இயற்கையை ரசித்தபடி ஆன்மிக பயணம்: சார்தாம் யாத்திரை

கேதார்நாத்
கேதார்நாத்
Updated on
3 min read

இந்து மதத்தில் முக்கிய யாத்திரையாக சார்தாம் யாத்திரை விளங்குகிறது. பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 தலங்களை தரிசிக்க இந்த யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள இந்த தலங்களை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், சார்தாம் யாத்திரையை மேற்கொள்ள விருப்பம் கொண்டுள்ளனர். இயற்கை அழகை ரசிக்கும் விதமாகவும் இப்பயணம் அமைந்திருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் அதிகரித்த வண்ணம் உள்ளனர்.

டெல்லியில் இருந்து சார்தாம் யாத்திரையை மேற்கொள்வது சிறந்த வழியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கோடை மற்றும் மழைக் காலங்களில் இந்தப் பயணத்தை மேற்கொள்வது சிறந்ததாக அமையும். இவற்றில் கங்கோத்ரி, பத்ரிநாத் தலங்களை சாலை மார்க்கமாக சென்றடையலாம்.

யமுனோத்ரி மற்றும் கேதார்நாத் பயணத்தின் நிறைவு கட்டங்களில் செங்குத்தான மலையை ஏற வேண்டியிருக்கும். மட்டகுதிரை அல்லது டோலி ஏற்பாடு செய்து கொள்ளலாம். கேதார்நாத் செல்ல ஹெலிகாப்டர் வசதியும் உண்டு.

டெல்லி, ஹரித்வார், ரிஷிகேஷ், யமுனோத்ரி, கங்கோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத், தேவப்பிரயாகை, ஜோஷிமட் என்ற வகையில் இப்பயணம் இருக்கும். டெல்லியில் இருந்து ஹரித்வார் சென்று கங்கையில் நீராடிவிட்டு, அங்குள்ள மானசாதேவி, பூமாநிகேதன், வைஷ்ணதேவி கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும்.

யமுனோத்ரி
யமுனோத்ரி

மாலையில் கங்கை ஆரத்தி ஹர்க்கிபைரி கட்டத்தில் நடக்கும். (ஹர்க்கிபைரி–ஹரி என்பது திருமாலையும், பைரி என்பது திருவடியையும் குறிக்கும். இங்கு திருமாலின் பாதம் இருக்கும்) மறுநாள் ஹரித்வாரில் இருந்து 234 கிமீ பயணித்து ரானாசெட்டியை அடைய வேண்டும். அங்கு தங்கிவிட்டு மறுநாள் யமுனோத்ரிக்கு பயணிக்க வேண்டும்.

யமுனோத்ரி கோயில் கடல் மட்டத்தில் இருந்து 4,421 மீட்டர் உயரத்தில் உள்ளது. யமுனையின் இடது புறக்கரையில் உள்ள இக்கோயில் ஜானகி பாய் சட்டியில் இருந்து ஏறுமுகமான மலைப்பாதையில் 6 கிமீ பயணித்து கோயிலை அடையலாம். நிறைவில் அரை கிமீ செங்குத்தான பாதையாக இருக்கும். யமுனோத்ரி கோயிலின் முன்பாகம் தூண்களால் தாங்கப்பட்டு நிற்கிறது.

கருவறை மீதுள்ள விமானம் இமாச்சல பாணியில் உள்ளது. 4 கைகளுடன், தலையில் கிரீடம், கழுத்து முழுவதும் நகைகள், வடநாட்டு ஜரிகை சேர்ந்த சிவப்பு துணியால் அலங்கரிக்கப்பட்டு அம்மன் காட்சியருள்கிறார். அம்மனுக்கு முன் உற்சவ யமுனோத்ரி காணப்படுகிறார். இரவு ரானா செட்டிக்கு திரும்பி மறுநாள் உத்தரகாசிக்கு பயணம்.

ரானா செட்டியில் இருந்து 114 கிமீ பயணித்து உத்தரகாசியை அடைந்து, விஸ்வநாதர், சக்தியை தரிசிக்க வேண்டும். உத்தரகாசியில் தங்கிவிட்டு மறுநாள் காலை கங்கோத்ரிக்கு பயணம். உத்தரகாசியில் இருந்து 100 கிமீ பயணித்து கங்கோத்ரியை அடையலாம். கங்கை இறங்கி வரும் இடம் என்று இதை குறிப்பிடுவதுண்டு. சிவபெருமான் தனது முடியில் இருந்து வலிமையான கங்கையை இங்குதான் இறக்கினார்.

வெள்ளை சலவைக் கற்களால் யமுனோத்ரி கோயில் அமைந்துள்ளது. கங்கை வடமேற்கு திசையில் பாய்வதால் கங்கோத்ரி என்று அழைக்கப்படுகிறது. இங்கு நடுவில் கங்கை, இரு புறமும் யமுனை, சரஸ்வதி நதிகள் பயணிக்கின்றன. சிவபெருமான் சந்நிதி, பகீரதன் பலகை ஆகியவற்றை தரிசித்து உத்திரகாசி திரும்ப வேண்டும். மறுநாள் காலை பிப்பல் கோட்டை நோக்கி பயணம். அங்கு ஒருநாள் தங்கிவிட்டு மறுநாள் ஜோஷிமத்தை நோக்கி 35 கிமீ பயணம்.

கங்கோத்ரி
கங்கோத்ரி

ஜோஷிமத் நரசிங்க பெருமாள் கோயில் மிகவும் பிரபலம். நரசிங்க பெருமாள் பத்ரி என்றும் அழைக்கப்படுகிறார். குளிர்காலத்தில் பத்ரி விஷால் இங்கு தான் தங்குகிறார். தினமும் நரசிங்க மூர்த்தியின் சிலை சுருங்கி வருவது அதிசயம். சத்ய யுகத்தில் பத்ரிநாத் தன் இருக்கையை ஜோஷிமத்தில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள பவிஷ்ய பத்ரி என்ற கிராமத்துக்கு மாற்றிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

ஜோஷிமத்தில் இருந்து 41 கிமீ பயணித்தால் பத்ரிநாத்தை அடையலாம். 108 திவ்ய தேசங்களுள் ஒன்றான பத்ரி நாராயணர் கோயில் சுமோலி மாவட்டத்தில், அலக்நந்தா நதியில் இருந்து 3 கிமீ தொலைவில் உள்ளது. பௌத்தர்களின் கட்டிடக் கலையில் எழுப்பப்பட்டுள்ள இக்கோயில் 9-ம் நூற்றாண்டில் ஆதிசங்கரால் நிறுவப்பட்டது. தப்ட் குண்ட் வெந்நீர் ஊற்றுக்கு அருகே பத்ரி நாராயணர் விக்கிரகம் பதிக்கப்பட்டது.

16-ம் நூற்றாண்டில் கார்வால் அரசர், இந்த விக்கிரகத்தை தற்போதைய இடத்துக்கு மாற்றினார். கோயில் சபா மண்டபம், தரிசன மண்டபம், கருவறை என்று 3 பிரிவாக உள்ளது. கருவறையில் 2 கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தி, மற்ற 2 கரங்கள் யோக முத்திரைகளுடன் பத்மாசனத்தில் இருந்தபடி பெருமாள் அருள் பாலிக்கிறார்.

பத்ரி (இலந்தை) மரத்தடியில் அருள்பாலிக்கும் பத்ரி நாராயணருடன் உத்தவர், நரன், நாரத முனிவர், குபேரன், வெள்ளி விநாயகர், கருடாழ்வார் உள்ளனர். இரவு பத்ரிநாத்தில் தங்கிவிட்டு மறுநாள் பட்டாவுக்கு பயணம். 197 கிமீ பயணித்து பட்டா சென்றடைந்து அன்று அங்கு தங்கிவிட்டு மறுநாள் கேதார்நாத் நோக்கி பயணம். கௌரி குண்ட் என்ற இடத்தில் இருந்து ரம்பாரா, கருங்சட்டி, கேதார் என்று 14 கிமீ நடக்க வேண்டும். கேதாரைச் சுற்றி ஹம்ஸ்குண்ட், உதக் குண்ட், ரேட் குண்ட் என்று பல குண்டங்கள் உண்டு.

பத்ரிநாத்
பத்ரிநாத்

3,583 மீட்டர் உயரத்தில் சிவபெருமான் உறைந்திருக்கிறார். கருவறையில் உள்ள பாறையே சிவபெருமானாக வழிபடப்படுகிறது. கோயிலில் நெய் அபிஷேகம் சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது. கோயில் குளிர்காலத்தில் 6 மாத காலத்துக்கு மூடப்படும். அப்போது கோயிலில் ஏற்றப்படும் நெய் விளக்கு, 6 மாதம் கழித்து, கோயில் திறக்கப்படும் சமயத்திலும் எரிந்து கொண்டிருப்பது அதிசயம்.

தேவாரம் பாடப்பட்ட தலம் என்பதால் தமிழர்களின் பக்திக்கு இக்கோயில் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. சுவாமி தரிசனம் முடிந்து பட்டா திரும்ப வேண்டும். மறுநாள் காலை அலக்நந்தா–பாகீரதி நதிகள் சங்கமிக்கும் தேவபிரயாகைக்கு பயணம். இங்குள்ள ரகுநாத்ஜி (ராமர்) கோயில், 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாகும்.

8-ம் நூற்றாண்டில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட இக்கோயில், ராவணனை கொன்ற பாவம் தீர, ராமபிரான் தவம் செய்த இடமாகும். மீண்டும் ரிஷிகேஷ் திரும்பி சிவானந்த ஆசிரமம், ராம் ஜூலா, லட்சுமண் ஜூலா ஆகியவற்றை பார்த்துவிட்டு ஹரித்வார் திரும்ப வேண்டும். ஹரித்வாரில் கங்கையில் நீராடிவிட்டு டெல்லியை நோக்கி பயணம். இங்கிருந்து அவரவர் தங்கள் இருப்பிடம் நோக்கி பயணிப்பது வழக்கம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in