சமூக சீர்திருத்தச் செம்மல் பகவத் ராமானுஜர்

சமூக சீர்திருத்தச் செம்மல் பகவத் ராமானுஜர்
Updated on
3 min read

ஆன்மநெறி சிந்தனை வழியாக பக்திநெறியை வளர்த்து, வாழ்க்கையில் அமைதி, அன்பு, கருணை, ஒழுக்கம் ஆகியவற்றை தழைக்கச் செய்த ஞானிகளுள் ஒருவர் பகவத் ராமானுஜர். தேவையற்ற சமுதாயக் கட்டுப்பாடுகள், மூடப் பழக்க வழக்கங்களை உடைத்தெறிய தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு, சமுதாய சீர்திருத்தங்களை செயல்படுத்தினார்.

ஸ்ரீபெரும்புதூரில் வசித்து வந்த ஆசூரி கேசவாசாரியார் - காந்திமதி தம்பதிக்கு ஆங்கில ஆண்டு 1017, சித்திரை 12-ம் தேதி திருவாதிரை நட்சத்திரத்தில் வளர்பிறை பஞ்சமி தினத்தில் ஆண் குழந்தை பிறந்தது. தன் சகோதரி காந்திமதியின் குழந்தை, லட்சுமணரின் அவதாரம் என்பதை உணர்ந்த பெரிய திருமலை நம்பி, குழந்தைக்கு ராமானுஜன் (ராமனுக்கு அனுஜன் - இளையவன்) என்று பெயரிட்டார்.

தந்தையிடம் ஆரம்பக் கல்வி கற்கத் தொடங்கிய ராமானுஜர், தனது 15-வது வயதுக்குள் அனைத்து கல்விகளையும் கற்றுத் தேர்ந்தார். தனது 16- வது வயதில் தஞ்சமாம்பாள் என்ற நங்கையை மணந்தார். தனது கல்வியைத் தொடரும் நோக்கில், தாயார், மனைவியுடன் காஞ்சிபுரத்தை அடைந்த ராமானுஜர், திருப்புட்குழியில் அத்வைதவைணவரான யாதவப் பிரகாசரிடம் கல்வி கற்கத் தொடங்கினார்.

சில கருத்து வேறுபாடுகள் காரணமாக, அவரிடம் இருந்து விலகினார் ராமானுஜர். தனது தாயின் விருப்பப்படி, காஞ்சி பேரருளாளனுக்கு ஆலவட்டம் (விசிறி) வீசும் கைங்கர்யம் செய்யும் திருக்கச்சி நம்பிகளை அடைந்து, அவர் நியமனப்படி, பேரருளாளனின் திருமஞ்சனத்துக்கு நீர் கொண்டு வரும் பணியை செய்து வந்தார்.

ஸ்ரீரங்கத்தில் வைணவ பரமாச்சாரியார் ஆளவந்தாரின் உடல்நலம் குன்றியதால், தனது சீடரான பெரிய நம்பியை அழைத்து, “வைணவ ஆச்சாரிய பீடத்தை அலங்கரிக்க தகுதியானவராக இருக்கும் ராமானுஜரை ஸ்ரீரங்கம் அழைத்து வரவும்” என்று பணித்தார்.

அதன்படி ஸ்ரீராமானுஜர் ஸ்ரீரங்கத்துக்கு வருகை புரிந்தார். ஆனால் ராமானுஜர் வருவதற்குள் 3 விரல்களை மடக்கியபடி, ஆளவந்தார் ஆச்சாரியன் திருவடி அடைந்தார்.

ஆளவந்தாரின் மூன்று நோக்கங்களாக வேதவியாசர், குருநாதரின் தந்தை பராசரர் பெயர்களை வைணவ குழந்தைகளுக்கு சூட்டுதல், நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு விரிவுரை எழுதுதல், வியாசரின் பிரம்மசூத்திரத்துக்கு - விசிஷ்டாத்வைதத்துக்கு உரை எழுதுதல் ஆகியன குறிப்பிடப்படுகின்றன. அவற்றை நிறைவேற்ற ராமானுஜர் உறுதி கொள்கிறார்.

காஞ்சிபுரம் வந்தடைந்து திருக்கச்சி நம்பிகளை குருவாக ஏற்க எண்ணிய ராமானுஜர், சில சந்தேகங்களை பெருமாளிடம் கேட்டருள வேண்டுகிறார். அவரும் பெருமாளைக் கேட்டு, பெருமாள் கூறியதாக 6 வார்த்தைகளைக் கூறுகிறார்.

அவை, நானே முழுமுதற் கடவுள், ஜீவாத்மாவில் இருந்து பரமாத்மா வேறுபட்டது, சரணாகதியே இறைவனை அடைய முக்தி நெறி, இறைவனை தஞ்சம் அடைந்தவர்கள் இறக்கும் சமயத்தில் அவரை நினைக்க வேண்டிய அவசியம் இல்லை, உடலை விட்டு உயிர் பிரிந்ததும் நேரடியாக முக்தி, பெரிய நம்பியை ராமானுஜர் குருவாக ஏற்க வேண்டும் என்பனவாகும்.

அதன்படி பெரியநம்பியையும், அவரது மனைவி விஜயாம்பாளையும் காஞ்சிபுரம் அழைத்து வந்து, பெரிய நம்பியிடம் இருந்து தமிழ்வேதம், திவ்யபிரபந்தம் முதலானவற்றைக் கற்கிறார் ராமானுஜர். இந்நிலையில் திருக்கச்சி நம்பிகளை உதாசீனப்படுத்தியது, வைணவர் ஒருவருக்கு உணவு அளிக்காதது, பெரியநம்பியின் மனைவியுடன் சண்டையிட்டது போன்ற விஷயங்களால், தன் மனைவி மீது கோபம் கொண்ட ராமானுஜர் அவரைவிட்டு விலக எண்ணுகிறார்.

வரதராஜர் கோயிலுக்கு வந்து இறைவனை வேண்டி, துறவறம் மேற்கொள்கிறார் ராமானுஜர். பக்தர்கள் கட்டிக் கொடுத்த மடத்தில் அமர்ந்து பக்தி பிரச்சாரங்களில் ஈடுபடுகிறார். அன்று முதல் அவரது சகோதரி மகன் தாசரதி ராமானுஜரின் சீடராக சேர்கிறார்.

அவருக்கு முதலியாண்டான் என்ற பெயர் சூட்டப்படுகிறது. காஞ்சிபுரம் அருகே உள்ள கூரம் கிராமத்தைச் சேர்ந்த திருமறுமார்பான் என்பவர் தனது செல்வம் அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு, மனைவியுடன் சேர்ந்து ராமானுஜரை சந்தித்து துறவு மேற்கொள்கிறார். அவருக்கு கூரத்தாழ்வான் என்ற பெயர் சூட்டப்படுகிறது.

ஸ்ரீராமானுஜரின் வைணவ சித்தாந்த உரையால் ஈர்க்கப்பட்ட யாதவப் பிரகாசரின் தாயார், தனது மகனை ராமானுஜரின் சீடராக ஆகுமாறு பணிக்கிறார். ஆச்சாரியரே சீடரானது உலகிலேயே ஓர் அற்புதமாகும். காளஹஸ்தி, திருமலை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களுக்கு யாத்திரை சென்ற ராமானுஜர், ஸ்ரீரங்கம் வந்தடைந்து, அங்கு கோயிலில் பழுதான இடங்களை செப்பனிட்டு பூஜை முறைகளை மாற்றுகிறார்.

பெரியநம்பியிடம் இருந்து த்வயம், திருமலையாண்டானிடம் இருந்து திருவாய்மொழி, பெரிய திருமலைநம்பியிடம் இருந்து ராமாயணப் பொருள் விளக்கம், திருவரங்கப் பெருமாள் அரையரிடம் இருந்து சரமோபாயம், திருகோஷ்டியூர் நம்பியிடம் இருந்து எட்டெழுத்து மந்திரம் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார் ராமானுஜர்.

யக்ஞமூர்த்தி என்ற பண்டிதரிடம் 18 நாட்கள் வாதப் போரில் ஈடுபட்டு அவரை வென்றார் ராமானுஜர். செல்லும் இடங்களில் எல்லாம் திருப்பாவை பாசுரங்கள் பாடிச் செல்வார். ஸ்ரீரங்கம் கோயிலில் ஆண்டு விழாக்கள், மாத திருவிழாக்கள் பலவற்றுக்கு ஏற்பாடுகள் செய்தார். கூரத்தாழ்வான் உதவியுடன் பிரம்மசூத்திரத்தின் விளக்கவுரையை எழுதி முடித்தார்.

தனது 74 சீடர்களின் விருப்பத்தை ஏற்று, பாரத தேசம் முழுவதும் வைணவ நெறியைப் பரப்ப யாத்திரை மேற்கொண்டார். செல்லும் வழியில் தான் சந்தித்த பஞ்சமர் குலப் பெண்ணுக்கு தக்க உபதேசங்கள் வழங்கி வைணவ சமயத்தில் சேர்க்கிறார்.

அனைத்து கோயில்களிலும் ஆழ்வார்களின் தமிழ் பாசுரங்களையும் ஒலிக்கச் செய்தார். சாதி வேறுபாட்டைக் களையும் வகையில் வைணவத்தில் யாவருக்கும் உரிமை உண்டு என்று அறிவித்தார். ராமானுஜரின் சீர்திருத்தங்களை ஏற்காதவர்கள் அவரை சிறைபிடிக்க முயன்றனர்.

தனது திரைமறைவு வாழ்க்கையின்போது, தொண்டனூரை அடுத்த யதுகிரி (திருநாராயணபுரம் - மேல்கோட்டை) என்ற ஊரில் திருமாலுக்கு கோயில் எழுப்புகிறார். சீடர்களின் விருப்பப்படி தன்னைப் போன்ற ஒரு படிமத்தை செய்ய எண்ணுகிறார். ராமானுஜர் 1096-ம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறினார். 1118-ம் ஆண்டு, (22 ஆண்டுகளுக்குப் பிறகு) ஸ்ரீரங்கம் திரும்பியிருந்தார்.

சீடர்களின் விருப்பத்தின்படி ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜரின் விக்கிரகம் நிறுவப்பட்டது. 1137-ம் ஆண்டு அவரது 120-வது வயதில் ஒரு நாள் தான் இவ்வுலகை விட்டு விடைபெறும் நாளை உணர்ந்த ராமானுஜர், தனது சீடர்களை நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல்களைப் பாடப் பணித்தார். ஆளவந்தாரின் திருவுருவத்தை தியானித்தபடி ராமானுஜர் திருநாடு ஏகினார்.

1,007-வது ராமானுஜர் ஜெயந்தி: ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் ராமானுஜர் ஜெயந்தி உற்சவம் கொண்டாடப்படும். ராமானுஜர் தினம் ஒரு வாகனத்தில் ஏறி, வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

கந்தப்பொடியை (மஞ்சள்பொடி) ராமானுஜர், உறவினர், நண்பர்கள் மீது தூவியும் பஜனை பாடல்கள் பாடியும் பக்தர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இந்த ஆண்டு ஸ்ரீராமானுஜரின் 1,007-வது ஜெயந்தி விழா மே 12-ம் தேதி கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in