

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மாதிரவேளூர் மாதலீஸ்வரர் கோயில் புராண காலத் தொடர்புடைய கோயிலாக விளங்குகிறது. திருமண தடை நீக்கும் கோயிலாகவும் இக்கோயில் போற்றப்படுகிறது.
மாதிரவேளூர் மாதலீஸ்வர் கோயிலின் தல வரலாறு ராமாயண காலத்தோடு தொடர்புடையது. இலங்கையில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இந்திரனுக்கு சாரதியாக மாதலி என்ற தேரோட்டி இருந்து வந்தார். வடமதுரை பகுதிக்கு (தற்போது மாதிரவேளூர்) வரும்போது, ஒரு வனத்தில் தேர் நின்றுவிடுகிறது. திக்குத் தெரியாமல் தவித்த மாதலி ஈசனை நினைத்து, தனக்கு மாற்றுவழி காட்டுமாறு வேண்டினார்.
அப்போது ஈசனின் அசரீரி வாக்கு ஒலித்தது. ‘மாதலி.. உன்னருகில் நான் காட்டில் புதையுண்டு இருக்கிறேன். என்னை மீட்டு எடு” என்ற இறைவாக்கைக் கேட்ட மாதலி, “இறைவா.. என் கடமையை நிறைவேற்றிவிட்டு உனது வாக்கை நிறைவேற்றுகிறேன். இப்போது எனக்கு இந்திரலோகத்துக்கு வழி காட்டவும்” என்றார். ஈசனும் இந்திரலோகம் செல்ல மாதலிக்கு வழிகாட்டினார்.
இந்திரனிடம் விபரத்தை கூற அவரும் தன்னை இந்திரலோகத்தில் சேர்த்துவிட்டு மீண்டும் இங்கு வந்து ஈசனின் கட்டளையை நிறைவேற்ற சொன்னார். இந்திரனின் கட்டளைப்படியே அந்த வனத்துக்குள் ரதத்தை மீண்டும் இயக்கி இந்திரலோகத்தில் இந்திரனை சேர்த்து விட்டு மீண்டும் இவ்விடமே வந்தார் மாதலி.
வனத்துக்குள் சுற்றி தெரிந்த மாதலிக்கு ஈசன் இருக்கும் திக்கு தெரியவில்லை. “நீ எங்கே இருக்கிறாய். நான் நீண்ட நேரமாக தேடிக் கொண்டிருக்கிறேன். எம்பெருமானே என்முன் தோன்றி எனக்கு அருள்புரிய வேண்டும்” என்று அன்பு கட்டளை இட்டார் மாதலி. அடியாரின் கட்டளையை எப்போதும் ஈசன் அடி பணிந்து ஏற்று நிறைவேற்றுவான் என்பதற்கு சான்றாக, தான் இருக்கும் இடத்தை அசரீரி வாக்கு மூலம் காட்டினார், அங்கே புதையுண்டு இருக்கும் சிவலிங்கம். அம்பாள் விக்கிரகங்கள் இரண்டும் மாதலியின் கண்ணில்பட, “பரம்பொருளே உன்னை தரிசித்து விட்டேன். உன்னை நான் மீட்டெடுத்து என் வாழ்வின் தவப் பயனை பெறுகிறேன்” எனக்கூறி சிவலிங்கத்தையும் அம்பாளையும் மீட்டெடுத்து பூமியின் மேல் வைக்கிறார். கண் மூடி தவம் செய்கிறார் மாதலி.
”ஈசனே. உனக்கு என்ன பெயர் சூட்ட வேண்டும்?” என்று மாதலி ஈசனை வினவ, அவரும், “யாம் இங்கு மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரராக கோயில் கொண்டிருந்தோம். ஆனால் பூமியில் புதையுண்ட எங்களை நீ மீட்டு எடுக்கும் பெரும் பாக்கியத்தை பெற்றதால், மாதலீஸ்வரர், சக்தி சுந்தர நாயகியாக அருள்பாலிக்கிறோம். இவ்வூரும் இனி மாதலி புரம் என அழைக்கப்படும்” என அசரீரியாய் கூறினார். காலப்போக்கில் இவ்வூரின் பெயர் மருவி மாதிரவேளூர் என்று ஆனது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ளது போல அம்பாள் சந்நிதிக்கு முன்பாக பொற்றாமரைக் குளம் உள்ளதால், இத்தலத்தை மதுரை தலத்துடன் ஒப்பிட்டுக் கூறுவதுண்டு. தீராத நோயால் அவதிப்பட்டு வந்த பிருங்கி முனிவரும் கௌசிக முனிவரும், இத்தலத்தில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் பௌர்ணமி தினத்தில் நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர். அதன்பின் படிப்படியாக நோயில் இருந்து நீங்கப் பெற்றதால் மாதிரிவேளூர் தலத்தில் இருக்கும் பொற்றாமரைக் குளம் கூடுதல் சிறப்பு பெறுகிறது.
கோயில் அமைப்பு
தற்போது உள்ள கோயில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டிருக்கலாம் என்று அதன் கட்டிட வடிவ மைப்பைவைத்து அனுமானிக்கப்படுகிறது, முதலில் நுழைவு வாயிலைக் கடந்து உள்ளே பலிபீடம், நந்திதேவரை வணங்கிச் சென்றால் மகா மண்டபத்தை அடையலாம். இதில் விநாயகர், சனீஸ்வரர் சந்நிதிகள் அமைந்துள்ளன. அடுத்து ஸ்தபன மண்டபம், அர்த்தமண்டபம் அமைந்துள்ளன. கருவறையில் கிழக்கு நோக்கி தாமரை வடிவிலான
பீடத்தில் பாணலிங்கமாய் மாதலீஸ்வரர் அருள்பாலிக்கிறார். கோஷ்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மதேவர், விஷ்ணு துர்கை அருள்
பாலிக்கின்றனர். முதல் பிரகாரத்தில் கன்னி விநாயகர், வள்ளி -தெய்வானை சமேத சுப்பிரமணியர், காசி விஸ்வநாதர், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர் சந்நிதிகளும், நவக்கிரகங்
கள், சூரியன் - பைரவர் ஆகியோர் இணைந்த ஒரு சந்நிதியும் அமைந்துள்ளன. கருவறைக்கு வலது பக்கத்தில் கிழக்கு நோக்கிய அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. பொதுவாக சிவாலயங்களில் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியே அமைந்திருக்கும். ஆனால் இக்கோயிலில் கிழக்கு நோக்கி அம்பாள் 4 திருக்கரங்களோடு அருள்பாலிக்கிறார். அம்பாள் சந்நிதியில் பாதிரி மரம் தல விருட்சமாக அமைந்துள்ளது. அருகே மங்கள கணபதி, சண்டிகேஸ்வரர் சந்நிதிகளும் அமைந்துள்ளன.
சிறப்பு பிரார்த்தனைகள்
தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 11 பௌர்ணமி தினத்தில் நீராடிவிட்டு சுவாமி - அம்பாள் இருவரையும் தரிசனம் செய்து பிரார்த்தனை செய்தால் நோயில் இருந்து மீளலாம். பல்வேறு காரணங்களால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்காமல் இருக்கும் பெண்கள், 3 பௌர்ணமி தினத்தில் அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்து பச்சை பட்டு சாற்றி பிரார்த்தனை செய்தால் மனம் போல் வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம். கண்திருஷ்டியில் இருந்து தப்ப வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. தேய்பிறை அஷ்டமி தினத்தில் தொழில் செய்வோர், வணிக நிறுவனம் நடத்துவோர், அனை
வரும் பைரவர் வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது.
திருவிழாக்கள்
கந்தசஷ்டி உற்சவம் 6 நாட்கள் கொண்டாடப்படுகிறது. சுப்ரமணியர் வள்ளி தெய்வானைக்கு. ஆறு நாட்களும் சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை செய்யப்படும். சிவராத்திரி தினத்தில் 4 கால பூஜை சிறப்பாக நடைபெறும். கார்த்திகை மாதத்தில் வரும் அனைத்து திங்கள்கிழமைகளும் சோமவாரமாக கொண்டாடப்படுகிறது. பெண்கள் சோமவார தினத்தில் 108 முறை பிரகார வலம் வந்து தரிசனம் செய்கின்றனர். கடைசி சோமவாரத்தில் சங்காபிஷேகம் நடைபெறும்.
சனிக்கிழமைகளில் தனி சந்நிதியில் உள்ள சனீஸ்வரருக்கு எள்தீபம் ஏற்றி சனியின் தாக்கம் குறைய பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். நவராத்திரி ஒன்பது நாட்களும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் அருள்பாலிக்கிறார்.