

முன்னொரு காலத்தில் பாபிலோன் நாட்டை ஆண்ட நேபுகாத்நேசர் என்னும் அரசன் மாபெரும் பொற்சிலை ஒன்றைச் செய்வித்து, எக்காளம், நாதசுரம், யாழ், கின்னரம், வீணை, பைக்குழல் முதலிய எல்லா வகை இசைக் கருவிகளும் ஒலிக்கத் தொடங்கிய அந்த நொடியில், எல்லோரும் தாழவிழுந்து விழுந்து பொற்சிலையைப் பணிந்து தொழ வேண்டும் என்று நாடு முழுதும் அறிவித்தான்.
மேலும், எவராகிலும் பணிந்து தொழவில்லையெனில், அவர்கள் அந்நேரமே தீச்சூளையில் தூக்கிப் போடப்படுவார்கள்” என்று கூறி முரசறைந்தான். ஆகவே, இசைக் கருவிகள் ஒலிக்கத் தொடங்கியவுடன், எல்லா மக்களும் தாழவீழ்ந்து நேபுகாத் நேசர் நிறுவிய பொற்சிலையைப் பணிந்து தொழுவார்கள்.
அப்போது சிலர் அரசனிடம் வந்து, அரசரே! பாபிலோன் நாட்டின் பொறுப்பாளர்களாக சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ என்னும் யூதர்களை நீர் நியமித்தீர் அல்லவா? அவர்கள் உமது கட்டளையை மதிக்காமல், உம் தெய்வங்களை வணங்காமல், நீர் நிறுவின பொற்சிலையைப் பணிய மறுத்து விட்டார்கள்” என்று குற்றம் சாட்டினார்கள்.
உடனே நேபுகாத்நேசர் கோபம் கொண்டு, சாத்ராக்கையும், மேசாக்கையும், ஆபேத்நெகோவையும் பிடித்து வரும்படி கட்டளையிட்டான். “சாத்ராக்கு! மேசாக்கு! ஆபேத்நெகோ! நீங்கள் மூவரும் என் தெய்வங்களை வணங்கவில்லை என்பதும், நான் நிறுவிய பொற்சிலையைப் பணியவில்லை என்பதும் உண்மைதானா? இப்போதே இசைக் கருவிகள் ஒலிக்கக் கேட்டவுடன், நீங்கள் தாழவிழுந்து என் சிலையைப் பணிந்து கொள்ளாவிட்டால் அந்த நொடியிலேயே எரியும் தீச்சூளையில் தூக்கிப் போடப்படுவீர்கள். உங்களை என் கைகளிலிருந்து தப்புவிக்கக் கூடிய தெய்வம் உண்டோ?” என்றான்.
அவர்களோ அரசனிடம், “இதைக் குறித்து நாங்கள் உமக்கு மறுமொழி கூறத் தேவையில்லை. அப்படியே எது நிகழ்ந்தாலும், நாங்கள் வழிபடும் எங்கள் கடவுள், எரியும் தீச்சூளையினின்று எங்களை மீட்க வல்லவர்.
அவரே எங்களை உம் கையினின்றும் விடுவிப்பார். அப்படியே அவருக்கு மனமில்லாமல் போனாலும், அரசரே! நாங்கள் உம்முடைய தெய்வங்களை வழிபடமாட்டோம். நீர் நிறுவிய பொற்சிலையையும் நாங்கள் தொழப்போவதில்லை. இது உமக்குத் தெரிந்திருக்கட்டும்” என்றார்கள்.
இதைக் கேட்ட அரசன் அவர்கள்மீது கோபம் கொண்டு, தீச்சூளையை வழக்கத்தைவிட ஏழு மடங்கு மிகுதியாகத் சூடாக்கும்படி கட்டளையிட்டான். பின்னர் மூவரையும் கட்டி, எரியும் தீச்சூளைக்குள் தூக்கிப் போடுமாறு தன் படைவீரருக்கு கட்டளையிட்டான். அவ்வாறே அந்த வீரர்கள் அவர்களை கட்டி, எரியும் தீச்சூளைக்குள் தூக்கிப் போட்டார்கள்.
அப்போது அரசன் வியப்புற்று தன் அமைச்சரிடம், “மூன்று பேரைத்தானே கட்டி நெருப்பினுள் எறிந்தோம்!” என்றான். “ஆம் அரசரே” என்று அவர்கள் விடையளித்தனர். அதற்கு அவன், “கட்டவிழ்க்கப்பட்டவர்களாய் நெருப்பின் நடுவில் 4 பேர் உலவுகிறதை நான் காண்கிறேன்! அவர்களுக்கோ ஒரு தீங்கும் நேரவில்லையே! மேலும் நான்காவது ஆள் தெய்வ மகன் போல் தோன்றுகிறானே!” என்றான்.
உடனே நேபுகாத்நேசர் எரியும் தீச்சூளையின் வாயிலருகில் வந்து நின்று, “உன்னதக் கடவுளின் ஊழியர்களாகிய சாத்ராக்கு! மேசாக்கு! ஆபேத்நெகோ! வெளியே வாருங்கள்” என்றான். அவ்வாறே மூவரும் நெருப்பைவிட்டு வெளியே வந்தனர்.
அனைவரும் கூடிவந்து, அந்த மனிதர்களின் உடலில் தீப்பட்ட அடையாளமே இல்லாமலும் அவர்களது தலைமுடி கருகாமலும் அவர்களுடைய ஆடைகள் தீப்பற்றாமலும் நெருப்பின் புகை நாற்றம் அவர்களிடம் வீசாமலும் இருப்பதைக் கண்டார்கள்.
அப்பொழுது நேபுகாத்நேசர், “சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரின் கடவுள் புகழப்படுவாராக! தங்கள் கடவுளைத் தவிர வேறெந்த தெய்வத்தையும் பணிந்து தொழ மறுத்து, அரசனது கட்டளையையும் பொருட்படுத்தாமல், அவர்மேல் நம்பிக்கை வைத்துத் தங்கள் உடலைக் கையளித்த அவருடைய ஊழியர்களை அவர் தம் தூதரை அனுப்பி மீட்டருளினார்.
ஆதலால் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரின் கடவுளுக்கு எதிராக யாரும் பழிச்சொல் சொல்லக் கூடாது. இதுவே என் ஆணை! ஏனெனில், இவ்வண்ணமாய் மீட்கும் ஆற்றல் படைத்த கடவுள் வேறெவரும் இல்லை” என்றான். பிறகு அரசன் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோர்க்குப் பாபிலோனின் மாநிலங்களில் பெரும் பதவி அளித்துச் சிறப்புச் செய்தான்.
- merchikannan@gmail.com