

விருதுநகர் மாவட்டம் பள்ளிமடத்தில் உள்ள காளைநாத சுவாமி கோயில், சிற்பக்கலைக்கு பெயர் பெற்ற கோயிலாகவும், தொழில் வளர்ச்சிக்கும் திருமணத் தடை நீங்குவதற்கும் சிறந்த பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.
பைந்தமிழ் பாக்களால், சைவநெறியை தழைத்தோங்கச் செய்த சமயக் குரவர்களின் பணி அளப்பரியது. சுந்தரமூர்த்தி நாயனார் தலங்கள்தோறும் சென்று இறைவனை தரிசித்து தேவாரப் பதிகங்களைப் பாடுவது வழக்கம். அந்த வகையில் பருத்திக்குடி நாடு என்ற பாண்டிய நாட்டின் உள்நாட்டுப் பிரிவில் அக்காலத்தில் அடங்கியிருந்த அரிகேசரி ஈஸ்வரம் என்ற திருச்சுழியலுக்கு சிவதரிசனம் செய்ய வருகை புரிந்தார்.
இவ்வூரின் கிழக்கே தென்வடலாக பாய்ந்து கொண்டிருக்கும் கௌடில்ய நதி (குண்டாறு) என்ற காட்டாறு அந்த வேளையில் வெள்ளப் பெருக்கெடுத்து இருகரை தொட்டபடி வேகமெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. அச்சமயத்தில் ஆற்றைக் கடந்து திருச்சுழியல் செல்வது இயலாத செயல் என்று எண்ணிய சுந்தரர், ஆற்றின் கிழக்குக் கரையில் இருந்த ஊரில் தங்கினார்.
தன் அடியாரின் உள்ளக்குறிப்பை உணர்ந்து கொண்ட இறைவன் அவரது வருத்தத்தைப் போக்க வேண்டி, அவரது கனவில் காளை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
சுந்தரர் காலை கண் விழித்து எழுந்ததும் நதியில் வெள்ளம் வடிந்து குறைந்து போயிருப்பதைக் கண்டு மகிழ்ந்தார். பின்னர் அங்கிருந்து கிளம்பி கனவில் காட்சியருளிய இறைவனைக் காண திருச்சுழியல் தலம் சென்று, ‘ஊனாய் உயிராய் புகலாய் அகலிடமாய் முகில் பொழியும்’ எனத் தொடங்கும் தேவார பதிகத்தைப் பாடினார்.
இத்தலத்துக்கு ஒரு முறை சோழன் தலை கொண்ட கோவீர பாண்டியன் (காலம்கி.பி 946-966) என்ற மன்னனின் அண்ணன் சுந்தரபாண்டியன் வந்திருந்த வேளையில் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். பல்வேறுபெருமைகளைக் கொண்ட இந்த நதிக்கரையிலேயே அவரை அடக்கம் செய்து, அந்த சமாதி மீது கற்றளியாய் ஒரு சிவாலயத்தைக் கட்டினான் கோவீர பாண்டியன்.
சமாதி மீது கட்டப்பட்ட கோயில் என்பதால் அதற்கு பள்ளிப்படை என்ற காரணப்பெயர் ஏற்பட்டது. கிபி 10-ம் நூற்றாண்டில் பள்ளிப்படை என அழைக்கப்பட்ட இவ்விடமே தற்போது மருவி பள்ளிமடம் என அழைக்கப்படுகிறது. பள்ளிமடம் சுந்தரபாண்டிய ஈஸ்வரமுடையார் கோயிலில் சோழன் தலைகொண்ட கோவீர பாண்டியனின் தமிழ் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் பல உள்ளன.
இவை இக்கோயிலுக்கு கொடுக்கப்பட்ட பல்வகைக் கொடைகள் பற்றி கூறுகின்றன. இக்கல்வெட்டுகள் கி.பி. 8-9-ம் நூற்றாண்டை சேர்ந்தவை ஆகும். இக்கோயிலே காளைநாத சுவாமி கோயில் என சொல்லப்படுகிறது. சடையன் மாறனின் ஆட்சியிலும் (கிபி 10-ம் நூற்றாண்டு) இக்கோயிலுக்கு பல தானங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
குண்டாறு எனப்படும் கௌடில்ய மகா நதியின் கிழக்குக் கரையில் 4 புறங்களிலும் கோட்டை மதில் போன்ற உயர்ந்த சுவர்களுடன் கிழக்குப் பார்த்த வண்ணம் இக்கோயில் அமைந்துள்ளது. கிபி 10-ம் நூற்றாண்டில் அக்கால வழக்கப்படி சுவாமிக்கு மட்டும் தனிக்கோயிலாய் தொடக்கத்தில் கட்டப்பட்டது. பிரதான வாசல் தாண்டியதும் பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன.
இதனை அடுத்து முகமண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற கட்டமைப்பில் பாண்டியர் கலைப் பாணியில் கற்றளியாக கட்டப்பட்டுள்ளது. காலப் போக்கில் முகமண்டபம் மற்றும் பல பரிவாரதேவதை சந்நிதிகளும் சிதிலமடைந்துவிட்டன.
மகா மண்டபத்தின் வடபுறம் ஆனந்தக் கூத்தரான நடராஜர் சந்நிதி உள்ளது. இதில் நடராஜர், சிவகாமி, பதஞ்சலி, வியாக்ரபாதர் விக்கிரகங்கள் உள்ளன. அர்த்த மண்டப வாசலில் அனுக்ஞை விநாயகர், சுப்ரமணியர் விக்கிரகங்கள் உள்ளன. கருவறை மூலவராக, சாந்நித்தியமிக்க தெய்வமாக காளைநாத சுவாமி எழுந்தருளியுள்ளார்.
தேவகோட்டத்தில் தெட்சிணாமூர்த்தி, சந்நிதி உள்ளது. மூலவர் விமானம் நாகர வடிவில் உள்ளது. சுவாமி சந்நிதியின் வலதுபுறத்தில் சொர்ணவல்லி அம்பாளின் தனிக்கோயில் உள்ளது. இது கிபி 13-ம் நூற்றாண்டில் பாண்டியர் ஆட்சியில் கட்டப்பட்டது. மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்றஅமைப்பில் இக்கோயில் அமைந்துள்ளது.
மகாமண்டப வடபுறம் காளிங்க நர்த்தனகிருஷ்ணர் சந்நிதியும் எதிரே ஆஞ்சநேயர் விக்கிரகமும் உள்ளன. சொர்ணவல்லி அம்பாள் வலக்கையில் நீலோற்பலமலர் ஏந்தியும், இடக்கையை தொங்கவிட்டபடியும் காட்சியருள்கிறார். தன் அடியார்களின்உள்ளக் குறிப்பை உணர்ந்து வரமளிக்கும் கருணாம்பிகையாக அம்பாள் போற்றப்படுகிறார்.
உள்சுற்றில் தீர்த்தக் கிணறு, கன்னிமூலை கணபதி சந்நிதி, தல விருட்சம் வில்வம் உள்ளன. தினமும் ஒரு கால பூஜைநடைபெறுகிறது. முன்பு பத்து நாள் விழாவாக கொண்டாடப்பட்ட திருவாதிரை திருநாள் போன்ற உற்சவ காலங்களில் சுவாமி புறப்பாடாகி, திருவீதி எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது. பௌர்ணமி தோறும் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரமும், திருவாசக முற்றோதல் நிகழ்வும் நடைபெறுகிறது.
தொழில் அபிவிருத்திக்கும், திருமணத் தடை நீங்குவதற்கும் பரிகாரத் தலமாக இக்கோயில் விளங்குகிறது. தமிழ் மாதப் பிறப்பு, தேய்பிறை அஷ்டமி, பிரதோஷம், விநாயகர் சதுர்த்தி, நடராஜருக்கு ஆண்டுக்கு ஆறு கால பூஜை, ஆடி வெள்ளிக் கிழமைதோறும் அம்பாளுக்கு அபிஷேகம், ஐப்பசி அன்னாபிஷேகம், மகா சிவராத்திரி ஆகிய விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.
பாண்டிய நாட்டு பாடல் பெற்ற தலங்கள் பதிநான்கில் திருச்சுழியலும் ஒன்றாகும். பகவான் ரமண மகரிஷியின் அவதாரத் தலமும் திருச்சுழியல் ஆகும். ஆண்டு முழுவதும் யாத்ரீகர்கள் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்யும்போது காளைநாத சுவாமி பள்ளிப்படைக் கோயிலையும் தரிசித்துச் செல்வது வழக்கம்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் இருந்து பார்த்திபனூர் செல்லும் நெடுஞ்சாலையில் 15 கிமீ தொலைவில் பள்ளிமடம் குண்டாற்றின் கிழக்குக் கரையில் கோயில் அமைந்துள்ளது.