லண்டன் மாநகரில் புகழ்பெற்று விளங்கும் உயர்வாசல் குன்று முருகன் கோயில்

லண்டன் மாநகரில் புகழ்பெற்று விளங்கும் உயர்வாசல் குன்று முருகன் கோயில்
Updated on
3 min read

லண்டன் மாநகரில் அமைந்துள்ள கோயில்களில் மிகவும் பிரபலமானதாக விளங்கும் உயர்வாசல் குன்று முருகன் கோயில், பக்தர்கள் வேண்டும் வரம் அருளும் தலமாக விளங்குகிறது. அருள்மழை பொழியும் முருகப் பெருமான் வள்ளி, தேவசேனாவுடன் வீற்றிருந்து, பக்தர்களை தீமையில் இருந்து காத்தருள்கிறார்.

தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் முருகப் பெருமான், தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவில் கர்நாடகா (சுப்பிரமண்யா), கேரளா (ஹரிப்பாடு), உத்தராகண்ட் (ருத்ரபிரயாக்) மாநிலங்களிலும் கோயில் கொண்டுள்ளார். மயில் மீது அமர்ந்து முருகப் பெருமான் தரணி முழுவதும் வலம் வந்தார் என்பதற்கு ஏற்ப, உலகெங்கும் முருகப் பெருமானுக்கு கோயில்கள் அமைந்துள்ளன. அந்த வகையில் லண்டன் மாநகரில் அமைந்துள்ள உயர்வாசல் குன்று முருகன் கோயில் புகழ்பெற்றதாக விளங்குகிறது.

பண்டைய கால சைவ (இந்து) வேத ஆகமங்கள் மற்றும் கட்டிடக் கலை முறைப்படி லண்டன் உயர்வாசல் குன்று முருகன் கோயில் கட்டப்பட்டுள்ளது. முன்னதாக லண்டனில் கிரேட் பிரிட்டன் இந்து சங்கம் என்ற அமைப்பு1966-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

சைவ சித்தாந்தத்தையும், சமய வழிபாட்டு முறையையும் வளர்க்கும் பொருட்டு இச்சங்கம் தொடங்கப்பட்டது. பிஜி, மலேசியா, சிங்கப்பூர், இந்தியா, இலங்கை, மொரீஷியஸ், தென் ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் இருந்து லண்டன் மாநகரில் குடியேறிய தமிழர்கள் மத நம்பிக்கை மற்றும் கலாச்சாரத்தை பின்பற்ற உதவும் நோக்கில் இச்சங்கம் செயல்பட்டு வந்தது.

இதன் நிறுவனர்–தலைவராக இருந்த ச.சபாபதிபிள்ளை, சைவ சமயத்தை மேற்குநோக்கி கொண்டு செல்லும் பணியுடன்பிரிட்டனுக்கு வந்தார். இலங்கையில் மத சேவைகளின் பின்னணி உடைய இவர் தனது வழக்கறிஞர் தொழிலைத் துறந்தார். தமிழகத்தின் பழநி சைவ சித்தாந்தக் கல்லூரியின் முதல்வராக இருந்த ஈசான சிவாச்சாரியாரிடம் சைவ சித்தாந்தம் உள்ளிட்டவற்றை கற்று, மூவகை தீட்சை பெற்ற இவர் 38 ஆண்டுகள் தொடர்ந்து சிவபூஜை செய்து வந்தார்.

1973-ம் ஆண்டில், கும்பகோணத்தைச் சேர்ந்த மோகன்ராம் என்பவரால் இந்தியாவில் திருச்செந்தூர் முருகன் விக்கிரஹம் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு, லண்டனில் சிறப்பு வழிபாடுகளுடன் நிறுவப்பட்டது. இதைத் தொடர்ந்து, வழக்கமான அபிஷேகங்கள், பூஜைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதையடுத்து பிரிட்டானியா இந்து கோயில் அறக்கட்டளை (17-08-1974) உருவாக்கப்பட்டது.

இந்த அறக்கட்டளை 7 அறங்காவலர்களைக் கொண்டுநிர்வகிக்கப்படுகிறது. 650-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். வட அமெரிக்காவின் இந்து டெம்பிள் சொசைட்டியின் செயலர் டாக்டர். அழகப்பன் அறக்கட்டளையின் விவகாரங்களில் அக்கறை காட்டினார்.

மதராஸ் பன்றிமலை சுவாமிகளை தொடர்பு கொண்டு, லண்டனில் கோயில் கட்டும் நோக்கில் ஒரு யந்திரத்துக்கு பூஜை செய்யும்படி வேண்டினார். முருகப் பெருமான் விக்கிரகத்தின் ஆன்மிக சக்தியை நிலைநிறுத்துவதற்காக, 12 ஆண்டுகள் பூஜைகள் நடத்தப்பட்டன.

கோயில் நிர்வாகப் பணிகளுக்காக கிரேட் பிரிட்டனின் இந்து சங்க நன்கொடையாளர்கள் மூலம் 5,000 பவுண்ட் ஸ்டெர்லிங் திரட்டப்பட்டது. 1977-ம் ஆண்டு வரை 250 உறுப்பினர்கள் வழங்கிய நன்கொடை, அறக்கட்டளைத் தலைவர் தலைமையில் நிகழ்த்தப்பட்ட திருமணங்கள், வழிபாட்டுக் கூட்டங்கள், இறுதிச் சடங்குகள் மூலம் இந்தத் தொகை திரட்டப்பட்டது. காலப்போக்கில் இத்தொகை 12,000 பவுண்ட் ஸ்டெர்லிங் அளவுக்கு அதிகரித்தது.

இந்தத் தொகை 1977-ம் ஆண்டு 200 ஏ, ஆர்ச்வே ரோடு ஹைகேட் ஹில் என்ற இடத்தில் பெரிய அளவிலான நிலம் வாங்குவதற்கு உதவியது. நிறைவாக இந்த இடத்தில் அறக்கட்டளை சார்பில் தென்னிந்திய கட்டிடக் கலையுடன் கோயில் எழுப்பப்பட்டது. ஒரு நூலகம், தலா 500 பேர் அமரும் வகையிலான 2 அரங்குகள், தலைமை அர்ச்சகர் தங்கும் குடியிருப்புகளும் கட்டப்பட்டன.

பட்டய, சிவில், கட்டமைப்பு பொறியாளர்கள், பட்டய அளவு சர்வேயர், கட்டிடக் கலைஞர் ஆகியோர் அடங்கிய கட்டுமானக் குழு, உள்ளூர் நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்கான திட்டங்களைத் தயாரிப்பதில் முக்கிய பங்காற்றினர். 1979-ம் ஆண்டில் 3,000 பவுண்ட் ஸ்டெர்லிங் செலவில் ஒரு பிரார்த்தனைக் கூடம், அர்ச்சகர் குடியிருப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பிரம்மாண்ட கட்டுமானத்தை அமைப்பதில் இக்குழுவினர் முக்கிய பங்கு வகித்தனர்.

1979-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி, வளாகத் திறப்புவிழா நடைபெற்றது. இதில் 700-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து புத்தாண்டு தினத்தில் சண்முகர் மற்றும் சக்தி விக்கிரகங்கள் பிரதிஷ்டை (பிராண பிரதிஷ்டை விழா) செய்யப்பட்டன. நிறைவாக மற்ற தெய்வ விக்கிரகங்கள் பிரதிஷ்டை வைகாசி விசாக தினத்தில் (28-05-1982) நடைபெற்றது.

அறக்கட்டளை உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்து, நிதி மேம்பாடு அடைந்தது. 1982-ம் ஆண்டு கோயில் வளாகத்தில் மூன்று மாடி கட்டிடம் கட்ட ஏற்பாடானது. கோயில் மிகவும் பிரபலம் அடைந்ததால், நிரந்தர அர்ச்சகரை நியமிக்க முடிவானது.

சமூக மற்றும் கலாச்சார நிகழ்வுகள் மூலம் நிதி (1982-ம் ஆண்டு வரை) திரட்டப்பட்டது. சீர்காழி கோவிந்தராஜன், எம்.எல்.வசந்தகுமாரி, டி.எம்.சௌந்தரராஜன், பித்துக்குளி முருகதாஸ், சேலம் ஜெயலட்சுமி, ஜலஜா குமார் (நடனம்) ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சமயக் கல்வியும் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கப்பட்டன. வார இறுதி நாட்களில் கிரீன்போர்டு தமிழ் பள்ளியில், குழந்தைகளுக்கு சமயம் சார்ந்த கல்வி (பாராயணம், ஸ்லோகம், திருப்புகழ் வகுப்புகள்) கற்பிக்க ஆசிரியர் நியமிக்கப்பட்டார்.

1986-ம் ஆண்டு ஜூலை 9 முதல் 13-ம் தேதி வரை குடமுழுக்கு வைபவம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, 45 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெற்றது.

பிரட்டன் ராணி எலிசபித் 2, தான் ராணியாக பொறுப்பேற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, 2002-ம் ஆண்டு ஜூன் 6-ம் தேதி, இக்கோயிலுக்கு வருகை புரிந்தார். ஆங்கிலேயர் வரலாற்றில், ஆங்கிலேய அரசர் / அரசி வருகை புரிந்த முதல் இந்து கோயிலாக இக்கோயில் உள்ளது. இளவரசர் பிலிப்புடன், கோயிலுக்கு வந்த ராணி, சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக கோயிலில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தைப்பூசம், மாசிமகம், சிவராத்திரி, பங்குனி உத்திரம்,சித்திரை பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆவணி அவிட்டம், நவராத்திரி, கந்த சஷ்டி, காரத்திகை தீபம், மார்கழி திருவாதிரை ஆகிய நாட்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். தேர்த் திருவிழாவும் கோலாகலமாக நடைபெறுகிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in