நினைத்ததை நடத்தி கொடுக்கும் ஜம்மு ரகுநாத் கோயில்

நினைத்ததை நடத்தி கொடுக்கும் ஜம்மு ரகுநாத் கோயில்
Updated on
2 min read

யூனியன் பிரதேசம் ஜம்முவில், நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள ரகுநாத் கோயில் மிகவும் பிரம்மாண்ட அளவில் அமைந்துள்ள ராமபிரானுக்கான கோயில் ஆகும். பிரயாக்கின் தெற்கு கர்வாலில் தேவ் பகுதியிலும், ரிஷிகேஷிலும், குலூ பகுதியிலும் ரகுநாத் கோயில்கள் காணப்படுகின்றன.

ஜம்மு ரகுநாத் கோயில், மன்னர் குலாப் சிங், அவரது மகன் ரன்வீர் சிங் ஆகியோரால் கட்டப்பட்டுள்ளது. குலாப் சிங்கின் தந்தை ஜகந்நாதர் தீவிர ராம பக்தராக இருந்தார். அவரது விருப்பத்தின் பேரின் குலாப் சிங் 1835-ம் ஆண்டு ராமருக்காக ஒரு கோயிலைக் கட்டத் தொடங்கினார். கட்டுமானப் பணிகள் தொடங்கி பல ஆண்டுகள் கழித்து 1860-ம் ஆண்டு ரன்வீர் சிங் இக்கோயிலைக் கட்டி முடித்தார்.

ராஜ புத் மற்றும் முகலாய கட்டிடக் கலையின் ஐக்கியமாக, மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இக்கோயில் கோட்டை போன்ற முன்வாசலைக் கொண்டுள்ளது. உட்புறத்தில் நுழையும்போது இருபுறங்களிலும் தகடுகளில் வரைந்த ஓவியங்களைக் காணலாம். இவை ராமாயணம், மகாபாரதம், விஷ்ணு புராண காட்சிகளை பிரதிபலிப் பவையாக உள்ளன. கோயில் கூரையிலும் எண்ணற்ற ஓவியங்களைக் காணலாம். தூண்களில் இந்து மத தெய்வங்களின் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன.

கோயில் கருவறையில் எண்கோண வடிவில் 1.5 மீட்டர் அளவு உயர்த்தப்பட்ட மேடையில் ராமபிரான், சீதா பிராட்டி, லட்சுமணர் நின்ற கோலத்தில் அருள்பாலிக் கின்றனர். ராமபிரான் விக்கிரகம் கருப்பு சலவைக் கல்லாலும், சீதை, லட்சுமணர் சிலைகள் வெள்ளை நிற சலவைக் கல்லாலும் ஆனவை. மூவரும் வடநாட்டு பாணியில் ஆடை, அலங்காரம் செய்யப்பட்டுள்ளனர். கருவறைக்கு மேல் உள்ள கோபுரம் ஒடிசா பாணியில் அமைக்கப்பட்டுள்ளது.

கருவறையின் 3 பக்கங்களிலும் தங்கக் கவசம் சாற்றப்பட்டுள்ளது. காலை, மாலை இருவேளையும் ராமபிரானுக்கு ஆர்த்தி சேவை நடைபெறுகிறது. மூலவர் உட்பட 7 சந்நிதி விக்கிரகங்களும் அயோத்தியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. சிவபெருமான், சூரியனுக்கு தனி சந்நிதி உண்டு. கோயில் பிரகாரத்தில் ஹனுமன், கணேஷ், விஷ்ணு, துர்கை, கிருஷ்ணர், சிவபெருமான், சத்ய நாராயணர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

கோயில் நுழைவாயில் அருகே ஹனுமன் அருள்பாலிக்கிறார். அவருக்கு எதிர்புறம் மன்னர் ரன்வீர் சிங் சிலை நிறுவப்பட்டுள்ளது. பிரகாரத்தின் மூன்று பக்கங்களிலும் ஏராளமான சாளக்கிராமங்கள் உள்ளன. கருவறை தவிர மற்ற சந்நிதி கோபுரங்கள் தங்க முலாம் பூசப்பட்டுள்ளன.

கோயிலில் ராம ஜென்மாஷ்டமி, நவராத்திரி, தீபாவளி உற்சவங்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. ராம நவமி தினத்தில் ராமபிரானும், சீதாபிராட்டியும் பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா காண்கின்றனர். மற்றொரு பல்லக்கில் கிருஷ்ணர் - ராதா எழுந்தருளி வீதியுலா வருகின்றனர்.

இது ஜம்முவில் கடைபிடிக்கப்படும் வழக்கம். நவராத்திரியில் துர்கைக்கு சிறப்பு ஆராதனைகளும், தீபாவளி தினத்தில் ராமபிரான் அயோத்தி திரும்பியதை நினைவுகூரும் வகையில் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன. ஜம்மு ரயில் நிலையத்தில் இருந்து 15 நிமிடங்களில் கோயிலை அடையலாம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in