உலகின் மிக உயரமான இடத்தில் கோயில்: அம்மையப்பனுக்கு தன்னையே தந்த கார்த்திக் சுவாமி

 படங்கள்: ஜார்ஜ் பிரவீன் 
 படங்கள்: ஜார்ஜ் பிரவீன் 
Updated on
2 min read

தேவ பூமி என்று அழைக்கப்படும் உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற பல கோயில்களில் ருத்ரப் பிரயாகை கார்த்திக் சுவாமி கோயிலும் ஒன்று. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,050 மீட்டர் உயரத்தில் அமையப் பெற்றுள்ள இக்கோயிலில் அம்மையப்பனுக்கு தன்னையே அர்ப்பணித்த கார்த்திக் சுவாமி அருள்பாலிப்பது தனிச்சிறப்பு. ஞானப் பழத்தை பெற, விநாயகரும், முருகப் பெருமானும் சண்டையிட்ட கதை எல்லோருக்கும் தெரியும்.

இந்த உலகத்தை முதலில் சுற்றி வருபவர் களுக்கு ஞானப்பழம் தருவதாக சிவபெருமான் போட்டி வைக்கிறார். மயில் வாகனத்தில் ஏறி உலகை வலம்வர புறப்படுகிறார் முருகப் பெருமான். விநாயகரோ, ‘‘அம்மையப்பன்தான் உலகம்’’ என்று கூறி, தாய் தந்தையரான சிவபெருமான்–பார்வதி தேவியை வலம் வந்து ஞானப்பழத்தை பெறுகிறார்.

தனக்குதான் ஞானப்பழம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையுடன், உலகை சுற்றி வந்த முருகப் பெருமான், இதனால் கோபம் கொள்கிறார். தாய், தந்தையரை பிரிந்து, ஞானம் வேண்டி, கிரௌஞ்ச மலையில் தவம் இருக்கிறார்.

பின்னர், பெற்றோரை சமாதானப்படுத்தும் வகையில் தனது சதையை தாய் பார்வதி தேவிக்கும், எலும்பை தந்தை சிவபெருமானுக்கும் சமர்ப்பிக்கிறார். அங்கு உருவம் நீங்கும் முருகப் பெருமான் தெற்கில் பழநி மலையில் மீண்டும் உருவம் பெறுகிறார் என்று புராணக் கதைகள் கூறுகின்றன.

அவ்வாறு முருகப் பெருமான் தவம் இருந்த தலமான கிரௌஞ்ச மலை, உத்தராகண்ட் மாநிலம் ருத்ரப் பிரயாகை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த மலையின் உச்சியில் ‘கார்த்திக் சுவாமி’ என்கிற பெயரில் அருவமாக அருள்பாலிக்கிறார் முருகப் பெருமான். வழக்கமாக கோயில்களில் முருகப் பெருமான் தண்டாயுதபாணியாக வேல் ஏந்தி நிற்பார்.

அல்லது, வள்ளி தெய்வானை சமேதராக அமர்ந்த நிலையில் காட்சிஅருள்வார். மயில் மேல் அமர்ந்த கோலத்திலும் காட்சி அருள்வதுண்டு. ஆனால், எலும்பு, சதை என தன்னையே தாய், தந்தையருக்கு அர்ப்பணித்த குமரன், இந்த கிரௌஞ்ச மலையில் அருவமாக காட்சி அருள்கிறார். அதாவது, எலும்பு போலவே இறைவன் திருமேனி காணப்படுகிறது.

ருத்ரப்பிரயாகையில் இருந்து பொக்ரி செல்லும் சாலையில் 38 கி.மீ. தூரத்தில் இருக்கிறது கனக் சௌரி என்கிற கிராமம். இதுதான் கிரௌஞ்ச மலையின் அடிவாரம். இங்கிருந்து 4 கிமீ தூரம் மலைப் பாதையில் நடந்து, சுமார் 400 படிக்கட்டுகள் ஏறிச் சென்றால், மலை உச்சியை அடையலாம்.

கடல் மட்டத்தில் இருந்து 3,050 மீட்டர் உயரத்தில், அதாவது, 10 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது கார்த்திக் சுவாமி கோயில். இமயமலையின் வெளிச்சுற்று போல அமைந்திருக்கும் சிவாலிக் மலைத் தொடரின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.

இதே ருத்ரப் பிரயாகை மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 3,680 மீட்டர் உயரத்தில் உள்ள துங்கநாத் கோயில்தான், உலகிலேயே மிக உயரமான இடத்தில் இருக்கும் சிவன் கோயிலாக உள்ளது. அந்த வகையில், கிரௌஞ்ச மலை கார்த்திக் சுவாமி கோயில்தான் உலகிலேயே மிக உயரமான இடத்தில் இருக்கும் முருகன் கோயிலாக கருதப்படுகிறது.

அக்டோபர் முதல் ஜூன் வரையிலான மாதங்கள் இங்கு சென்றுவர ஏற்ற காலகட்டம் ஆகும். கார்த்திகை மாத பௌர்ணமியில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஸ்கந்த மஹா யாகம், 108 வலம்புரி சங்கு பூஜை ஆகிய வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

உத்தராகண்ட் தலைநகர் டேராடூனில் இருந்து சுமார் 210 கி.மீ. தூரத்திலும், ருத்ரப் பிரயாகையில் இருந்து 38 கி.மீ. தூரத்திலும் கனக் சௌரி உள்ளது. டேராடூன் அல்லது ருத்ரப் பிரயாகையில் இருந்து சாலை மார்க்கமாக கனக்சௌரி செல்லலாம். ரயில் வசதி ரிஷிகேஷ் வரையும், விமான வசதி டேராடூன் வரையும் உள்ளது.

வடமொழியில் கார்த்திகேயன், சுப்ரமண்யன், குகன் என்றெல்லாம் அழைக்கப்பட்டாலும்கூட முருகப் பெருமானுக்கு வட மாநிலங்களில் அவ்வளவாக பிரசித்தி பெற்ற கோயில்கள் இல்லை. இந்த சூழலில், நாட்டின் வட கோடியில் இமயமலை அடிவாரத்தில், திபெத் மற்றும் நேபாள நாட்டின் எல்லைக்கு அருகில் உள்ள கிரௌஞ்ச மலையின் உச்சியில் தமிழ்க் கடவுள் முருகனுக்கு கோயில் இருப்பது வியப்பாக இருக்கிறது.

பாஞ்ச் தாம் யாத்திரை: தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுமாறு பிரார்த்தித்து இறைவன் சந்நிதியில் மணி கட்டும் வழக்கம் இக்கோயிலில் உள்ளது. அந்த வகையில், கோயில் வளாகம் முழுவதும் திரும்பிய பக்கமெல்லாம் விதவிதமான மணிகள் அசைந்தாடுகின்றன.

‘‘உங்கள் பிரார்த்தனைகளை நான் நிறைவேற்றுகிறேன்’’ என்று, அந்த ஞான வடிவான முருகனே கூறுவதுபோல, கிரௌஞ்ச மலையெங்கும் எதிரொலிக்கிறது கோயில் மணிகளின் ஓசை. இக்கோயிலை சார்தாம் யாத்திரையுடன் இணைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in