

திருமாலின் பத்து அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும். நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நலம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களாலும் நரசிம்ம மூர்த்தி அழைக்கப்படுகிறார். ‘எல்லாப் பொருட்களுக்கு உள்ளேயும் நான் இருக்கிறேன்’ என்பதை உணர்த்தவே பகவான் நரசிம்ம அவதாரம் எடுத்தார். அதனால் நரசிம்ம மூர்த்தியை எங்கும் வணங்கலாம்.
நரசிம்ம மூர்த்தியை உபாசனா தெய்வமாக ஏற்று தினமும் மனதார வழிபட்டால், அனைத்து திசைகளிலும் புகழ் கிடைக்கும். நரசிம்ம மூர்த்திக்கு உகந்ததாக பானகம், பழ வகைகள், இளநீர் கூறப்படுகிறது.
நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர். நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று பொருள், பகவான் பல அவதாரங்களை எடுத்தாலும், அவனுடைய நாமங்கள், நிறைவில் நரசிம்ம மூர்த்தியிடம் சென்று அடைவதாக கருதப்படுகிறது.
சஹஸ்ரநாமத்தில் முதன் முதலாக நரசிம்ம அவதாரம்தான் இடம் பெற்றுள்ளது. ராமாயணம், மகாபாரதம், பாகவதம், 18 புராணங்கள், உப புராணங்கள் அனைத்திலும் நரசிம்மரின் சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
நரசிம்மரை வழிபடுவதால், பில்லி, சூன்யம், செய்வினைக் கோளாறுகள் நம்மைத் தீண்டாது. அனைத்து தீய சக்திகளும் விலகி ஓடிவிடும். எதிரிகள் தொல்லை, எதிர்ப்புகள், பொய் வழக்கு தொல்லைகள், வீண் பழிகள் அனைத்தும் விலகும்.
திருந்த வாய்ப்பு: மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் தவறு செய்வது இயல்பு. அவர்களை மன்னிப்பது இறைவனின் இயல்பு. மனிதன் தன் தவறை உணர, இறைவன் அவ்வப்போது பல வாய்ப்புகள் வழங்குவதுண்டு. இறைவன் யாரையும் உடனே தண்டிப்பதில்லை. திருந்துவதற்கு எவ்வளவு சந்தர்ப்பம் தர முடியுமோ, அவ்வளவு சந்தர்ப்பம் தருகிறார்.
ஒவ்வொரு மனிதருக்கும் தன் வாழ்நாளில் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும். அவர் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த விநாடி எடுக்கும் முடிவு, அவர்கள் வாழ்க்கையையே மாற்றும்.
ராவணனுக்கு அந்த வாய்ப்பு, ‘இன்று போய் நாளை வா’ என்று ராமபிரான் சொன்னபோது கிடைத்தது. அதை அவன் பயன்படுத்திக் கொள்ளவில்லை. கண்ணன் தூது சமயத்தில் துரியோதனனுக்கு திருந்த வாய்ப்பு கிடைத்தது. ஸ்ரீமன் நாராயணனாக விஸ்வரூபம் எடுத்து, அவன் முன்னர் தான் யார் என்பதை உணர்த்தியபோதும், ஒரு வாய்ப்பு கிடைத்தது.
போர் சமயத்தில் காண்டீபனுக்கு குழப்பம் நேர்ந்தது. போரிடுகிறாயா அல்லது வில்லை கீழே போடுகிறாயா என்று இறைவன் கேட்டதும், கிடைத்த வாய்ப்பைப் பற்றிக் கொண்டான் காண்டீபன். கர்ணன் முன்னர் தோன்றிய இறைவன், அவன் திருந்த ஒரு சந்தர்ப்பம் அளித்தார். ஆனால் செஞ்சோற்றுக் கடன் என்று அதை நிராகரித்துவிட்டான் கர்ணன். இதே செஞ்சோற்றுக் கடனுக்காக இறைவன் அளித்த வாய்ப்பை, கும்பகர்ணனும் நிராகரித்துவிட்டான்.
இரணியன் திருந்துவதற்காக இறைவன் பல வாய்ப்புகளை அளித்தார். பிரஹலாதனை பல ஆண்டுகள் சித்ரவதை செய்தபோதும், அவன் திருந்த சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது. ஒரு சிறுவனைக் கூட தன்னால் கொல்ல முடியவில்லை என்பதை உணர்ந்தும், இரணியன் திருந்தவில்லை. நிறைவாக இறைவன், நரசிம்ம அவதாரம் எடுத்து வந்து இரணியனை தன் மடிமேல் கிடத்தி, அவன் விழிகளை உற்று நோக்கினார்.
அப்போதும் அவன் மனதில் பக்தி வரவில்லை. அவன் துளியும் திருந்தவில்லை. இரணியன் விழிகளில் வெறுப்பை உணர்ந்தார் ஸ்ரீமன் நாராயணன். இனிமேலும் இரணியன் திருந்தவே மாட்டான் என்பதை அறிந்த பின்னரே அவனை மாய்த்தார் ஸ்ரீமன் நாராயணன்.