வரலாற்றுக்கு வழிகாட்டும் ஆவணம்!

வரலாற்றுக்கு வழிகாட்டும் ஆவணம்!
Updated on
2 min read

இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் திருத்தலத்தின் வரலாறையும் தேவாலயத்தைப் பற்றிய அரிய தகவல்களையும் `மார்வல் ஆஃப் மிராக்கிள்ஸ்' என்னும் புத்தகத்தின் வழியாக ஆவணமாக்கியிருக்கிறார் நிகோலஸ் ஃபிரான்சிஸ்.

பக்தர்களுக்கு மன அமைதியை தருவதற்காகவே பெர்டினான்ட் செல்லி என்னும் பாதிரியாரால், சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் பகுதியில் உன்னதமான திரு இருதய ஆண்டவர் தேவாலயம் 1884-ல் நிறுவப்பட்டது.

வெறுமே புகைப்படங்களின் தொகுப்பாக மட்டுமே இந்த நூல் சுருங்கி விடவில்லை. மாறாக, கலாச்சாரம், வரலாறு, பண்பாடு, கலை, மதம் தொடர்பான விழுமியங்களையும் கொண்டிருப்பது இந்நூலின் முக்கியத்துவத்தை அதிகரிக்கிறது.

திரு இருதய ஆண்டவர் தேவாலயத்தில் நுழையும் அனைவரையும், அதன் வேலைப்பாடுகளும் அழகிய சித்திரங்களின் கலை நுட்பமும் கண்கவர் சிலைகளும் மலைக்க வைக்கும்.

பாரிசில் மேரி ஆனி என்னும் பெண்மணி நீண்ட காலமாக இருதய நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். மருத்துவர்களும் கைவிட்ட நிலையில் அங்குள்ள ரெய்ம்ஸ் கிறித்துவ தேவாலயத்தில் தூய இருதய ஆண்டவரைத் தொழுது, இருதய நோயிலிருந்து குணமடைந்தார். இந்த அற்புத சக்தியால் தூய இருதய ஆண்டவரின் பக்தையாகத் திகழ்ந்தார்.

புனித இருதய ஆண்டவருக்கு திருத்தலம் கட்ட அவரிடம் உதவி கேட்க பாரிசுக்கு பயணித்தார் பெர்டினான்ட் செல்லி. இடைக்காட்டூரில் திருத்தலம் கட்ட பண உதவி வழங்கினார் மேரி ஆனி. இவரைப் போல நல்லுள்ளம் படைத்த பல கொடையாளர்களின் உதவியுடன் இடைக்காட்டூரில் திருத்தலம் கட்டும் பணிகளை மேற்கொண்டார் பெர்டினான்ட் செல்லி என்னும் தகவல்கள் நெகிழ்ச்சியாக நூலில் பதிவாகியிருக்கின்றன.

பல இடர்களைத் தாண்டி, இருதய ஆண்டவரின் அருளாலேயே தேவாலயம் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது என்பதை பெர்டினான்ட் செல்லி பதிவு செய்திருக்கிறார்.

வரலாற்று முக்கியத்துவம், கட்டிடப் பாணி, இறைத் திருவுருக்களின் சிறப்பு, தேவாலயத்தின் வழிபாட்டு முறைகள், புகைப்படங்கள் என ஐந்து சிறப்புகள் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன.

பிரான்சின் கோத்திக் கட்டிடக் கலை நுட்பத்துடன் அங்குள்ள ரெய்ம்ஸ் கிறிஸ்தவ ஆலய பாணியில் இருதய ஆண்டவர் தேவாலயம் வடிவமைக்கப்பட்டது. தேவாலயத்தின் முன்புறத் தோற்றம் கோத்திக் கட்டிடக் கலையின் `Arc' வில்வடிவத்தையும் உயரிய கோபுரத்தையும் கொண்டு விளங்குகிறது.

தேவாலயத்தின் உள்கூரை அமைப்பு உயர்ந்து அழகிய வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டிருக்கிறது. ஆலயத்துக்குள் இயற்கையான வெளிச்சம், காற்று வருவதுடன், வெப்பத்தின் தாக்கம் உள்ளே உணர முடியாதவண்ணம் கட்டப்பட்டுள்ளது.

தேவாலயத்தின் முன்பக்கத்தில் இரு பெரும் கோபுரங்கள் மணிகூண்டாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. பிரான்சிலிருந்து கொண்டுவரப்பட்ட மணிகளின் ஓசையானது மூன்று, நான்கு மைல்களுக்கு அப்பாலும் கேட்கும். சிறப்பான கலவை கொண்டு தேவாலயத்தின் தளம் முழுவதும் பூசப்பட்டிருக்கிறது.

தேவாலயத்தின் உள்ளே யேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. தேவதைகளின் ஓவியங்களும் சிலைகளும் காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது. சூரியக் கதிர்களை உள்வாங்கிக் கொண்டு, பிரகாசமாய் மின்னும் கண்கவர் கண்ணாடி ஓவியங்களும் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன.

பலி பீடத்தில் உள்ள தூய இருதய ஆண்டவரின் சிலையைப் பார்க்கும்போதே, நம்முள் இரக்கமும் கருணையும் சுரந்து, மனம் நெகிழ்ச்சியில் லேசாகிப் போவதை உணரமுடிகிறது. நூலில் இடம்பெற்றிருக்கும் படங்களும் வரலாறும் ரட்சகராய் காட்சி தரும் இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவரை ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டும் என்னும் ஆவலைத் தூண்டுகிறது. மார்வல் ஆஃப் மிராக்கிள்ஸ்–இடைக்காட்டூர்

ஆன்மிக நூலகம்:

மார்வல் ஆஃப் மிராக்கிள்ஸ் - இடைக்காட்டூர்

ஆசிரியர்: நிகோலஸ் ஃபிரான்சிஸ்
ஃபிரான்சிஸ் பதிப்பகம்,
விலை ரூ.750.
36, மகிழம்பூ தெரு, பாமா நகர்,
பி & டி காலனி அஞ்சல், மதுரை – 625 017.
தொலைபேசி: 0452-7961879.
கைபேசி: 75983-63390.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in