவனை தரிசித்து அவரிடம் வேண்டிக் கொள்வதுண்டு. மனமுருக பேசுவதுண்டு. அப்படி இந்த 4 பேரும் 4 விதமாகப் பேசுவதை வைத்துதான் நாலு பேர் நாலு விதமாகப் பேசுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த 4 வகை பக்தர்கள் முதலில் வறுமை நீங்க பொன், பொருள் கேட்கின்றனர். பின்னர் சுயநலம் சேர்ந்து, தங்களுக்கு மட்டுமே அந்த பொருள் கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். பின்னர் பொருள் மீதான பற்று நீங்கி, அறிவைத் (ஞானம்) தேடுகின்றனர். பின்னர் எதுவும் வேண்டாம், இறைபக்தியே போதும் என்று பக்குவமடைகின்றனர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in