

இறை பூஜைகள், திருமணம், சுப நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் மங்கல அட்சதை முக்கிய இடம் பிடித்துள்ளது. ஆன்றோர், சான்றோர், மகான்கள், இல்லத்தின் முதியவர்களால் அட்சதை தூவப்பட்டு, ஆசி வழங்கப்படும்போது, புதிய வாழ்க்கை, புதிய தொழில் ஆகியன வாழையடி வாழையாக அவர்களுக்கு அதிர்ஷ்டத்துடன் கூடிய நன்மைகளை விளைவிக்கும் என்று கூறப்படுகிறது.
மங்கல அட்சதை என்று கூறப்படும் இதன் மகத்துவம் சிறப்பு வாய்ந்ததாக அறியப்படுகிறது. ஒவ்வொரு சுப நிகழ்ச்சியிலும் மங்கல அட்சதை பயன்படுத்தப்படுகிறது. இறைவனுக்கு பூஜை செய்வதற்கும், இளையவர்களுக்கு ஆசி வழங்குவதற்கும் அட்சதை பயன்படுத்தப்படுகிறது. க்ஷதம் என்றால் குத்துவது அல்லது இடிப்பது என்றும், அக்ஷதம் என்றால் இடிக்கப்படாதது என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.
உலக்கையால் இடிக்கப்படாத அரிசி (முனை முறியாத அரிசி) ’அக்ஷதை’ (அட்சதை) என்று அழைக்கப்படுகிறது. முனை முறிந்த அரிசியைக் கொண்டு ‘அட்சதை’ தயாரிப்பது முறையல்ல என்று பெரியவர்கள் கூறுவதுண்டு. முனை முறியாத அரிசியுடன் மஞ்சளை சேர்ப்பது வழக்கம்.
அரிசி பூமிக்கு மேல் விளையும் பொருளாகும். மஞ்சள் பூமிக்கு கீழ் விளையும் பொருளாகும். இவை இரண்டும் தூய பசுநெய் என்ற ஊடகத்தின் வாயிலாக இணைக்கப்படுகின்றன. சந்திரனின் அம்சம் கொண்ட அரிசியும், குருவின் அம்சம் கொண்ட மஞ்சளும், மகாலட்சுமியின் அருள்கொண்ட நெய்யால் இணைக்கப்படும்போது, அங்கு நல்ல அதிர்வு உண்டாகி, அந்த இடத்தில் சுபிட்சம் நிலவும் (நன்மைகள் நடைபெறும்) என்பது நம்பிக்கை.
வெண்மை நிறம் கொண்ட அரிசி, மஞ்சள் நிறம் கொண்ட மஞ்சள், நெய்யின் மினுமினுப்பு ஆகியன சேர்ந்த கலவையாக அறியப்படும் மங்கல அட்சதை, பெரியவர்களின் ஆசிகளைச் சுமந்து வரும் வாகனமாக போற்றப்படுகிறது. அரிசியை உடலாகவும், மஞ்சளை ஆன்மாவாகவும், நெய்யை தெய்வீக சக்தியாகவும் கருத வேண்டும் என்று ஆன்றோர் பெருமக்கள் கூறுவதுண்டு.
உடல், ஆன்மா, தெய்வசக்தியுடன் இணைந்து வாழ்கிறோம் என்ற பொருளிலேயே அட்சதை தூவப்படுவதாக கூறப்படுகிறது. வெவ்வேறு மாண்புகள் கொண்ட அரிசியும் (உடல்), மஞ்சளும் (ஆன்மா) இணைய பசு நெய்யான தெய்வ சக்தி (பாசமிகு உற்றார், உறவினர்) துணை புரிகிறது என்று அட்சதையின் தத்துவமாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே மணமக்களை வாழ்த்துவதற்கு மங்கல அட்சதை பயன்படுத்தப்படுகிறது.
இருந்த இடத்தில் இருந்து அட்சதை தூவுவது கூடாது என்றும், மணமக்களின் சிரசில் தூவி ஆசி வழங்குவதே முறையாகும் என்றும் பெரியவர்கள் கூறுவதுண்டு. புதிதாக தொழில் தொடங்கும் சமயத்தில், மங்கல அட்சதையால் ஆசி வழங்கப்படும்போது, அத்தொழில் வாழையடி வாழையாக அவர்களுக்கு அதிர்ஷ்டத்துடன் கூடிய நன்மைகளை விளைவிக்கும் என்பது சாஸ்திர ரீதியான உண்மையாகும்.