

செங்கை மாவட்டம் மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயிலில் ராமபிரான் சீதாதேவியின் கைகளைப் பற்றிய நிலையில் அருள்பாலிக்கிறார். வைணவ மகான் ராமானுஜர் தீட்சை பெற்ற தலமாக இத்தலம் போற்றப்படுகிறது.
ராமபிரான், சீதாதேவி, இளைய பெருமாள் லட்சுமண ருடன் கானகத்தில் சென்று கொண்டிருக்கிறார். இடையில் பஞ்சவடி என்னும் இடத்தில் குடில் அமைத்து மூவரும் தங்கிய நிலையில், தனது மாய சூழ்ச்சியால் ராவணன் சீதாதேவியை கவர்ந்து செல்கிறான்.
சீதாதேவியைத் தேடி ராமபிரானும், லட்சுமணரும் ஒவ்வொரு இடமாகத் தேடிக் கொண்டிருக்கும் சமயத் தில் ஒருநாள் விபண்டக முனிவரின் ஆசிரமத்தில் தங்கு கின்றனர். முனிவரும் அவர்களை நன்கு உபசரித்தார். இருவரும் கிளம்பும் சமயத்தில் தனது ஆசிரமத்துக்கு மீண்டும் வர வேண்டும் என்று விபண்டக முனிவர் ராமபிரானிடம் வேண்டினார்.
முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்கி, சீதாதேவியை மீட்டு, அயோத்தி செல்லும் வழியில் அவரது ஆசிரமத்துக்கு எழுந்தருளி சீதாதேவியுடன் கல்யாண கோலத்தில் அருள்பாலித்தார். இதன் அடிப்படையில் இத்தலத்தில் புஷ்பக விமானத்துடன் கோதண்டராமர் கோயில் எழுப்பப்பட்டது.
ராமபிரானுக்கும் சீதாதேவிக்கும் இடையே உள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக இத்தலத்தில் திருமண கோலத்தில் அருள்பாலிப்பது தனிச்சிறப்பு. இவர்களை வணங்கியபடி விபண்டக முனிவரும் மூலஸ்தானத்தில் உள்ளார். கோதண்டராமர் சந்நிதிக்கு வலப்புறம் ஜனகவல்லி தாயாருக்கு தனி சந்நிதி உள்ளது. ஜனக மகாராஜாவின் மகளாக வளர்ந்ததால், சீதாதேவி இத்தலத்தில் இப்பெயரால் அழைக்கப்படுகிறார்.
இக்கோயிலுக்கு பின்புறம் ஓர் ஏரி உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் ஏரி நிறைந்ததால், கரை உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அப்போது கலெக்ட ராக இருந்த லயோனல் பிளேஸ் என்ற ஆங்கிலேயர் பல முயற்சிகள் மேற்கொண்டும், மக்களின் துயர் துடைக்க முடியவில்லை.
ஒருசமயம் அவர் இக்கோயிலுக்கு வந்தார். தாயார் சந்நிதியை சீரமைத்துத் தருமாறு அர்ச்சகர்கள் அவரிடம் கூறினர். அவரும், ‘‘இந்த வருடம் மழை பெய்து, ஏரி உடையாமல் இருந்தால், தாயார் சந்நிதியை கட்டாயம் சீர்செய்து தருகிறேன்” என்றார்.
மழைக்காலம் தொடங்கியது, எந்த நேரத்திலும் ஏரி உடையலாம் என்று இருந்த நிலையில் 2 இளைஞர்கள் கையிலிருந்த வில்லில் அம்பு பூட்டி நின்றனர். அந்த அம்பில் இருந்து மின்னல் போன்ற ஒளி கிளம்பியது. அதன்பிறகு ஏரி உடைய வில்லை.
இதனால் மகிழ்ச்சி அடைந்த கலெக்டர், ராம லட்சுமணரே வந்து ஏரியைக் காத்தருளியதாக உணர்ந்தார். பிறகு தாயார் சந்நிதியை சீரமைத்துக் கொடுத்தார். இதுதொடர்பான கல்வெட்டு தாயார் சந்நிதியில் உள்ளது. இச்சம்பவத்தால் பெருமாளுக்கு ‘ஏரி காத்த ராமர்’ என்ற பெயர் கிட்டியது.
ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கும் கருணாகர பெருமாள் பிரதான மூர்த்தியாக திருவிழாக் காலங்களில் புறப்பாடாகிறார். இங்கு வந்த ராமபிரான் சீதாதேவியை மீட்பதற்கு அருள வேண்டும் என்று கருணாகர பெருமாளை பூஜித்துள்ளார்.
இத்தலத்தில் ஸ்ரீராமநவமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்று காலையில் கோடலி முடிச்சுடன் பஞ்ச கச்ச அலங்காரம், ஒரு வஸ்திரம் மட்டும் அணிவிக்கும் ஏகாந்த அலங்காரம், மதியம் திருவாபரண அலங்காரம், மாலையில் புஷ்பங்களுடன் வைரமுடி தரித்த அலங்காரம், இரவில் முத்துக் கொண்டை, திருவாபரணத்துடன் புஷ்ப அலங்காரம் என ஒரே நாளில் ராமபிரானுக்கு ஐந்து வித அலங்காரத்துடன் விசேஷ பூஜை நடக்கும். அன்று ராமபிரான், சீதாதேவி, லட்சுமணருடன் தேரில் எழுந்தருளுவார்.
பெரிய நம்பி ஆச்சாரியராக இருந்து இத்தலத்தி லேயே ராமானுஜருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைத்தார். ராமானுஜர் தீட்சை பெறும் நிலையில் வணங்கிய கோலத்திலும், பெரிய நம்பி ஞான முத்திரை காட்டிய கோலத்திலும் உள்ளனர். தீட்சை கொடுக்க பயன்படுத்திய சங்கு, சக்கர முத்திரைகள் இக்கோயிலில் உள்ளன.
இத்தலத்தில் ராமானுஜர் வெள்ளை வஸ்திரம் அணிந்து கிரஹஸ்தராக இருப்பதைக் காணலாம். மூலவர், உற்சவர் இருவருக்குமே வெள்ளை ஆடையே அணிவிக்கப்படுகிறது.
சக்கரத்தாழ்வார் 16 கரங்களுடன் அக்னி கிரீடம் அணிந்து தனிசந்நிதியில் அருள்பாலிக்கிறார். இவருக்கு கீழே யந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவருக்குப் பின்புறம் உள்ள யோக நரசிம்மர் நாகத்தின் மீது உள்ளார். வைகுண்ட ஏகாதசி, சித்திரை நட்சத்திர தினங்களில் சுதர்சன ஹோமம் நடைபெறும்.
ஆனி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளில் நடைபெறும் பெரிய பெருமாள் உற்சவத்தில் இரண்டு தேர்கள் ஓடும்.
- ரங்க ராமானுஜ தாஸன்