

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிப்பான் என்பதற்கு ஏற்ப, குகையில் வீற்றிருந்து கிழக்கு திசை பார்த்து தோரணமலையில் முருகப் பெருமான் அருள்பாலிக்கிறார். திருச்செந்துரை நோக்கி சுவாமி அருள்பாலிப்பதால், திருச்செந்தூர் முருகனை வணங்கிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சித்தர்கள், முனிவர்கள் வாழ்ந்த தோரணமலை முன்பொரு காலத்தில் தமிழ் மருத்துவச் சாலையாக விளங்கியதாகவும், உலகிலேயே முதல் கபால அறுவை சிகிச்சை இங்குதான் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
இமயமலையில் சிவபெருமானுக்கும் பார்வதிதேவிக்கும் திருமணம் நடைபெற்ற சமயத்தில், தெய்வீக திருமணத்தைக் காண்பதற்காக முப்பத்து முக்கோடி தேவர்களும் குவிந்தனர். இதனால் பூமியின் வடக்குப் பகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்தது. பூமியை சமன்படுத்துவதற்காக குறுமுனி அகத்தியரை தென்திசைக்கு சிவபெருமான் அனுப்பினார். மேலும் தனது திருமணக் காட்சியை அகத்தியர் அவர் இருக்கும் இடத்தில் இருந்தே தரிசிக்கலாம் என்று உறுதியளித்தார்.
அகத்திய முனிவரும் தென்திசைக்கு பயணமானார். பொதிகை மலைக்கு அகத்தியர் வந்தபோது பூமி சமநிலை அடைந்தது. தென் தமிழகம் வந்த அகத்திய முனிவர் முருகப் பெருமானிடம் இருந்து தமிழ்மொழியைக் கற்று அகத்தியம் என்ற இலக்கண நூலை இயற்றினார்.
வரும் வழியில் தோரணமலையின் இயற்கை எழிலில் மனம் லயித்தார். மூலிகைச் செடிகள் ஏராளமான செழிப்புடன் வளர்ந்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார். தோரணமலையிலேயே தங்கி தவம் புரியவும், சித்த மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபடவும் விரும்பினார்.
தனது சீடர்களுக்கு மருத்துவ ஆராய்ச்சி தொடர்பான பாடல்களை கற்றுக் கொடுத்தார். பல்வேறு இடங்களில் இருந்து வந்த சித்தர்கள், இங்குள்ள பாடசாலையில் மருத்துவம் பயின்றனர். ஒருசமயம் தீராத தலைவலியுடன் வந்த காசிவர்மன் என்ற மன்னரை பரிசோதித்த அகத்திய முனிவர், அவரது தலைக்குள் சிறிய அளவிலான தேரை இருப்பதை அறிந்தார்.
மூச்சுப் பயிற்சியின்போது மன்னர் மூச்சை உள்ளிழுக்கும்போது தேரை மூக்கு வழியே தலைக்குள் சென்றிருக்க வேண்டும் என்பதை உணர்ந்தார். இதைத் தொடர்ந்து அகத்தியர், மன்னருக்கு கபால அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அவருக்கு உதவியாக இருந்த ராமதேவர் என்ற சீடர், சிகிச்சையின்போது சமயோசிதமாக செயல்பட்டு, அகத்தியரின் பாராட்டை பெற்றார்.
அகத்தியரும்ராமதேவரும் முருகப் பெருமானின் விக்கிரகத்தை வைத்து வழிபட்டு வந்தனர். அகத்தியரின் ஆலோசனைப்படி, ராமதேவர் தோரணமலையில் தங்கி மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார். 700 ஆண்டு காலம் வாழ்ந்த தேரையர் என்று அழைக்கப்பட்ட ராமதேவர், தோரணமலையில் தங்கியிருந்து அங்கேயே சமாதி அடைந்தார்.
தேரையரின் காலத்துக்குப் பிறகு முருகனுக்கு வழிபாடு நின்று போனது. விக்கிரகமும் காணாமல் போனது. 1930-ம் ஆண்டுக்குப் பிறகு பெருமாள் என்ற பக்தரின் கனவில் தோன்றிய முருகப் பெருமான், ஒரு சுனையில் இருக்கும் தனது விக்கிரகத்தை எடுத்து வழிபடுமாறு கூறினார். அதன்படி பெருமாள், ஊர் மக்களின் உதவியுடன் சுனையில் இருந்து முருகப் பெருமான் விக்கிரகத்தை எடுத்து, ஒரு குகையில் பிரதிஷ்டை செய்தார்.
1965-ம் ஆண்டுக்குப் பிறகு பெருமாளின் பேரன் ஆதிநாராயணன் கோயில் நிர்வாக பொறுப்புகளை ஏற்றார். கோயிலுக்கு செல்ல சரியான மலைப்பாதை இல்லாத காரணத்தால், புதிய படிகளை அமைத்தார். அடிவாரக் கோயில், சுனைகள் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டார். தற்போது அவரது மகன் செண்பகராமன் கோயில் நிர்வாகப் பொறுப்புகளை ஏற்று ஆன்மிகம் மற்றும் அறப்பணிகளை செய்து வருகிறார்.
அடிவாரத்தில் வல்லப விநாயகர், பால முருகன், குருபகவான், நவக்கிரகங்கள், சப்த கன்னியர், கன்னி மாரியம்மன் சந்நிதிகள் உள்ளன. 1,193 படிகள் ஏறிச் சென்றால் மலை உச்சியில் ஒரு குகைக் கோயிலில் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் முருகப் பெருமானை தரிசிக்கலாம்.
வழியில் பக்தர்கள் இளைபாறிச் செல்வதற்காக அகத்தியர், தேரையர், அருணகிரி நாதர், பாலன் தேவராயர், ஔவையார், நக்கீரர் ஆகியோர் பெயர்களில் 6 மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. இருட்டுவதற்குள் திரும்பி வருவது சிரமம் என்பதால் பிற்பகல் 3 மணிக்கு மேல் மலை ஏற அனுமதி இல்லை.
கோயில் அருகே வற்றாத சுனை உள்ளது. இங்குள்ள 64 சுனைகளில் உள்ள நீர் மருத்துவ குணம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. குகைக் கோயிலில் தினமும் காலை 5.30 மணிக்கே பூஜை நடைபெறுகிறது. மாதம்தோறும் பௌர்ணமி தினத்தில் காலை வேளையில் தோரணமலையைச் சுற்றி பக்தர்கள் வலம் வருகின்றனர்.
ஆண்டுதோறும் தைப்பூச விழாவும், வைகாசி விசாகமும் இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. தைப்பூச விழாவின்போது பெண்கள் சீர்வரிசை எடுத்துவர முருகப் பெருமான்–வள்ளி–தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
வாரண மலை: தொலைவில் இருந்து பார்க்கும்போது, ஒரு யானை (வாரணம்) படுத்திருப்பதைப் போன்று இம்மலை காட்சியளிப்பதால், வாரண மலை என்று முதலில் அழைக்கப்பட்டது. பின்னாட்களில் அதுவே தோரணமலை என்றாயிற்று. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் ராம நதியும் ஜம்பு நதியும் கடையம் அருகே ஒன்றாக இணைகின்றன.
இவை மலைக்கு இருபுறமும் தோரணம் போல அமைந்துள்ளதால் தோரணமலை என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. தோரணமலையில் ஒரு நாழிகை (24 நிமிடங்கள்) தியானம் செய்து முருகப் பெருமானை வழிபட்டால் உலகையே வெல்லும் ஞானம் கிடைக்கும் என்பதும், எப்படிப்பட்ட நோயும் தானாகவே குணமடைகிறது என்பதும் ஆன்றோர் வாக்கு.
தென்காசி - கடையம் சாலையில் தென்காசியில் இருந்து தென்கிழக்கே 15 கிமீ தொலைவிலும், கடையத்தில் இருந்து வடமேற்கே 9 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது தோரணமலை.