சிவபெருமானின் அணுக்கத் தொண்டர்: ஆலால சுந்தரர்

சிவபெருமானின் அணுக்கத் தொண்டர்: ஆலால சுந்தரர்
Updated on
2 min read

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதியாகிய சிவபெருமான் மீது இடையறாத அன்பு வைத்த அடியார் பெருமக்களுள் மிக முக்கியமானவர் சுந்தரமூர்த்தி நாயனார். மெய்ஞானமே உண்மையான அமைதியைத் தரும் என்பதை உணர்ந்துள்ள இவர் தென்னாடு முழுவதும் சைவ மணம் கமழச் செய்தவர்.

சிவபெருமான் தன்னையே கண்ணாடியில் பார்த்தபோது அவருடைய அழகிய உருவம் கண்ணாடியில் பிரதிபலித்தது. அந்த பிம்பத்தைப் பார்த்து சிவபெருமான் "சுந்தரா, இங்கே வா” என்று அழைக்க, கண்ணாடியிலிருந்து வெளிப்பட்ட, சிவபெருமானின் நிழலில் உருவான நிஜமே சுந்தரர். அன்றுமுதல் ஈசனின் கட்டளைப்படி சுந்தரர் அவரருகிலேயே கயிலையில் இருந்து அணுக்கத் தொண்டராக பணி செய்து வந்தார்.

பாற்கடலைக் கடையும்போது கயிறாக பயன்பட்ட வாசுகி என்ற நாகம் விஷம் கக்கியது. இதையறிந்த சிவபெருமான் சுந்தரரை அனுப்பி ஆலாலத்தை (விஷத்தை) எடுத்துவர சொல்ல, சுந்தரரும் ஆலால விஷத்தை கையில் பிடித்து நாவல்பழம் போல் உருட்டிக் கொண்டு வந்து ஈசனிடம் கொடுத்தார். ஈசனும் அதைவாங்கி விழுங்க, அம்பிகை அதை அவர் கழுத்தில் நிறுத்தினார். இந்த நாளிலிருந்து சுந்தரருக்கு ‘ஆலால சுந்தரர் ’ என்ற சிறப்பு பெயரும் ஏற்பட்டது.

ஒருநாள் சிவபெருமான் சுந்தரரை அழைத்து, பாரத பூமியில் தென்திசையில் பிறந்து, அம்பிகையின் தோழியர் கமலினி (பரவை நாச்சியார்), அனிந்திதை (சங்கிலி நாச்சியார்) இருவருடன் இனிய இல்லறம் நடத்திவிட்டு வரப் பணித்தார். அதன்படி வளங்கள் நிறைந்த திருநாவலூரில் சடையனார் - இசைஞானி தம்பதிக்கு மகனாக அவதரிக்க வைத்து, ‘நம்பியாரூரர்’ என்ற திருப்பெயரும் கிடைக்க அருளினார்.

“அடியார்கள் பெருமையிலும், பக்தியிலும் ஈடு இணையற்றவர்கள். தீவிர தியானத்
தால் இறைவனையே தமதுருவாக கொண்டவர்கள். பிறப்பு- இறப்பு, இன்பம்- துன்பம் போன்றவற்றிலிருந்து விடுபட்டவர்கள். எப்போதும் அனைவரிடமும் அன்பாக இருப்பதால் தாமும் எப்போதும் ஆனந்தமாக இருப்பவர்கள். அவர்களுக்கு தங்கமும், மண் ஓடும் சமமே. அன்போடு இறைவனையும், அவர் அடியார்களையும் வணங்கும் இன்பத்தை விடுத்து, வீடு பேரின்பமும் கூட அடைய விரும்பாதவர்கள்” என்று அடியார்கள் பற்றிய பெருமையை சொல்லி, “இன்ப தமிழால் இதை நீ பாடு’’ என்று பணித்தார் சிவபெருமான்.

‘‘இத்தகைய பெருமையுடையவர்களை நான் எப்படி பாடுவேன், நீங்களே அருள் புரிக’’ என்று ஈசனிடம் சுந்தரர் வேண்டிக்கொள்ள, ஈசனும், ‘‘தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் " என்று அடியெடுத்து கொடுக்க, இறைப் பேரறிவு கொண்டு ஆலால சுந்தரர் திருத்தொண்டத் தொகையைப் பாடினார். இதில் 63 நாயன்மார்களைப் பற்றியும் கூறியுள்ளார் சுந்தரர். ஆலால சுந்தரர் கயிலையிலிருந்து இந்தப் பூமியில் அவதரித்ததன் பயனே திருத்தொண்டத் தொகையை அளிக்கத்தான்.

மனைவி பரவையாரைப் பிரிந்து வந்து பல தலங்களுக்கு சென்று பல பதிகங்கள் பாடிவந்த சுந்தரர், திருவொற்றியூரில் சங்கிலியாரை மணந்தார். சங்கிலியாரைப் பிரிய மாட்டேன் என்று ஈசன் கேட்டுக்கொண்டது போல் செய்துக் கொடுத்த சபதத்தை மீறிக் கிளம்பினார் சுந்தரர். இறைவன் நீதி அனைவருக்கும் பொதுவானது என்பதை உணர்த்தும் வண்ணம் திருவொற்றியூர் எல்லையைத் தாண்டியதும் தண்டனையாக கண் பார்வை இழந்தார் சுந்தரர். ஆனால் தண்டனையை சில காலம் அனுபவித்து, தனது பிழை உணர்ந்த நிலையில் படிப்படியாக விடுதலை பெற்று, பார்வை திரும்ப கிடைக்கப் பெற்றார்.

ஒருசமயம் பரவையாருடன் சுந்தரரின் திருமணத்தின்போது, ஈசன், “உன்னை உரிய நேரத்தில் தடுத்தாட்கொள்வோம்’’ என்று கூறியுள்ளதை நிறைவேற்ற முதியவர் கோலத்தில் பூவுலகுக்கு வந்து ‘‘உன் முன்னோர் எனக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துள்ளவர்கள், நீ வந்து எனக்கு அடிமையாக பணி செய்ய வேண்டும்’’ என்று அழைத்தார். உரிய ஆவணம் ஏதும் இல்லாமல் சொன்னதால் அந்த முதியவரை ‘பித்தன்’ என்றார் சுந்தரர்.

திருவெண்ணெய்நல்லூரில், அந்த முதியவர் ‘‘தடுத்தாட்கொள்ள வந்த ஈசனே’’ எனக் காட்டி, இந்த வழக்குக்கு முடிவு அறியவைத்து, ‘‘என்னை பித்தன் என்று கோபப்பட்டாய். ஆகவே பித்தன் என்ற சொல்லில் தொடங்கி என்னைப் பாடுக’’ என்று தனது அருட்பார்வையை சுந்தரரை நோக்கி செலுத்தினார். அந்த அருட்பார்வைக்கு ‘சிவ தீட்சை’ என்று பெயர். ‘பித்தா பிறைசூடி’ எனத் தொடங்கி இறைவனை இனிய தமிழால் பாடினார் சுந்தரர்.

நிறைவாக ஒரு பதிகத்தில் சுந்தரர், "வெறுத்தேன், மனை வாழ்க்கையை விட்டொழிந்தேன்” என்று கூறினார். பூமியில் தனது அவதாரத்தின் நோக்கம் நிறைபெற்றதாக உணர்ந்து, இறைவனுக்கு தெரியப்படுத்தினார்.

இதனை செவிமடுத்த ஈசன், "நம் ஊரன் சுந்தரரை நீங்கள் வெள்ளை யானையை அழைத்து சென்று அதன் மீது அவரை ஏற்றி இங்கு அழைத்து வருக" என்று பிரம்மதேவர் உட்பட தேவர்களுக்கு பணித்தார்.

அவ்வாறு கயிலையை வந்தடைந்த சுந்தரர், முன்பு போல் அணுக்கத் தொண்ட
ராக தனது பணியைத் தொடர்ந்தார்.

பூவுலகில் 18 வருடங்களே வாழ்ந்து, 1,026 பாடல்களை உள்ளடக்கிய 100 திருப்ப
திகங்களைப் பாடியுள்ளார் சுந்தரர். அவை ஏழாம் திருமுறையாக தொகுக்கப்படுள்ளன. சுந்தரர் திருகயிலை எழுந்தருளிய ஆடி மாத சுவாதி நட்சத்திர நாள் வருடந்தோறும் சிவாலயங்களில் விழாவாக நடைபெறுகிறது.

- தே.சுமதி ராணி | sumathiranid@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in