தெய்வீகத் தன்மை கொண்ட காரைக்கால் அம்மையார்

தெய்வீகத் தன்மை கொண்ட காரைக்கால் அம்மையார்
Updated on
2 min read

பெண் நாயன்மார்களுள் ஒருவரான காரைக்கால் அம்மையார், பல தலங்கள்தோறும் சென்று ஈசனை தரிசித்து, பாடல்கள் புனைந்து வழிபட்டார். புனிதவதி என்ற இயற்பெயர் கொண்ட இவர், காரைக்காலில் அவதரித்ததால் காரைக்கால் அம்மையார் என்று அழைக்கப்படுகிறார்.

வளம் நிறைந்த சோழ நாட்டில் காரைக்கால் நகரத்தில் வணிகர் குலத்தவர் பலர் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் அறநெறி தவறாமல் வாணிபம் செய்து வந்த தனதத்தனார் என்பவருக்கு புனிதவதி என்ற மகள் இருந்தார். சிறு வயதுமுதலே புனிதவதி பக்தி பெருக்கோடு சிவபெருமானை வழிபட்டு வந்தார். தக்க பருவம் அடைந்ததும் நாகப்பட்டினத்தில் வசிக்கும் வணிகர் பரமதத்தனுக்கு மணம் செய்து வைக்கப்பட்டார்.

மகளை நாகைக்கு அனுப்ப மனம் இல்லாத தனதத்தனார், காரைக்காலில் மகளையும் மருமகனையும் தனியாக ஓர் இல்லத்தில் வாழ வைத்தார். பரமதத்தனும் வணிகத் தொழிலை பண்போடும் நேர்மையோடும் நடத்தி வந்தார். இறைவன் மீது கொண்ட புனிதவதியின் பக்தியும் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. எந்நேரமும் சிவனடியார் திருநாமத்தைப் போற்றி வழிபடுவதிலேயே இருந்தார்.

ஒருநாள் பரமதத்தனை சந்திக்க வந்த ஒருவர், 2 மாங்கனிகளைக் கொண்டு வந்தார். அவற்றைப் பெற்றுக் கொண்ட பரமதத்தன், பணியாளை அழைத்து, அவற்றை தன் இல்லத்தில் கொண்டு கொடுக்கச் சொன்னார். பணியாளும், பரமதத்தன் இல்லம் சென்று மாங்கனிகளை புனிதவதியிடம் சேர்ப்பித்தார். அவற்றைப் பெற்றுக் கொண்ட புனிதவதி, பிற்பகல் உணவுக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். அச்சமயம் வீட்டு வாசலில் இருந்து ‘சிவாய நம’ என்ற குரல் கேட்டது.

புனிதவதி வாயிற்பக்கம் விரைந்து சென்று பார்த்தபோது, அங்கு ஒரு சிவனடியார் நிற்பதைக்காண்கிறார். அன்போடு அவரை வரவேற்று, உணவருந்தச் சொன்னார். இலையில் பக்குவமாக உணவைப் பரிமாறி, இரண்டு மாங்கனிகளில் ஒன்றையும் அரிந்து அளித்தார். மிகுந்த பசியுடன் இருந்த அடியாரும், உணவருந்திவிட்டு, புனிதவதியை வாழ்த்திச் சென்றார்.

Caption
Caption

சற்று நேரத்துக்கெல்லாம் வழக்கம்போல் பிற்பகல் உணவுக்கு இல்லம் வந்தார் பரமதத்தன். புனிதவதி முறையாக உணவு பரிமாறி, மாங்கனியையும் அரிந்து அளித்தார். மாங்கனியின் சுவை அதிமதுரமாக இருந்ததால், மற்றொரு கனியையும் அரிந்து வர புனிதவதியிடம் கூறினார் பரமதத்தன். மாங்கனியை சிவனடியாருக்குப் பரிமாறியதால், செய்வதறியாது தவித்த புனிதவதி, உள்ளே சென்று இறைவன் படத்தின் முன்னர் நின்றார். தன்னைக் காக்கு மாறு ஈசனிடம் வேண்டினார். அவர் கையில் ஒரு மாங்கனி வந்தடைந்தது.

உடனே அந்தப் பழத்தை அரிந்து, பரமதத்தனின் இலையில் இட்டார் புனிதவதி. முன்னர் உண்ட கனியை விட இக்கனி மிகவும் சுவையாக இருக்கிறதே என்று உணர்ந்த பரமதத்தன் அதுகுறித்து புனிதவதியிடம் வினவினார். புனிதவதி நடந்த விஷயங்களை கணவரிடம் விவரித்தார். ஆச்சரியம் அடைந்த, பரமதத்தன், இறைவனிடம் வேண்டி மற்றொரு பழத்தை பெற்றுவருமாறு, புனிதவதியிடம் கூறினார். அவரும் இறைவனிடம் சென்று மற்றொரு பழத்தைத் தருமாறு வேண்டினார். அவ்வாறு இறைவன் வழங்கவில்லை என்றால், தான் பொய் உரைத்ததாக ஆகிவிடும் என்றும், தன்னைக் காக்குமாறும் இறைவனை பிரார்த்தித்தார். இம்முறையும் மற்றொரு மாங்கனியை அளித்து எம்பெருமான் அருள் பாலித்தார்.

புனிதவதி மகிழ்ச்சியுடன் சென்று அக்கனியை கணவரிடம் அளித்தார். ஆனால் பரமதத்தன் கையில் இருந்து மாங்கனி மறைந்
தது. தன் மனைவி தெய்வீகத் தன்மை பொருந்தியவர் என்பதை மனதில் கொண்டு, இனி அவருடன் வாழ முடியாது என்று முடிவு செய்தார் பரமதத்தன். அதன்படி இனி தனித்து வாழ்வதே இருவருக்கும் சிறந்தது என்று புனிதவதியிடம் கூறுகிறார் பரமதத்தன். வாணிபம் செய்வதற்காக பரமதத்தன் தன் மனைவியிடமும், உறவினர்களிடமும் விடைபெற்றுக் கொண்டு, கிளம்பினார். கடல் தேவதையை வழிபட்டு கப்பலேறிச் சென்றார். தன்னை பக்குவப்படுத்திக் கொண்ட புனிதவதி முழுமையாக தெய்வ சிந்தனையில் ஈடுபடுத்திக் கொண்டார்.

வாணிபத்தில் நிறைந்த பொருள் ஈட்டிய பரமதத்தன், காரைக்கால் செல்லாமல் பாண்டிய நாட்டில் மற்றொரு நகரத்தில் வாழ்ந்து வந்தார். அவ்வூரில் உள்ள வணிகர் மகளை மணம் புரிந்து கொண்டு இல்லறம் நடத்தி வந்தார். மகளுக்கு ‘புனிதவதி’ என்று பெயர் சூட்டினார்.

கணவரின் முடிவு தனக்கு வேதனை அளித்தாலும், இனி தனக்கு அழகு, இளமை தேவையில்லை என்று உணர்ந்து தனக்கு பேய் வடிவம் அளிக்கும்படி ஈசனை வேண்டினார். பேய் வடிவம் பெற்ற புனிதவதி காரைக்கால் அம்மையார் என்று அழைக்கப்பட்டார். தமிழில் புலமை பெற்று அற்புதத் திருவந்தாதி, திரு இரட்டை மணிமாலை ஆகிய பிரபந்தங்களைப் பாடினார். திருக்கையிலை சென்று ஈசனை தரிசிக்க எண்ணி தலையிலேயே நடந்து அங்கு சென்றார். ‘அம்மையே’ என்று அம்மையாரை வரவேற்றார் ஈசன்.
திருவாலங்காட்டில் தான் ஆட, அதை அருகில் இருந்து கண்டுகளித்து பாடலாம் என்று ஈசன் அருளினார். தலையிலேயே நடந்து திருவாலங்காட்டை அடைந்து ‘கொங்கை மகிழ்’ எனத் தொடங்கி மூத்த திருப்பதிகம் பாடி இறைவனின் ஆனந்தக் கூத்தைக் கண்டு மகிழ்ந்தார்.

இவ்வாறு திருப்பதிகங்கள் பாடி, பல ஆண்டுகள் வாழ்ந்து, ஈசனின் திருவடி நிழலில் இளைப்பாறினார். காரைக்கால் சோமநாதர் கோயிலில் அம்மையார் நினைவாக ஆனி பௌர்ணமி தினத்தில் மாங்கனித் திருவிழா நடைபெறுகிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in