

வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் (அல்+ இலாஹ்–The + God) தவிர வேறுயாரும் இல்லை என்று முழுமுதலாக உறுதியேற்பவரே இஸ்லாமியர். அல்லாஹ் என்றால் இறைவன் எனப் பொருள். அளவில்லா கருணையும் நிகரில்லா அருள் குணமும் கொண்டவன் அல்லாஹ்.
குணங்களை அடிப்படையாகக் கொண்டு 100 பெயர்களால் இறைவன் அழைக்கப்படுகிறான். அரசர்களுக்கெல்லாம் அரசன் என்பதில் தொடங்கி, மிகப் பொறுமையாளன் என்பது வரை இறைவனின் குணங்களைப் பொறுத்து அவன் அறியப்படுகிறான்.
ஆனால் அவன் நிறம் என்ன? உருவம் எத்தகையது? பாலினம் என்ன? எந்த இனம்? அவனை வரையறை செய்ய முடியுமா?
காலம்காலமாகப் பல தரப்பட்ட கடவுள்களை வழிபட்டுவந்த அரேபியர்கள் அவற்றை விடுத்து, ஒரே இறைவனை வழிபட வேண்டும் என அண்ணலாரால் அழைப்பு விடுக்கப்பட்டனர். அரேபியர்களில் குறிப்பாக குறைஷி குலத்தவர், அதனைக் கடுமையாக எதிர்த்தனர்.
ஒரே இறைவனை வழிபட வேண்டும் என்றால் அத்தகைய இறைவன் எப்படி இருப்பான்? எனக் கேள்வி எழுப்பினர். இதற்கு திருக்குர்ஆனில் இறைவனே பதிலளிக்கிறான். அத்தியாயம் 112 அல் இக்லாஸில், “அவன் யாருடைய சந்ததியும் இல்லை. அவனுக்கு யாரும் சந்ததி இல்லை” என்ற வசனத்தின் மூலம், மனித கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவன் இறைவன் என்பது உணர்த்தப்படுகிறது.
“எந்தப் பொருளும் அவனுக்கு ஒப்பானதாய் இல்லை” (திருக்குர்ஆன் 42:11) என்ற வசனம் சர்வ வல்லமை கொண்ட ஏக இறைவனுக்கு நிகரானது என்று எதுவும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறது. உருவம், நிறம், பாலினம், குலம், வர்க்கம் போன்ற வரையறைக்குள் அவனை அடக்க முடியாது.
இத்தகைய ஏகனுக்கு இணை வைப்பது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டது ஆகும். இறைவன் ஒருவனே என்று ஏற்றுக் கொண்டு திருமறை கூறும் வாழ்வியல் நெறிகளை பின்பற்றி வாழும்போது மனிதர்கள் தங்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்துக் கொள்ள வாய்ப்பே இல்லை. இஸ்லாத்தின் அழைப்பும் அதை நோக்கியதுதான்.
உருவ வழிபாடு வேண்டாம்: பிரபஞ்சத்தையும் சூரியனையும் சந்திரனையும் வானையும் பூமியையும் நீரையும் நெருப்பையும் கடலையும் மனிதனையும் இன்னபிற உயிரினங்களையும் படைத்து மறைவானவற்றையும் நன்கறியும் ஆற்றல்மிகு இறைவனை ஓர் உருவத்தில் அடக்கி வழிபடுவது இஸ்லாத்தில் கூடாத ஒன்றாக இருக்கும்பட்சத்தில், இறைத் தூதர்களின் உருவ வழிபாடும் ஊக்குவிக்கப்படவில்லை. எல்லா இறைத் தூதர்களும் மனிதர்கள்தான். ‘நான் தூதுச் செய்தியைக் கொண்டுவரும் ஒரு மனிதரேயன்றி வேறில்லையே’ எனத் தன்னைப் பற்றி அண்ணல் திருமறையில் தன்னடக்கத்துடன் கூறுகிறார்.
ஏற்றத் தாழ்வை உருவாக்கும் உருவ வழிபாட்டைக் கைவிடும்படி மக்களிடம் மன்றாடிய அண்ணல் தன் வீட்டில் உள்ள பொருட்களில் கூட உருவங்கள் வரையப்பட்டிருப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை என அன்னை ஆயிஷா கூறியதாக பல ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உருவம் வரைந்தவர் அதற்கு உயிர் கொடுக்கும் ஆற்றல் அற்றவர். அவ்வுருவமும் ஆற்றல் அற்றது. ஒரு தானிய விதையையோ, ஓர் அணுவையோ படைக்கும் ஆற்றலும் அவரிடம் இருக்காது. தன்னைப் போலப் படைக்க நினைத்து அதில் தோற்றுப் போகும் மனிதன், அக்கிரமக்காரன் என இறைவனால் விளிக்கப்படுகிறான்.
இவ்வாறு போலியாக உருவங்களை வரைந்து அதனை இறைவனுக்கு இணை வைத்து ஆராதிக்கும் நிலைக்கு எடுத்துச் செல்லும் மனிதர்கள் பேராற்றல் மிக்க ஏக இறைவனை மறந்து விடுகின்றனர். இச்செயல் மனிதர்களை மீண்டும் சமநிலையற்ற மூடர்களாக்கும் என்பதே இதன் அடிப்படைக் கருத்து.
உருவப் படங்கள், போலச்செய்தல் சாதாரணமாகப் புழங்கும் இன்றைய நவீன உலகத்தில் அவை தவிர்க்க முடியாதவையாகிவிட்டன. இருந்தாலும் அவற்றை எக்காரணத் துக்காகவும் வணக்கத்துக்குரிய ஏக இறைவனுக்கு இணைவைக்கக் கூடாது.
அடக்கஸ்தலங்கள் வணக்கத்துக்கு உரியவையல்ல: அண்ணலின் மனைவி அன்னை உம்மு சலமா எத்தியோப்பியாவில் தான் கண்ட அடக்கஸ்தலத்தில் வரையப்பட்டிருந்த உருவப் படங்களைப் பற்றி அண்ணலிடம் தெரிவித்தார். அப்போது அண்ணல், இறந்தவர்களுக்கு வணக்கஸ்தலங்களை கட்டி அவற்றில் அவர்களின் உருவப் படங்களை வைப்பவர், “மறுமை நாளில் அல்லாஹ்வின் சன்னதியில் அவர்கள்தான் படைப்பினங்களிலேயே மிகவும் கெட்டவர்களாகக் கருதப்படுவர்” (ஸஹீஹுல் புகாரி 434) என்று பதிலளித்தார்.
மேலும் தன் மரண நேரம் நெருங்கிக் கொண்டிருந்தபோது அண்ணல் நபி, தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கிக் கொண்டவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் (புகாரி 435) எனக் கூறினார். இதன் மூலம் தன் அடக்கஸ்தலத்தை வணங்குதற்குரியதாக மாற்றாமலிருக்க அவர் தன்மக்களை எச்சரித்திருந்தார். உலக மக்களை நேர்வழியில் மடைதிருப்பிய மாமனிதர் தன் உருவத்தால் அல்ல நற்செயல்களால் இன்னும் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
(நிறைவு)
- bharathiannar@gmail.co