

மும்பை மகாலட்சுமி கோயிலைப் போல் சென்னையில் திருமகளுக்கு கோயில் எழுப்பும் திட்டத்தின் நிறைவாக, பெசன்ட் நகரில் அமைந்துள்ள அஷ்டலட்சுமி கோயில், காஞ்சி மகாஸ்வாமியின் அனுக்கிரகத்துடன், முக்கூர் ஸ்ரீநிவாச வரதாச்சாரியாரின் தீவிர முயற்சியில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காஞ்சி மகாஸ்வாமியிடம் மிகுந்த பக்தி கொண்ட முக்கூர் ஸ்ரீநிவாச வரதாச்சாரியார் என்ற உபன்யாசகர், ஒருசமயம் (1974-ம் ஆண்டு) உபன்யாசம் செய்வதற்காக மும்பை சென்றிருந்தார்.
மும்பை நகரம் செழிப்பாக இருப்பதற்கு, அங்கு எழுந்தருளியிருக்கும் மகாலட்சுமியே காரணம் என்பதை உணர்ந்த உபன்யாசகர், அதேபோன்று சென்னையிலும் ஒரு கோயிலை எழுப்பஎண்ணினார். தனது விருப்பத்தை மகாஸ்வாமியிடம் தெரிவித்தார். உடனே மகாஸ்வாமி, “நீயேகட்டலாமே” என்று தெரிவிக்க, தனது ஏழ்மை குறித்து உபன்யாசகர் கூறுகிறார்.
அனைத்தும் சிறப்பாக நடந்தேறும் என்றுமகாஸ்வாமி திருவாய் மலர்ந்ததும், மகிழ்ச்சி அடைந்த முக்கூர் சுவாமி, அதற்கான பணிகளைத் தொடங்குகிறார். பாற்கடலில் உதித்தவள் என்பதால், மகாலட்சுமிக்கு சென்னை கடற்கரை அருகே இடம் தேடினார். சென்னை பெசன்ட் நகரில் 8 கிரவுண்ட் நிலம் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, முக்கூர் சுவாமி, அந்த இடத்துக்குச் சென்று பார்க்கிறார்.
ஒரு கிரவுண்ட் ரூ.5,000 என்று விலை பேசப்பட்டு, 8 கிரவுண்ட் நிலத்துக்கான தொகை (ரூ.40,000), மகாஸ்வாமியின் அனுக்கிரகத்துடன், அவரது பக்தர் (ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் மேலாளர்) மூலமாக வங்கிக் கடனாகப் பெறப்பட்டு, அளிக்கப்பட்டது.
மாமல்லபுரம் ஸ்தபதியிடம் மகாலட்சுமி விக்கிரகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அஷ்டலட்சுமியின் பெருமைகளை முக்கூர் சுவாமி, அவரது நண்பரான கோவை லட்சுமி சில்க்ஸ் அதிபர் ஜி.கே.தேவராஜுலுவிடம் கூற,அவர் அஷ்டலட்சுமிகளுக்கும் கோயில் எழுப்பலாம் என்று கூறினார். காஞ்சி மகாஸ்வாமியும் இதற்கு ஒப்புதல் தர, அஷ்டலட்சுமிக்கும் கோயில் கட்டும் பணி தொடங்கியது.
பணவசதி இல்லாத ஏழைக் குடும்பத்தினரும் இதில் பங்கு பெறும் நோக்கில், அஷ்டலட்சுமிகளும் இடம்பெற்ற ஒரு படம் கல்கி சதாசிவம் ஏற்பாட்டின் பேரில், தலை சிறந்த ஓவியர் மூலமாக வரையப்பட்டு, அப்படம் ரூ.11-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஓவியத்தின் மேல்பகுதியில் ‘காஞ்சி பெரியவா அனுக்கிரகத்துடன்’ என்ற வார்த்தையை கல்கி சதாசிவம் சேர்த்தார்.
பட விற்பனை மூலம் தொகை சேர்ந்தது. தேவராஜுலு மற்றும் பக்தர்களின் உதவியுடன் பணிகள் வேகம் பெற்றன. (அஷ்டலட்சுமி ஓவியத்தை, முக்கூர் சுவாமி, மகாஸ்வாமியிடம் காண்பிக்கும் சமயத்தில் இந்தக் கட்டுரையின் ஆசிரியரும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது)
மகாஸ்வாமியின் ஆலோசனைப்படி, அஷ்டாங்க விமானம் கட்ட ஏற்பாடானது. மகாலட்சுமியைச் சுற்றி 8 லட்சுமிகளும் இருக்க வேண்டும்என்று முடிவானது. 1974-ம் ஆண்டு தொடங்கப்பட்ட திருப்பணிகள், 1976-ம் ஆண்டு நிறைவு பெற்றது. வைணவ ஆச்சாரியர் அழகிய சிங்கரின் ஆலோசனைப்படி மகாலட்சுமிக்கு அருகில் ஸ்ரீமன் நாராயணனின் விக்கிரகமும் ஸ்தாபிக்கப்பட்டு, 5-4-1976 தேதியில் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது.
மகாஸ்வாமி ஆலோசித்தபடி, முக்கூர் ஸ்வாமி தன்னுடைய மார்கழி மாத உபன்யாசத்தில் திருப்பாவையுடன், திருவெம்பாவையையும் சேர்த்து விளக்கம் அளித்தார்.
கோயில் அமைப்பு: வங்கக்கடல் அமைந்திருக்கும் கிழக்கு திசை நோக்கிய அஷ்டலட்சுமி கோயில், அஷ்டாங்க விமானத்துடன் பழங்கால மன்னர்களின் கலைத்திறனை பறைசாற்றும் விதமாக காட்சியளிக்கிறது. 24 கால் மண்டபத்தின் இடது, வலது புறங்களில் சங்கநிதியும் பதுமநிதியும் காட்சி அருள்கின்றனர். இந்த மண்டபத்தைத் தாண்டி படியேறினால் ஸ்ரீ மகாலட்சுமியுடன் உறையும் மஹாவிஷ்ணுவின் கருவறையை அடையலாம்.
பத்ம பீடத்தில் நின்ற கோலத்தில் 2 கரங்களில் தாமரை மலர்களை ஏந்தியும், மற்ற 2 கரங்களில் அபய, வரத முத்திரைகளுடன், 7 அடி 3 அங்குல உயரத்துடன் மகாலட்சுமி அருள்பாலிக்கிறார். கருவறையை சுற்றி வரும்போது, தெற்கு நோக்கிய ஆதிலட்சுமி, மேற்கு நோக்கிய தானிய லட்சுமி, வடக்கு நோக்கிய தைரியலட்சுமி ஆகியோரை தரிசிக்கலாம்.
அடுத்து படியேறிச் சென்றால் கிழக்கு நோக்கிய கஜலட்சுமி, தெற்கு நோக்கிய சந்தானலட்சுமி, மேற்கு நோக்கிய விஜயலட்சுமி, வடக்கு நோக்கிய வித்யாலட்சுமி ஆகியோரை தரிசிக்கலாம். மேலும் படியேறிச் சென்றால், கிழக்கு நோக்கிய கருவறையில் தனலட்சுமியை தரிசிக்கலாம்.
கோயிலின் 3 தளங்களிலும் அஷ்ட லட்சுமிகளையும் தரிசிக்கலாம். இரண்டாவது தளத்தில் உள்ள தென்கிழக்கு திசையில் லட்சுமிகல்யாணக் காட்சி, தென்மேற்கில் ஸ்ரீவைகுண்டக் காட்சி, வடகிழக்கில் திருப்பாற்கடலைக் கடையும் காட்சியை தரிசிக்கலாம்.
மேலும் வடமேற்கில் ராமானுஜர், மத்வாச்சாரியாரை தரிசிக்கலாம். மூன்றாவது தளத்தில் மஹாவிஷ்ணுவின் தசாவதாரக் கோலம், ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரத்தை உச்சரிக்கும் காட்சி, தூப்புல் நிகமாந்த தேசிகரின் அருட்காட்சியை தரிசிக்கலாம்.
கோயிலில் பெரிய திருவடி கருடாழ்வார், கமல விநாயகர், குருவாயூரப்பன், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், யோக நரசிம்மர் சந்நிதிகளும் உள்ளன. ஆடி வெள்ளி, தை வெள்ளி, புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி தீபாவளி தினங்களில் மகாலட்சுமி தாயாருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன. இந்த தினங்களில் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
மகாலட்சுமி தாயார் வில்வ மரத்தில் வாசம் செய்வதால், இந்த மரமே இங்கு தலமரமாக போற்றப்பட்டு வளர்க்கப்படுகிறது. காலை 6.30 முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 முதல் இரவு 9 மணி வரையும் இக்கோயில் திறந்திருக்கும்.