

எந்தவொரு கலைஞரும் அவர் வாழும் காலத்திலேயே அவரின் கலையைப் போற்றி பரிசுகள், விருதுகள், பாராட்டுகள், அங்கீகாரங்கள் அளிக்கப்படுவதையே விரும்புவர். அதுதான் கலைக்கும் கலைஞருக்கும் இந்தச் சமூகம் அளிக்கும் உரிய மரியாதையாக இருக்கும்.
இந்த மரியாதையை கலைஞர்களுக்கும் வாத்தியங்களைச் உருவாக்கும் கைவினைஞர்களுக்கும் கடந்த பத்தாண்டுகளாக அளித்துவரும் அமைப்பு பரிவாதினி. அண்மையில் பரிவாதினி அமைப்பின் லலிதா ராம், சுவாமிமலை சரவணன் ஆகியோரின் முன்னெடுப்பில் தவில் மேதை திருநாகேஸ்வரம் டி.ஆர். சுப்பிரமணியனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
விருது பெற்ற டி.ஆர்.எஸ்ஸை அவரின் சமகாலத்து கலைஞரான தஞ்சாவூர் தவில் ஆசான் டி.ஆர்.கோவிந்தராஜன் மனம் திறந்து பாராட்டிப் பேசினார். கல்வி நிறுவனங்களில் இசை ஆசிரியர்களாக இருந்த பலரின் பெயர்களையும் குறிப்பிட்டு, தவில் இசையை குருகுலம் வழியாக சொல்லிக்கொடுத்த தோற்றுவாயான பசுபதி பிள்ளையும் நிறைவாக குருகுலம் வழியாக எண்ணற்ற சீடர்களுக்கு உணவுடன் இசையைக் கற்றுக்கொடுத்த டி.ஆர்.எஸ்ஸும்தான் எந்த நிறுவனத்தையும் சேராதவர்கள் என குறிப்பிட்டது நெகிழ்ச்சியாக இருந்தது.
“பல்கலை.க்கு தவில் பாடங்களை வரையறுத்துக் கொடுத்தது டி.ஆர்.எஸ்.தான். அது பல்கலை.க்கு பெருமையான விஷயம். அவருக்குள்ளேயே லய தவம் செய்து ஒரு சமநிலையுடன் யோக நிலையில் எப்போதும் இருப்பவர் டி.ஆர்.எஸ்.” என்றார் சிறப்பு விருந்தினராக விழாவில் பங்கேற்ற வீணை காயத்ரி.
“பல முனைவர் பட்ட ஆய்வுகளுக்கு டி.ஆர்.எஸ். எனும் தவில் மேதையின் லய வின்யாசங்கள், கற்பனைகள், நுணுக்கங்கள் வித்தாக இருந்திருக்கின்றன. இன்னும் பல முனைவர்களை உண்டாக் குவதற்கான சங்கதிகள் அவரின் படைப்பு களில் நிறைந்திருக்கின்றன.”
என்றார் தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறையின் துணை இயக்குநர் பி.ஹேமநாதன். ரேவதி ராகத்தில், சின்னமனூர் டாக்டர் ஏ. விஜய்கார்த்திகேயன் இயற்றிப் பாடிய `லய பிரம்மம் எங்கள் சுப்பிரமணியம்; திருநாகேஸ்வரம் தந்த லயபிரம்மம் எங்கள் சுப்பிரமணியம்' என்னும் பாடல் விழாவுக்கு முத்தாய்ப்பாக அமைந்தது.