

தமிழர்களின் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டைக்கு அருகே உள்ள கிருஷ்ணாபுரம் விளங்குகிறது. மதுரை நாயக்கர் ஆட்சி பாண்டிய நாட்டில் சிற்பக்கலை வளர்ச்சியில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. இதற்கு மேற்கே பாபநாசம் தொடங்கி கிழக்கே சேர்ந்த பூமங்கலம் வரை உள்ள நதிக்கரை நாகரிகம் வளர்ந்த தலங்களில் அமைந்த பெருங்கோயில்களே சாட்சி.
மதுரை நாயக்கர் ஆட்சியில் முதல் மன்னரான விஸ்வநாத நாயக்கரின் மகன் கிருஷ்ணப்ப நாயக்கர் (பொ.ஆ.1563-72) என்பவர் புதிதாக ஓர் ஊரை உருவாக்கி கிருஷ்ணாபுரம் என்று பெயரிட்டார். முன்னதாக இப்பகுதி திருவேங்கடராயபுரம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. ஐதீகப்படி ஊருக்கு மேற்கே மூன்று பெரிய சுற்றுக்களுடன் ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை ஸ்ரீ வெங்கடாசலபதி பெருமாள் கோயிலை எழுப்பினார்.
வாசலில் 5 நிலை ராஜகோபுரம் உட்பட முழுகோயிலையும் இவரே கட்டினார். பிரம்மோற்சவம் நடைபெற ஏதுவாக நான்கு மாட வீதிகளையும் உருவாக்கினார். ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 11 நாட்கள் நடைபெறும் வண்ணம் பிரம்மோற்சவம் ஏற்படுத்தப்பட்டது. அது சமயம் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்துக்காக கலைநயமிக்க ஊஞ்சல் மண்டபம் ஒன்று கட்டப்பட்டது.
புரட்டாசி திருவோணத்தில் கொடியேற்றத்துடன் 10 நாள் விழா தொடங்கும். பத்தாம் நாள் விழாவையொட்டி காலை ரத உற்சவமும், மாலை திருக்கல்யாண வைபவமும் நடைபெறும். பதினோராம் நாள் கோயிலுக்கு எதிரே உள்ள நீராழி மண்டபத்துடன் கூடிய தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். யாகசாலை மண்டபத்தின் மேற்கே சொர்க்க வாசல் உள்ளது.
வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும் பத்து நாட்கள் மட்டும் பரமபத வாசல் திறந்திருக்கும். ஜீயர் மண்டபத்தில் கேரள கோயில்களில் உள்ளது போல் விளக்கு ஏந்தி நிற்கும் பாவை சிற்பங்கள் உள்ளன. ராஜகோபுர வாசல் தாண்டியதும் மணிமண்டபம் உள்ளது. இதன் வலதுபுறம் வீரப்பநாயக்கர் மண்டபம் உள்ளது. இதனை பிரம்மோற்சவ மண்டபம் என அழைக்கின்றனர். இங்குள்ள கலைநயமிக்க சிற்பங்கள் ஒவ்வொரு கதை சொல்லும் விதமாக அமைந்துள்ளன.
கொடிமரத்தின் தெற்கே வசந்த மண்டபம் உள்ளது. உக்கிரமான கோடை வெயில் நாட்களில் சதுர வடிவில் அமைந்துள்ள இம்மண்டபத்தைச் சுற்றி நீர் நிரப்பி மைய மண்டபத்தில் சுவாமியை எழுந்தருளச் செய்வது வழக்கம். இதே அமைப்பில்தான் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு வாசல் எதிரே புதுமண்டபம் அமைந்துள்ளது.
கருவறை மூலவராக 4அடி உயர கருங்கல் விக்கிரகமாக நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை ஸ்ரீவெங்கடாசலபதிப் பெருமாள் நான்கு கரங்களுடன் சேவை சாதிக்கிறார். மூலவர் வெங்கடாசலபதி மேல் இருகரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியும், கீழ் வலது கரம் அபய ஹஸ்தம், கீழ் இடது கரம் கடஹஸ்த முத்திரை காட்டியும் சேவை சாதிக்கிறார்.
மூலவருக்கு முன்பாக அதே கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாசப் பெருமாள், அலமேலு மங்கை, பத்மாவதி ஆகியோரது உற்சவர் விக்கிரகங்கள் உள்ளன. இந்த சந்நிதியில் திருமணத் தடை நீங்க, சந்தான பாக்கியம் பெற, கணவன் மனைவி பிரச்சினைகள் தீர சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
உள்சுற்று முழுவதும் திருமாளிகை அமைப்பில் மண்டபமாக கட்டப்பட்டுள்ளது. இரண்டாம் சுற்றில் கலைநயமிக்க 26 தூண்கள் தாங்கிய மண்டபத்துடன் கூடிய தனி சந்நிதியில் அலர்மேல்மங்கைத் தாயாரும், பத்மாவதித் தாயாரும் சேவை சாதிக்கின்றனர். இரண்டாம் சுற்று முழுவதும் வாசமலர்கள் பூத்துக் குலுங்கும் நந்தவனம் அமைந்துள்ளது.
கோயில் கட்டப்பட்ட காலத்தில் 5 கால நித்ய பூஜைகளும், மூன்று பிரகாரங்களும் பிரம்மாண்டமாய் இருந்தன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மூன்றாம் பிரகாரம் இடிக்கப்பட்டது. அந்த கருங்கற்களைக் கொண்டு பாளையங்கோட்டையில் தற்போது உள்ள கோட்டை மதில் கட்டப்பட்டது.
வைகுண்ட ஏகாதசி தினத்தில் காலை பெருமாள் சயனக் கோலமும், மாலை பரமபத வாசல் திறப்பும் நடைபெறுகிறது. தை வெள்ளிக்கிழமைதோறும் தாயார்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். தை ரோகிணியன்று வருஷாபிஷேகம் நடைபெறும்.
பங்குனி உத்திரம் ஒருநாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. ஐப்பசி தீபாவளியை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய்க் காப்பு நடைபெறும். திருக்கார்த்திகை தீப நாளில் சுவாமி புறப்பாடு நடைபெறும். தல விருட்சம் செண்பகம். தென்கலை வழிபாட்டு முறை பின்பற்றப்படுகிறது.
பந்தல் மண்டபம், ரெங்கமண்டபம், நாங்குனேரி ஜீயர் மண்டபம் என கலையழகு மிக்க சிற்பத்தூண்கள் தாங்கிய மண்டபங்கள் தமிழர்களின் சிற்பக் கலாச்சார மேன்மையை உலகுக்கு உணர்த்தும் வண்ணம் சான்றுகளாய் நிற்கின்றன. பந்தல் மண்டபத் தூண்களில் புஷ்பபொய்கை, பலகை மற்றும் வரிக்கோலம் ஆகிய கட்டிடக்கலை நளினத்தை எடுத்துச்சொல்லும் சிறப்புஅம்சங்கள் உள்ளன.
தற்போது தினமும் நான்கு கால பூசை நடைபெறுகிறது. திருத்தேர், தெப்பக்குளம், அன்னதானக்கூடம் ஆகிய திருப்பணிகளுக்கான பூர்வாங்க வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி–திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் பாளையங்கோட்டை தாண்டியதும் 10 கிமீ தொலைவில் கிருஷ்ணாபுரம் உள்ளது.